
புகழ்வார், அது வெற்றுப்புகழ்ச்சி என்று அறியார் அப்புகழை வழிமொழிவார்-. புகழ்வாரின் புகழ்ச்சி உண்மையா, மெய்யா எனக் கண்டறிதல் வேண்டாமா?
தமிழ் இனிமையான மொழி என புகழ்வது, காசியில் தமிழ் சங்கம் வைத்து சாதனை படைத்தேன் என தோள் தட்டுவது,
வள்ளுவனை, பாரதியை பாராட்டுவது- வள்ளுவன் குறளுக்கு முழுப்பொருள் அறியாது, பாரதியின் கவிதைக்கு காரணம் அறியாது, யாரோ எழுதித் தந்ததை மனப்பாடம் செய்து தொடக்கப்பள்ளி மாணவச் சிறுவன் ஆசிரியரிடத்தில் ஒப்புவித்து வெரி குட் வாங்குவதுபோல், பொதுக்கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்குவது,
திருக்குறளை சொன்னார், பாரதி பாடலை சொன்னார் என்று ஊடகங்கள் முதல் பக்க, தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு மகிழும்.
உண்மையில் தமிழ் மீதும், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும் அம்மண்ணில் வாழும் தமிழ் மக்கள் மீதும் பற்றுண்டா?
புகழ்ந்துரைப்போர் யார், எதற்காகப் புகழ்ந்துரைக்கின்றார் என்பதறிய வேண்டாமா?
வஞ்சகப் புகழ்ச்சியில் வீழ்வோர் உண்டு!
வஞ்சகப் புகழ்ச்சியை வஞ்சகம் என்று அறியாத புகழ்ச்சி விரும்புவோர் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.
அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று அழகாகக் குறிப்பிட்டார்.
திருவாளர் நரேந்திர மோடியார் தமிழை, தமிழ்நாட்டை புகழ்ந்து பேசுவார் – எப்போது? தமிழ்நாட்டில் வாக்கு வேண்டும் என்றால் தமிழகத்திற்கு வரும்போது, தேர்தல் பிரச்சாரத்தில் புகழ்வார்- புகழ்ந்து தள்ளுவார். இங்கே உள்ள மோடிக் கும்பல் மோடியின் புகழ்ச்சியைக் கும்மியடித்துக் கொண்டாடும்.
அதே மோடி ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழனை திருடன் என்பார்.
பீகார் தேர்தலில் பீகாரிகளுக்கு எதிராக தமிழர்கள் வன்முறை செய்கின்றார்கள் என்பார்.
அடுத்த மாநிலங்களில் தமிழ்மக்கள் மீது அவதூறு பரப்பி, அசிங்கப்படுத்தி அங்குள்ள மக்களிடத்தில் தமிழ் மக்களின்மீது காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி, வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி பகை உண்டாக்கி பலன் பெற முயற்சிக்கும் அற்பத்தனம்-
குழப்பம் அற்ற நிலையில் குழப்பத்தை உருவாக்குதல், எதிரியே இல்லாத இடத்தில் கற்பனை எதிரியை உருவாக்குதல், அத்தகைய கற்பனை எதிரியாக கருதப்பட்டவரின் மீது அவதூறு மொழிவது, அசிங்கப்படுத்துவது, களங்கப்படுத்தி, காய் நகர்த்தி தனது அற்பத்தனமான அரசியல் வெறியை அரங்கேற்றி மகிழ்வது, இத்தகைய இழி குணம் கொண்டவர்தான் நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி.
அத்தகைய அநாகரிக அரசியலை மேற்கொண்டு வரும் நரேந்திரர் உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவரா?
நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் அவரது தூக்கத்தைக் கலைக்கின்றது.
தூக்கத்தைக் கலைக்கிறது என்றால், அவரது தனிப்பட்ட தூக்கத்தை அல்ல. தனிப்பட்ட நபரின் தூக்கத்தைக் கலைப்பதால் எவ்வித பயனும் இல்லை என்பது மட்டுமல்ல, தேவையும் இல்லை.
மோடிக் கும்பலின் கனவுகள் என்பது நான்கு வர்ணக் கனவு. அக்கனவிற்கு நாட்டில் இடமில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் இடம் இல்லை-உறுதியாக இல்லை.
இடம் வேண்டும் என்று அடம் பிடித்து பல சோதனைகளும் செய்து பார்த்தாகிவிட்டது. அச்சோதனைகளில் அவை வெற்றி பெறவில்லை.
கலைஞர் சோதித்து பார்த்துவிட்டு சொந்த அனுபவத்தில் ஆக்டோபஸ் என்றார்.
செல்வி ஜெயலலிதா சோதித்துப் பார்த்துவிட்டு பதிமூன்று மாதத்தில் இனி எக்காலத்திலும் உன்னுடன் உறவு இல்லை என்றார் என்பது மட்டுமல்ல, லேடியா, மோடியா? என ஒரு கை பார்த்துவிடலாம் என்று சவால் விடுத்தார்.
இத்தகைய சோதனைகள் பல முடிந்து – அதன் அனுபவ முதிர்ச்சியால் வேண்டாம் இங்கே நான்கு வர்ணம் என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. குறிப்பாக தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிப்பட எதிர்த்து களம் காண்கிறார்.
இக்களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், முஸ்லீம் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் கரம்கோர்த்து உறுதியாக நிற்பதும், சனாதனத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் தொடர்வதையும் மோடியால் சகித்துக்கொள்ள இயலவில்லை.
தனக்கு கைத்தடியாக பயன்பட்டு வருகின்ற எடப்பாடியை விட்டு ஏவிவிட்டார்.
எப்போதும் மோசடிக்காரனைவிட அவனுக்கு எடுபிடியாக இருக்கும் நபர்களின் ஆட்டம்தான் அதிகமாக இருக்கும்.
அப்படித்தான் எடுபிடி எடப்பாடியார் ஆட்டம் போட்டார். தி.மு.க. கூட்டணி உடைந்து போய்விடும்-அங்குள்ள கட்சிகள் சிதறி சின்னாபின்னமாகி இங்கே வந்துவிடுவார்கள்- என் தலைமை ஏற்பார்கள் என்று ஆருடம் கூறிய அனைத்தும் பொய்த்து விட்டது.
தன்னாலும் ஆகவில்லை- தன் எடுபிடியாலும் ஆகவில்லை- தன் சொந்தக்கட்சிக்காரனை நம்பியும் பயன் இல்லை! என்ன செய்யலாம்? உச்சத்தில் உள்ளேன்-எனக்கு அங்கே மரியாதை இல்லையா? நான் யார் தெரியுமா?
மருமகளே- என் மகன் சாவைப்பற்றி கவலை இல்லை- உன் தாலியை அறுக்காமல் விடமாட்டேன் என்ற அடங்காப்பிடாரி மாமியார் கதைப் போன்று மோடியார் தமிழ்நாட்டை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டி காய் நகர்த்துகிறார்.
அரசியலை அரசியலாக எதிர்கொள்ள இயலாத அற்பர்கள் கூட்டம் அரசியலற்று பேசுவதுபோல்- ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நான்கு வர்ணக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியவில்லை என்ற கோபத்தில், கொந்தளிப்பில் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் மோடி.
நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது- வளர்ந்து கொண்டே இருக்கின்றது- இன்னும் சில ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை பெறும்- வல்லரசாக உயரும்- இவ்வாறு நாள்தோறும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் அறிக்கைகள் வெளியிட்டு மகிழ்கின்றது.
வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியா? அல்லது குறிப்பிட்டஓரிரு நபர்களின் வளர்ச்சியா? என்பதனை நேர்மையுடன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்!
சட்டவிதிகள் என்பது பொதுவானதா? அல்லது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமா?
தில்லி கிரேட்டர், நொய்டா, காஸியாபாத், லக்னௌ, கான்பூர், ஆக்ரா, நாகபுரி, புனே, ஃபரிதாபாத், குருகிராம், பல்லாப்கர்- இந்நகரங்களை தெரிகின்றதா? இந் நகரங்களில் எல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு கனஜோராக ஓடிக்கொண்டு இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் பயணித்துக்கொண்டுள்ளனர்.
மேற்கண்ட நகரங்களில் வாழும் மக்கள் தொகை கோவை, மதுரையை விடக் குறைவு.
அங்கே எல்லாம் அனுமதித்த மோடி – தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை நகரங்களை புறக்கணிப்பது ஏன்?
ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாக நான்கு வர்ணக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவிற்கு வாக்களித்தால் மெட்ரோ திட்டம் உண்டு.
தமிழ்நாட்டு மக்கள் தன் கட்சிக்கோ தன்னுடன் உடன்கட்டை ஏறியுள்ள கட்சிகளுக்கோ வாக்களிக்கவில்லை என்றால் வளர்ச்சித்திட்டங்கள் மறுக்கப்படும் என்று கூறுகின்றார் நரேந்திரமோடி.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகம் – இத்தகைய ஜனநாயகத்தை வழிமொழிகின்றார் எடுபிடி பழனிச்சாமி.
அண்ணா திமுக ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று எடப்பாடி கூறுகின்றார் – எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறுகின்றார் எடுபிடியார்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது- வாக்களித்தவர்- வாக்களிக்காதவர் என்று பாகுபாடு ஜனநாயகத்திற்கு உரியதா?
ஜனநாயக படுகொலைக்கு அனுமதிக்கலாமா?
ஜனநாயக படுகொலையை மேற்கொண்டு, துரோகத்தைத் தொடரும் கும்பலை- அவற்றிற்கு துணை போகும் கும்பலை அடையாளம் கண்டு, அன்னியப்படுத்தி ஜனநாயகம் காக்கப்பட அக்கறை உள்ளோர் அனைவரும் ஒன்றிணைந்து ஓர் அணியாய் கரம் கோர்த்து, நான்கு வர்ண கொள்கைக்கு எதிரான போரை உறுதிப்படுத்தி, ஜனநாயகம் எனும் மகத்தான கொள்கையை உயர்த்திப் பிடிப்போம்!