கட்டுரைகள்

பாசிச அரசியலுக்கு அணிதிரட்ட முருக பக்தர்கள் மாநாடு

வ.மணிமாறன்

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடல்ல. அரசியல் மாநாடு. அதுவும் மக்களின் பக்தியை இந்து வாக்கு வங்கியாக, இந்துத்துவ அரசியலாக மாற்றிவிடத் துடிக்கும் மாநாடு என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி, முருகன் சிலையுடன் அறுபடை வீடுகளின் அசத்தலான செட் போடப்பட்டு, ஒரு வாரமாக வழிபாடுகள் நடைபெற்றன. ஜூன் 22 அன்று மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் வகையில் அறுபடை வீடுகளின் செட் இடம் மாற்றப்பட்டது. அரசியலா..? அதற்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை. முற்றிலும் ஆன்மீக மாநாடு என்று உயர்நீதிமன்றத்தில் சத்தியம் செய்து (உறுதியளித்து), அதனை நீதிமன்றமும் மலை போல் நம்பி(!) அனுமதியளித்தது. வெற்றி வேல், வீர வேல் என்று பாடி முருக பக்தர்கள் மாநாட்டுப் பணிகளை சங்கிகள் தொடங்கினர்.

அறுபடை வீடுகளின் அசத்தல் செட்டை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட சங் பரிவாரங்களின் பிரமுகர்கள் வந்து வழிபட்டுச் சென்றனர். உள்ளூர் மக்களும் வந்து அறுபடை வீடுகளின் அசத்தல் செட்டை கண்டும் வழிபட்டும் சென்றனர்.

மாநாட்டில் நடந்தது என்ன?

முருக பக்தர்கள் மாநாட்டுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. ஆன்மீக மாநாடு, ஆன்மீகம் மட்டும்தான் பேசப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளித்து அனுமதி பெற்றார்களே. அதன்படிதான் மாநாடு நடந்ததா?

இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆன்மீக (?) மாநாட்டில் பங்கேற்ற இந்த அரசியல் பிரபலங்களுடன் மடாதிபதிகள், ஜீயர்கள், சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “இந்து என்பதற்காக நம்முடைய கடைக்கோடித் தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்” என்று ஆவேசம் காட்டினார்.

“முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் பற்றி இதே கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? சீண்டிப் பார்க்காதீர்கள்” என்று தெலுங்கு கலந்த தமிழில் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்தார்.

“தமிழகத்தில் இரண்டு சட்டங்கள், இந்துவுக்கு ஒரு சட்டம், இந்து மதத்தை சாராதவர்களுக்கு ஒரு சட்டம் என்று எதற்காக இருக்கிறது? இதைக் கேட்பதற்காகத்தான் மதுரை மண்ணில் நின்று கொண்டிருக்கிறோம்” – இது அண்ணாமலையின் பேச்சு.

“இது கலி யுகம் முருகன் நேரில் வரமாட்டான். நாமே முருகனின் உணர்வாக மாறிவிடுவோம். நாசகார சக்திகளை நிர்மூலமாக்கிடுவோம்” என்று பவன் கல்யாண் காற்றில் கத்தி வீசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானம் “வரும் தேர்தலில் இந்து ஓட்டு வங்கியை நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்கிறது.

இந்தப் பேச்சுகள் அரசியல் இல்லையாம். ஆன்மீகமாம். அதை உலகம் நம்ப வேண்டுமாம்.

உண்மையில் இவை வெறும் அரசியல் பேச்சுகள் அல்ல. நச்சு அரசியல். மக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் அரசியல். மத வெறுப்பைத் தூண்டும், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் அரசியல். நாடு ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியலமைப்புக்கு (Constitution) எதிரான அரசியல். தமிழ்ச் சமூகம் இத்தனை ஆண்டுகளாக நிராகரித்து வரும் அரசியல். இதனை முருகன் பெயரிலும், முருக பக்தர்கள் பெயரிலும் திணிக்கும் முயற்சிதான் முருகன் பெயரிலான இந்த மாநாடு.

முருகனுக்கு ஆபத்தா?

திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி.. என குன்று தோறும் இருக்கும் முருகனை ஆண்டு தோறும் பல லட்சம் மக்கள் திரண்டு வழிபடுகின்றனர்.

குமரகிரிப் பெருமானே!
மனத்தையும் மாய்த்திடுவீர்!
பச்சைமலை முருகா!
இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே!
பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை சண்முகனே
விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரரே!
ஞானவரம் எனக்கு அருள்வீரே
வெண்ணெய் மலை முருகா!
மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே!
மன மாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா!
கருத்துள் வந்திடுவீர்..

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என முருகனை நாடித் தேடி ஓடி வருகின்றனர். மானிடர்களுக்கு இல்லாத சக்தி, ஆற்றல் அந்த முருகனுக்கு இருக்கிறது என்று நம்பி வேண்டுகின்றனர். விரதம் இருக்கின்றனர். பாத யாத்திரை செல்கின்றனர். பால் காவடி தூக்குகின்றனர். தூக்க நேர்ச்சை செய்கின்றனர். அபலைகளை அந்த ஆண்டவன் காப்பாற்றுவான் என மருகி வேண்டுகின்றனர்.

இந்த மக்களிடம் சென்று முருகனுக்கு ஆபத்து, முருகன் இருக்கும் மலைக்கும் ஆபத்து, பக்தர்களே வாருங்கள் என்று கூவுகிறது சங்கிக் கூட்டம். மக்களின் பக்தியை இந்து வாக்கு வங்கியாக, இந்துத்துவ அரசியலாக மாற்றிவிடத் துடிக்கிறது இந்தக் கூட்டம். இதுதான் முருக பக்தர்கள் மாநாட்டிலும் நடந்திருக்கிறது.

சிக்கந்தர் மலை என்று சொல்வது யார்?

கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றனத்தில் தீபம் ஏற்றுவதற்கென தூண் இருக்கிறது. அதில் தீபம் ஏற்ற மாட்டோம். மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகேயுள்ள சர்வே கல் தான் தீபத்தூண். அதில் தான் தீபம் ஏற்றுவோம் என்று 25 ஆண்டுகளாக இந்து முன்னணி பேசிக் கொண்டிருக்கிறது. இந்த இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிலும் “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம்” என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

“சென்னிமலையை உரிமை கொண்டாடினார்கள். இப்போது திருப்பரங்குன்றத்திற்கு வந்திருக்கிறார்கள்” என்று மாநாட்டில் பேசியது மட்டுமல்ல, “திருப்பரங்குன்றம் உட்பட குமரன் இருக்கும் அனைத்து மலைகளும் (குன்றுகளும்) காக்கப்பட வேண்டும்” என்று தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

“சிக்கந்தர் மலையை இடம் மாற்ற வேண்டும். திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்.

சென்னிமலையை ஏசு மலை என்றும், திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்றும் மாற்ற முயற்சிக்கின்றனர். அதனை தடுத்தே தீருவோம் என மாநாட்டில் தீர்மானம் போட்டுள்ளனர்.

அரசு ஆவணங்கள், மக்களின் பேச்சு வழக்குகள் என அனைத்திலும் சென்னிமலையை சென்னிமலை என்றுதான் குறிப்பிடுகின்றனர். திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்றம் என்றுதான் சொல்லுகின்றனர். தர்கா நிர்வாகம் கூட, திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா என்றுதான் குறிப்பிடுகிறது.

சிக்கந்தர் மலை என்று மாற்றப் போவதாகச் சொன்னது யார்? பெயரை மாற்றத் துடிக்கும் அமைப்பு எது? அவர்களின் நோக்கம் என்ன?

இது பற்றி பாஜகவோ, இந்து முன்னணியோ இவற்றை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ பேசவில்லை. அவர்களின் நோக்கம் பொய்யான அரசியல் எடுத்துரைப்பை (Fake Political Narratives) உருவாக்கி, திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இதனைத் தான் செய்திருக்கின்றன.

இத்தனையும் செய்துவிட்டு, “இந்து முன்னணி பெரியவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது” என்று அடித்துப் பேசுகிறார் அண்ணாமலை.

சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். முழுப் பூசணியை மறைக்க முடியுமா? மதப் பதற்றத்தையும் மத வெறியையும் மக்களிடம் ஏற்படுத்தி, பாசிச அரசியலின் பின்னால் தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்ட ஆர்எஸ்எஸ் களமிறங்கி இருக்கிறது. அதன் பரிவாரங்கள் அனைத்துத் தளங்களிலும் வேலை செய்கின்றனர்.

கீழடி முதல் சித்தர்கள், வள்ளலார் வரையிலான மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட தமிழ் மண், பெரியார் மண் என்று மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு நடைமுறையில் எதிர்கொள்வதற்கான செயல்திட்டம் வேண்டும். பாசிசத்தை எதிர்கொள்வதற்கான அவசர அவசியத் தேவையும் இதுதான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button