இந்தியக் கல்வித்துறையில் சாதியப் பாகுபாட்டின் புதிய முகம் “தகுதியானவர் இல்லை”
டாக்டர் வினய் குமார் சிங்

இந்தியக் கல்வித்துறையில், ஆசிரியர், பேராசிரியர் ஆகிய பணிகளில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டப்படி அவ்வாறு நியமிக்க முடியாது என்று சொல்ல முடியாது.
ஆனாலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த ஆசிரியர் பேராசிரியர்களை, நியமிப்பதில்லை.
“நியமிக்க முடியாது” என்று சொல்வதற்குப் பதிலாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களில் நியமிப்பதற்கு, “தகுதியானவர்கள் கண்டறியப்படவில்லை” (Not Found Suitable) என்று கூறுகிறார்கள். இது அரசியல் சாசனத்திற்கு, சமூக நீதிக்குத் துரோகம் இழைப்பதாகும். “சத்தமே இல்லாமல் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘தகுதியானவர் இல்லை’ என்ற சொல், இந்தியக் கல்வித்துறையில் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி சார்புக்கான ஒரு மறைமுகமான சொல்லாக வெளிப்பட்டுள்ளது.
பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) ஆகியவற்றிலிருந்து தகுதியான போட்டியாளர்கள் இருந்தும் கூட, ஆசிரியர் பதவிகளுக்கு “தகுதியானவர் இல்லை” என்று முத்திரை குத்துவது, நடைமுறை பாகுபாடு மட்டுமல்ல – இது மனுவாதத்தின் நவீன வெளிப்பாடாகும்.
தடுப்பதற்கான ஒரு புதிய ஆயுதம்
ஒதுக்கப்பட்ட பேராசிரியர் பதவிகளில் 60% க்கும் மேற்பட்டவை காலியாகவே உள்ளன. மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த ஆசிரியர் பதவிகளில் 30% க்கும் மேற்பட்டவை நிரப்பப்படவில்லை. இவர்களை நியமிக்கும் அதிகாரத்தில் உள்ள உயர்த்தப்பட்ட சாதிக்காரர்களுக்கு, பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களை, ஆசிரியர்களாகப் பார்க்க விருப்பமில்லை.
தேடிக் கண்டறிந்து. பணியிடங்களை நிரப்ப வேண்டிய பொறுப்பில் உள்ள பல்கலைக்கழக தேர்வு குழுக்கள், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, ‘தகுதியானவரல்ல’ என்ற லேபிளைப் பயன்படுத்தி நிராகரிக்கத் தொடங்கியுள்ளன.
இது உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிலும் பரவியுள்ளது.
தகுதி வாய்ந்த போட்டியாளர்கள், அனைத்துத் தகுதி அளவுகோல்களையும் பூர்த்தி செய்து நேர்காணல்களில் தேர்ச்சி பெற்ற பின்னரும், ‘தகுதி’ச் சாயம் பூசி, சகிக்கவியலாது நாறிப்போன சாதிய மேலாதிக்கம் உந்தித் தள்ள, வாயிற் கதவை மூடுகிறார்கள்.
காட்டிக்கொடுக்கப்படும் அரசியல் சாசனம்
இந்திய அரசியல் சாசனத்தின் 15(4), 16(4), மற்றும் 46 பிரிவுகள், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு உறுதியான நடவடிக்கை மற்றும் பாதுகாப்புகளை கட்டாயப்படுத்துகிறது.
இடஒதுக்கீடு என்பது ஒரு ‘தர்ம காரியம்’ அல்ல; இது பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வரலாற்று அநீதியைத் திருத்துகிற வழிமுறையாகும். ஆனால் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தனது செயலுக்கு பொறுப்பு ஏற்காமல், வெறுமனே “தகுதியானவர் அல்ல” என்று அறிவிப்பதன் மூலம், இந்த அமைப்பு அரசியலமைப்பு பிரகடனப்படுத்திய சமத்துவத்தின் உணர்வைக் கேலி செய்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் தில்லி பல்கலைக்கழக மாணவர்களோடு உரையாடிய போது, “காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை மேற்கோள் காட்டி, கல்வி என்பது சமூக அதிகாரமளிப்புக்கான மிகப்பெரிய ஆயுதம்” என்று சரியாகச் சுட்டிக்காட்டினார்.
கல்வியே கண்ணுக்குத் தெரியாத தடைகளால் பாதுகாக்கப்பட்ட கோட்டையாக மாறும்போது, சமத்துவத்தை எப்படி அடைய முடியும்?
தகுதி -எதிர்- மனுவாதம்
பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, அண்மைக்காலத்தில் தான் படித்து, சமூக பொருளாதார தடைகளை எல்லாம் தாண்டி மேல் எழும்பி வருபவர்களை, அவர்களுக்கு உரிய உயரங்களை எட்ட விடாமல் தடுத்து நிறுத்துவதற்கு, ஆதிக்க சாதியினர் பயன்படுத்தும் உத்திதான் ‘தகுதி’
தலித், ஆதிவாசி மற்றும் ஓ.பி.சி மாணவர்கள், சிறந்த பள்ளிப்படிப்பு, பயிற்சி, ஆங்கிலக் கல்வி மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட, இட ஒதுக்கீடு உரிமையை அடைய முடியாமல் தடுப்பதற்கும், தமக்கான உரிமையை எடுக்க முயற்சிப்போரை அவமதித்து கேலி செய்வதற்கும் “தகுதி” என்ற கட்டுக்கதை முன் வைக்கப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
உண்மையான நிகழ்ச்சி நிரல்: பிரமிட்டைப் பாதுகாத்தல்
இது வெறுமனே ஒரு நிர்வாகப் பிரச்சினை அல்ல. இது ஒரு அரசியல், சித்தாந்தத் திட்டம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள், உரிய கல்வி கற்று, ஆசிரியர்களாக கல்வித்துறையில் நுழைவதை தடுப்பதன் மூலம், உயர் கல்வி நிறுவனங்களில் ‘உயர்த்தப்பட்ட சாதியின’ரின் ஆளுமையும், மதிப்புகளும், செயல்பாடும் எந்தக் கேள்விக்கும் உட்படாமல் தொடர்வதை உறுதி செய்கிறார்கள்.
உயர்த்தப்பட்ட சாதிகளைத் தவிர மற்ற சமூகங்களை சார்ந்த அறிஞர்கள் கல்வி போதிக்கிற பாடத்திட்டங்களை வகுக்கிற பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டால் மட்டுமே, வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமூக அறிவியலை திருத்தி தமக்கேற்ப எழுதிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத் திட்டம் வெற்றிபெற முடியும்.
அதனால்தான் ‘தகுதியானவர் அல்ல’ என்பது வெறும் நிராகரிப்பு மட்டுமல்ல. இது இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெகு மக்களின் இருப்பையும், அவர்களது குரல்களையும் அழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.
என்ன செய்ய வேண்டும்?
1. வெறும் நிராகரிப்பு கூடாது:
எந்த விளக்கமும் இன்றி ‘தகுதியானவர் அல்ல’ என்று நிராகரிக்கப்படும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்.ஒருவரை தகுதியானவர் அல்ல என்று முடிவு செய்தால், அந்த நிராகரிப்புக்கான விரிவான எழுத்து மூலமாக விளக்கங்களை தரவேண்டும் என்பதோடு, அவை சரியானதா? என்ற மறுமதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. தேர்வுக் குழுக்களில் இடஒதுக்கீடு:
தேர்வு குழுக்கள் ஒரு சார்பாக நிலை எடுப்பதைத் தடுக்க, அனைத்து பணியமர்த்தல் அமைப்புகளிலும் SC/ST/OBC பிரதிநிதித்துவத்தைச் சேர்க்க வேண்டும்.
3. நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்துதல்:
சம வாய்ப்பு குழுவை (Equal Opportunity Cells) புதுப்பித்து, SC/ST ஆணையங்கள் மேற்பார்வையிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. விளிம்பு நிலை குரல்களுக்கு அதிகாரமளித்தல்:
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து உயர் கல்வி கற்ற கல்வியாளர்களுக்கு, கல்வி நிறுவன நிர்வாகத்தில் பங்கு, ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவித்தொகை, கற்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை வழங்கி ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும்
நிறைவாக
“தகுதியானவர் அல்ல” என்பது வெறும் சொற்றொடர் அல்ல. இது கல்வித் துறையில், தமக்குரிய பொருத்தமான இடங்களை பெறத் துணிமவர்களுக்கு எதிராக, சமத்துவமற்ற அமைப்பு வழங்குகிற தீர்ப்பு.
இது மனுவாதத்தின் ஒரு புதிய அவதாரம். பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையை, அதிகாரப்பூர்வ ஆணையாக மாற்றியமைக்கும் தந்திரம்.
இந்தத் தடுப்பரன்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வரவும்,
அதன் ஒவ்வொரு செங்கல்லையும் தனித்தனியாகப் பிரித்து அகற்றவும், நமது பல்கலைக்கழகங்களை சமூக நீதி, பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சிந்தனையின் தொட்டில்களாக மீட்டெடுக்கவும் இதுவே சரியான நேரம்.
கல்வி சமத்துவத்திற்கான போராட்டம், மனித உரிமைகள். கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றுக்கான பெரிய போராட்டத்திலிருந்து வேறுபட்டதல்ல. உண்மையில் அதுதான், அதன் அடித்தளமாகும்.
கட்டுரையாளர் உத்தரப் பிரதேச ஏஐடியுசியின் மாநிலத் தலைவர், மற்றும் கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்.