
இந்தியாவில் வேலை நேரத்திற்கான முழக்கமாக, வேலைப் பாதுகாப்பிற்காக, உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தங்கள் வெடித்தன. போராட்டங்கள் தொடர்ந்தன. வேறு வழியின்றி பிரிட்டிஷ் அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களை உருவாக்கத் தொடங்கியது.
1900 க்குப் பிறகு தொழிலாளி வர்க்க இயக்கம் இந்தியா முழுவதும் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத துறைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒருங்கிணைத்தது. ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கம் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியது. இந்திய விடுதலைக்காகப் போராடியது. 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாளன்று ஏஐடியுசி துவங்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டு ஏஐடியுசியின் இரண்டாவது மாநாட்டில் ‘முழுச் சுதந்திரம்தான் இந்தியாவின் கோரிக்கை என்ற தீர்மானம்‘ நிறைவேற்றப்பட்டது. 1924ல், விடுதலை அடையும் இந்தியா சோசலிசக் குடியரசாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஏஐடியுசி தீர்மானம் இயற்றியது. பூரண சுதந்திரம் என்பதும், சமதர்மம் சோசலிசம் என்பதும் ஏஐடியுசியால் இந்தியாவில் முன்மொழியப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டதால். ஏஐடியுசியின் முதல் தலைவர் லாலா லஜபதி ராய். 1926 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் வரும்பொழுது அதனை எதிர்த்துப் போராடினார். காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனால் உடல் நலிவுற்று உயி£¤ழந்தார். தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்கள் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டார்கள். படுகொலைக்கு ஆட்பட்டார்கள்; சித்ரவதைகளும், சிறைக்கூடங்களும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு உரமாகின.
தொழிலாளி வர்க்கத்தினுடைய நலன் காக்க வேண்டும். மனிதர்களை மனிதர்களாகச் சமமாகப் பாவிக்க வேண்டும்; சுரண்டல் கூடாது; பணியிடங்களில் மட்டுமல்ல எங்குமே பாலியல் கொடுமை கூடாது; இளம் சிறார்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதற்காகவும், இந்திய விடுதலைக்கு மட்டுமல்ல, விடுதலைக்குப் பின்பும் பொதுத்துறைகள் உருவாக தொழிலாளர்களின் சட்ட உரிமைகளைப் பெறவும், பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும் போராட்டங்கள் தொடர்கின்றன.
ஆனால், தொழிலாளர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற 44 சட்டங்களை ஒன்றிய மோடி அரசு நீக்கி விட்டது. அவற்றில் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செஸ் வரி வசூலிக்கும் 15 சட்டங்களை அடியோடு அகற்றி விட்டதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டது. எஞ்சிய 29 சட்டங்களில் இருந்த தொழிலாளர் நலன்களைப் புறக்கணித்து சாறு இழந்த சக்கையாக நான்கு சட்டத்தொகுப்புகளாகச் சுருக்கியது.
ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய, மாநில, துறைரீதியான தொழிற்சங்கங்களின் இடைவிடாத போராட்டத்தால் இச்சட்டத் தொகுப்புகளை இதுவரை அமலாக்க முடியவில்லை. ஆனால் இந்தச் சட்டத் தொகுப்புகளில் அடங்கியுள்ள தொழிலாளர் விரோதச் சரத்துக்களை ஒன்றிய அரசும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகளும் வெவ்வேறு வழிகளில் மூர்க்கத் தனமாக அமலாக்கி வருகின்றன.
தொழிலாளர் குறித்து சட்டங்கள், திட்டங்கள் தொழிற்சங்கங்களுடன் விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்னும் முக்கூட்டு விவாதம் இல்லாமலேயே நான்கு சட்டத் தொகுப்புகளும் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து ஏஐடியுசி உள்ளிட்ட மத்தியத் தொழிற்சங்கங்கள் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் (ஐஎல்ஓ) எழுப்பின. ஐஎல்ஓ 2021 ஜூனில் நடைபெற்ற 341 ஆவது அமர்வில் ஆட்சிக் குழு (Governing Body) தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்து விசாரணை அறிக்கை கோரியது.
2024 பிப்ரவரி ILO ஒரு நேரடியான வேண்டுகோள் “Direct Request” மூலம் இந்திய அரசிடம் தொழிலாளர் சங்கங்களுடன் ஆலோசனையை மீண்டும் தொடங்குமாறு பரிந்துரைத்தது. இது எதனையும் ஒன்றிய அரசு ஏற்கத் தயாரில்லை. இறுதியாக 2025 மார்ச்சில் நடைபெற்ற மாநாட்டில் தரநிலைகளைப் செயல்படுத்துவதற்கான மாநாட்டுக் குழு Conference Committee on Application of Standards (CAS) கூட்டத்தில் இந்தியாவின் பெயர் சிறப்புக் கண்காணிப்புப் பட்டியலில் “special observation list”-ல் சேர்க்கப்பட்டது. இதன் பொருள் -இந்தியா தனது சர்வதேச ஒப்பந்தப் பொறுப்புகளை மீறுகிறது என்று மிலிளி வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
முதலாளித்துவச் சமூக அமைப்பைப் பாதுகாக்கவென்றே தொடங்கப்பட்ட ஐஎல்ஓ கூட ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஏற்கவில்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27 அன்று ஷ்ரம் சக்தி நிதி- 2025 என்னும் பெயரில் இந்தியாவின் தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை (வரைவு) தேனொழுகும் வார்த்தைகளுடன் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. உள்ளே அனைத்தும் விஷமாக இருக்கிறது.
20 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வேலை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான ஒரு வழிமுறையாக மட்டுமல்லாமல், தர்மத்தின் (நீதியான கடமை) பரந்த ஒழுங்கிற்கு ஒரு பங்களிப்பாகும் என்று வெளிப்படையாகப் பேசுகிறது. மனுஸ்மிருதி, யாக்ஞவல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ராநிதி மற்றும் அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள் ராஜதர்மத்தின் கருத்தின் மூலம் இந்த நெறிமுறைகளை வெளிப்படுத்தின. நீதி, நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான இறையாண்மையின் கடமையை வலியுறுத்தின. இந்த ஆரம்பகால சூத்திரங்கள், நவீனத் தொழிலாளர் சட்டத்தின் எழுச்சிக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் நாகரிகக் கட்டமைப்பிற்குள் தொழிலாளர் நிர்வாகத்தின் தார்மீக அடிப்படையை உட்பொதித்தன என்று கூறுவதன் மூலம், உழைப்பையும், உழைப்பவர்களையும் கீழானவர்கள் என வரையறுத்த பண்டைய சமூக முறைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
நியாயமான ஊதியம், வேலைப் பாதுகாப்பு, சுரண்டல் எதிர்ப்பு ஆகியவற்றை பண்டைய நூல்களை ஒப்பிட்டு, நவீனத் தொழிலாளர் கொள்கை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த நூல்கள் அனைத்தும் பண்டைய அடிமைத்தனத்தின் அடிப்படை. தொழிலாளர் “சேவை செய்வதே வாழ்க்கை” என்று சொல்லுவது, சுரண்டலைச் சமூக தர்மமாக்குகிறது.
சிலாகித்துச் சொல்லப்படும் சுக்ல நியாயா என்பது நீதியும், பரிவர்த்தனையும் சந்தைமயமானதாக மாறும் நிலையைக் குறிப்பிடுகிறது. அதாவது பணமுள்ளவர்கள் மட்டுமே தங்களுக்கான நியாயத்தை வாங்கிக்கொள்வது என்று பொருள். இதனை அரசின் சீரழிவின் அறிகுறி என்று சுக்ர நிதி எழுதிய சுக்ராச்சாரியார் குறிப்பிடுகிறார்.
அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யரோ இன்னும் ஒருபடி மேலே போய் நீதி முறைகள் சுக்லம் அடிப்படையில் செயல்பட்டால் அரசின் மீதான நம்பிக்கையை உடைத்து வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்.
ஆக பெருமை என்று கூறும் பண்டைய நூல்களில் பெருமைப்பட எதுவும் இல்லை என்று தெரிந்தே கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான நீதியைப் பணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளவும். தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மேலும் சுரண்டலுக்கு ஆட்படவும், ஊழல், லஞ்சம், வணிகமயமாதல் அனைத்தும் தலைவிரித்துத் தாண்டவமாடும் நிலையை உருவாக்குவதே தொழிலாளர் கொள்கை என்று பகிரங்கமாகத் தெரிவித்து விட்டது ஒன்றிய மோடி அரசு.
உழைப்பின் பலன் எஜமானனுக்கே சொந்தம் என்கிற மனுஸ்மிருதியின் கூற்றைச் செயல்வடிவம் தரப்போவதாகக் கூறும் இந்த விஷத்தை வேரோடு வெட்டி எறிய வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று ஏஐடியுசி தனது 106 ஆவது அமைப்பு தினத்தை நாடெங்கும் கொண்டாடத் தயாராகி வருகிறது. தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அளப்பறிய கடமையைச் செய்து முடித்த ஏஐடியுசியின் முந்தைய பொதுச்செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்களின் நினைவு நாளும் இதுவே. இந்த நாள் கொண்டாட்டங்கள் கௌடியல்யர் கூறியதைப்போல் அரசின் மீதான நம்பிக்கையை உடைத்து வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை உணர்த்துகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் இந்தப் போராட்டத்தில் ஏஐடியுசி முன்னிலும் முனைப்பாக முன்னேறும்.