தமிழகம்

மோடி அரசு பாசிச ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறது

சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா உரை

‘‘இன்றைக்கு மோடி அரசாங்கம், நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்து, நம்முடைய ஜனநாயகத்தை படுகொலை செய்து, இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது.’’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா சேலம் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். மேலும் அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஜனநாயகம் ஒரு பெரும் கேள்விக்குறியாக இப்போது மாறி வருகிறது. நேற்றைய தினம் நம்முடைய சுதந்திர நாளை நாம் போற்றி இருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய நாடு எப்படிப்பட்ட பாதையில் தன்னுடைய பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

டாக்டர் அம்பேத்கர் அவர்தான் சில கேள்விகளை எழுப்பினார். அம்பேத்கரின்மீது பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்திய நாடு அதிபர் ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்மீது கொண்டு வரப்பட்டது. அம்பேத்கர், “இந்திய நாடு ஒரு அதிபர் ஆட்சி முறையை ஏற்றுக்கொண்ட நாடாக இருக்க முடியாது, அதிபர் ஆட்சி முறை என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. ஒரு மதம் என்று எடுத்துக்கொண்டால், ஒரு மதவாதியின் காலடியில் அரசியலில் ஒரு தனி நபருடைய காலடியில் மக்கள் தங்கள் உரிமைகளை வைத்துவிட முடியாது. எனவே, இந்திய நாடு அதிபர் ஆட்சி முறையை ஏற்பது கூடாது” என்றார்.

இப்பொழுது மோடியினுடைய ஆட்சியில், ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ (‘One Nation One Election’) என்று பேசப்படுகிறது. இந்த ஒரு நாடு ஒரு தேர்தலின் உள்நோக்கம் என்ன? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக தொடர வேண்டும். இதுதான் அம்பேத்கருடைய கருத்தாக இருந்தது.

ஜனநாயக நாடு என்று வருகின்றபொழுது, மக்களுடைய பங்கு என்ன? ஜனநாயகத்தை உருவாக்குவதிலும், ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்பதிலும் மக்களுக்கான கடமை என்ன? என்ற கேள்வி அம்பேத்கர் முன்னால் எழுந்தது. அப்பொழுதுதான் அம்பேத்கர் ஒரு முடிவுக்கு வருகிறார்.

இந்தியாவின் ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால், இந்த ஜனநாயகத்தை உருவாக்குவதில், கட்டிக் காப்பாற்றுவதில் குடியமக்களுக்கு ஒரு வரலாற்றுப் பங்கு இருக்கிறது. கடமை இருக்கிறது. சொத்து படைத்தவர்கள் வாக்களிக்கிற உரிமையைப் பெற்றார்கள் அல்லது ஏதாவதொரு கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்கள் வாக்குரிமையைப் பெற்றார்கள்.

சொத்து உடையவர்கள், கல்வித் தகுதி பெற்றவர்கள் என்ற போர்வையில் வாக்குரிமை பெற்றார்கள். இதை அம்பேத்கர் நிராகரித்தார். இன்றைக்கு இந்திய மக்களுக்கு வாக்குரிமை என்பது அடிப்படை ஜனநாயகம். அப்பொழுதுதான் அம்பேத்கர் பேசினார், வயது வந்தோர்க்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும்.

ஜாதியின்பெயரால் ஏற்றத்தாழ்வுகள், ஏழை-பணக்காரன் என்ற பெயரால் ஏற்றத்தாழ்வுகள், படித்தவன்-படிக்காதவன் என்ற பெயரால் ஏற்றத்தாழ்வுகள் எதுவேண்டுமானால் இருக்கலாம், ஆனால், குடிமக்கள் என்கிற முறையில் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும். இதைத்தான் Universal Adult Franchise என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

எல்லா குடிமக்களுக்கும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் பேதங்கள் இல்லாமல் 18வயதானவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது.

இதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய நாடுதான் அதன் சுதந்திர இந்தியப் பயணத்தை மேற்கொண்டபொழுது ஆண், பெண் பேதமில்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் வாக்குரிமை ஆண்களுக்குக் கொடுத்தபோது பெண்களுக்குக் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் ஆண்களுக்கு வாக்குரிமை கிடைத்தபோது, பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை.
இந்திய நாடு ஒன்றுதான் தொடக்கத்திலேயே ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தார்கள். நாமெல்லாம் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நமது வணக்கத்தைச் சொல்ல வேண்டும். இது டாக்டர் அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் சில அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரங்கள் நம்முடைய அரசியல் சட்டத்திலிருந்து வருகிறது. என்ன அதிகாரம்? இந்தியக் குடிமக்கள் அனைவரும் வயது வந்த அனைவரும் வாக்குரிமை பெற வேண்டும்.அந்த வாக்குரிமை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், இன்றைக்கு மதவெறி பாசிஸ்ட் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிய காரணத்தினால், தேர்தல் ஆணையமே இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நேரடியாகவே நான் கேட்டேன், நீங்கள் என்னுடைய பிறப்புச் சான்றிதழை வேண்டுமெனக் கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. என்னுடைய பள்ளிச் சான்றிதழில் எது குறிப்பிடப்படுகிறதோ, அதுதான் என்னுடைய பிறப்புச் சான்று.

இந்திய நாட்டில் குடிமக்கள் எப்படி வாழுகிறார்கள்? அவர்களுடைய வாக்குரிமை எப்படிப் பாதுகாக்கப் படவேண்டும்? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வாதாடி இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் நம்முடைய கட்சி சார்பில் நான் முறையீடு செய்திருக்கிறேன். இந்த எஸ்ஐஆர் கைவிடப்படவேண்டும் என்று. இந்த எஸ்ஐஆரைத்தான் இன்றைக்கு இந்தியாவில் பல மாநில முதலமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். நம்முடைய தமிழ்நாட்டில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு இந்திய நாடு போற்றுகிற ஒரு முன்மாதிரி முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள். அவர் இந்தப் பிரச்சினையை மிகக் கடுமையாக எடுத்திருக்கிறார். இன்றைக்கு பீகாரில் நடைபெறுவது வாக்குரிமையைப் பறிப்பது வாக்குரிமையைத் திருடுவது என்பதாகும்.

அதேபோல மகாராஷ்டிராவில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இது நடைபெறுகிறது. குடிமக்களுடைய வாக்குரிமையைக் காப்பாற்றுவது அடிப்படை ஜனநாயகம். இதை நாம் உறுதி செய்யப் போகிறோமா இல்லையா? அப்பொழுதுதான் ஜனநாயகம் வெல்லும்.வாக்குரிமையை நாம் இழந்துவிட்டு ஜனநாயகம வெல்லும் என்று பேசிக்கொண்டிருந்தால், அது நிஜமாகாது. அது உண்மை ஆகாது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவில் நாம் எதிர்கொண்டிருப்பது வாக்குரிமையை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது? குடிமக்கள் என்கிற முறையில், வாக்களிக்கிற உரிமையை நாம் இழந்துவிடுவோமானால், எங்கே ஜனநாயகம்? இதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

The Democracy: for the People; of the People; By the People.

இதை ஆபிரகாம் லிங்கன் சொன்னார். ஆனால், அதோடு ஆபிரகாம் லிங்கன் நிறுத்தவில்லை. ஆபிரகாம் லிங்கன் சொல்லுவது என்னவென்றால், யார்மீதும் எந்தவிதமான வெறுப்பும் கூடாது. யார்மீதும் எந்தவிதமான கசப்பும் இருப்பது கூடாது. கருணையும், பாசமும் எல்லோரிடமும் காட்ட வேண்டும்.

இதையே நம்முடைய புத்தர் சொல்லியிருக்கிறார். அந்த காலத்தில். கருணை, அன்பு எல்லோரிடமும் காட்ட வேண்டும். ஆனால், இன்றைக்கு இந்திய சமுதாயம் சாதிகளால் பிளவுபட்டிருக்கிற சமுதாயம்.

வர்க்கங்களால் உடைந்து போயிருக்கிற சமுதாயம். அதேபோல, ஆணாதிக்கம் காரணமாக பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிற சமுதாயம். இந்த சமுதாயத்தில் நாம் குடிமக்களை எப்படி நேசிக்கிறோம்? குடிமக்களை எப்படி மதிக்கிறோம்? அந்த குடிமக்களின் அடிப்படை உரிமையே வாக்குரிமைதான்.

இன்றைக்கு பீகாரில், மகாராட்டிராவில் வாக்குரிமைக்காக மக்கள் போராடுகிறார்கள். உங்களுக்கும் ஒரு ஓட்டுதான் இருக்கிறது, அதானிக்கும், அம்பானிக்கும் ஒரு ஓட்டுதான். ஆனால், நீங்களும், அதானி, அம்பானியும் ஒன்றா? இதைத்தான் அம்பேத்கர் அன்றே கேள்வி கேட்டார். One Person, One Value ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்பது எப்படி நிலைநிறுத்துவது?
இது நிலைநிறுத்தப்படாதவரை ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்துகொண்டே இருக்கும்.

இன்றைக்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டுமானால், இந்திய சமுதாயம் புரட்சிகரமான முறையில் மாற வேண்டும். சாதிகள் ஒழிய வேண்டும். அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும். அரசியல்நீதி கிடைக்க வேண்டும். பொருளாதார நீதி கிடைக்கவேண்டும். ஒரு புதிய சமுதாயம் இந்தியாவில் படைக்கப்பட வேண்டும். அந்தப் புதிய சமுதாயம் ஒரு பொதுவுடைமைச் சமுதாயமாக, மக்களுடைய உரிமைகளை உயர்த்திப்பிடிக்கிற ஒரு சமுதாயமாக அமையவேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் வெல்லும்.

அம்பேத்கர் சொன்னதைப்போல், தேர்தல் ஆணையம் ஒரு அரசமைப்பின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு அதையே இன்றைக்கு மோடி அரசாங்கம் நிலைகுலைய வைக்கிறது.மோடி அரசாங்கம் வாக்குக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறது. அதனால்தான் எஸ்.ஐ.ஆர். என்று தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் நாம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஒன்றுபட்ட முறையில் போராட வேண்டும். ஜனநாயகம் பறிபோகுமானால், என்ன நாடு? என்ன பேசமுடியும்?

இந்திய ஜனநாயகம் குறித்து அரசியல் நிர்ணய சபையில் நீண்ட விவாதம் நடைபெற்றிருக்கிறது. அம்பேத்கர் சொன்னார் அதிபர் ஆட்சி முறை கூடாது. அனால், இன்றைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மோடி பேசுகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கட்சி, ஒரே நாடு ஒரே தலைவர் என்றால் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? எனவேதான் இந்தியாவில் நாம் எதிர்கொண்டிருக்கிற மிகப்பெரிய சவால் இன்றைக்கு சர்வாதிகாரம், எதேச்சதிகாரம் என்பது, மதவெறி பாசிஸ்டு சக்திகள் இன்றைக்கு அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதனுடைய விளைவு நாடாளுமன்றமே நடைபெறவில்லை. நாடாளுமன்றம் செயல்படவில்லையானால், ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

இட்லர் என்ன செய்தார்? ஜெர்மன் நாடாளுமன்றத்தைத் தீவைத்துக் கொளுத்தினார். நாசப்படுத்தி, தாக்குதலை கம்யூனிஸ்டுகள்மீது திருப்பினார் இட்லர். அதனுடைய விளைவு பாசிசம் ஜெர்மனியில் தலைவிரித்தாடியது. அந்த பாசிசம் ஓர் உலக யுத்தத்தையே கொண்டுவந்தது. எவ்வளவு பேர் செத்து மடிந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு மோடி அரசாங்கமும், அதைப்போன்று நாடாளுமன்றத்தை செயலிழக்கச் செய்து, நம்முடைய ஜனநாயகத்தை படுகொலை செய்து, இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுதத வேண்டும் என்று விரும்புகிறது.

இந்தியாவில் பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் ஒரு முன்மாதிரி முதலமைச்சராக இன்றைக்கு இந்தியாவில் பாராட்டப்படுகிறார்.

எஸ்ஐஆர்., மக்களவைத் தொகுதி வரையறை பற்றியும், நாடாளுமன்றம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைப்பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

அதேபோல அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஈ.டி. இப்படி அமைப்புகளை மாற்றுக்கட்சியினருக்கு எதிராக மோடி அரசாங்கம் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு நம்பகமான அரசியல் தலைமை இருக்கிறது. ஜனநாயகம் நிச்சயமாக தமிழ்நாட்டில் வெல்லும். தமிழ்நாட்டில் மட்டும் போதாது, இந்தியா முழுவதும் ஜனநாயகம் வெல்வதற்காக தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டிலிருக்கிற அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் இன்றைக்குப் பாடுபட வேண்டும். செயல்படவேண்டும்.

தோழர்களே, இது ஒரு முக்கியமான பிரச்சினை. ஒரு கம்யூனிஸ்ட் போர்த்தன்மையோடு, ஒரு புரட்சிகரப் போராளியின் உணர்வோடு இந்தப் பிரச்சினையை நாம் கையில் எடுக்க வேண்டும். இன்றைக்கு இருக்கிற மோடி அரசுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும் எனக் கேட்டு விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button