அறிக்கைகள்

ஜூலை 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்; ஆதரித்து பங்கேற்போம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஜூலை 9 பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும், துறை வாரியான சம்மேளனங்களும் ஒருங்கிணைந்து பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றன. தொழிற்சங்கங்கள், தற்போது, விவசாயிகள் ஐக்கிய முன்னணியுடன் (எஸ்கேஎம்) இணைந்து வரும் ஜூலை 9 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், தொழிற்சங்கங்களும் விவசாயிகள் ஐக்கிய முன்னணியும், ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும், நான்கு நெறி தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். நாட்டு மக்கள் வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த தொழில்களில் தினக்கூலி, ஒப்பந்தக் கூலி முறை பணி நியமனத்தை தடை செய்ய வேண்டும். வெளியிடப் பணி முறையை கைவிட வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களையும், குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட மக்கள் நலக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

சமூகத்தின் அனைத்துப் பகுதியினர் நலனையும் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது ஒன்றிய அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் முன் வரவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடிகள், மானிய உதவிகள் என வாரிக் கொடுக்கும் பாஜக ஒன்றிய அரசு, உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து வரும் பாரபட்ச, வஞ்சக செயலைக் கண்டித்து, தொழிலாளர், விவசாயிகள் இணைந்து அறிவித்துள்ள ஜூலை 9 பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்வதுடன், கட்சி முழு வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button