கட்டுரைகள்

வெளி மாநிலத் தொழிலாளர்களைத் துன்புறுத்தும் மோடி அரசு

மே.து.ரா.

பீகாரிலிருந்து தமிழ்நாடு வந்துள்ள உழைக்கும் மக்களைத் தி.மு.க.வினர் துன்புறுத்தி வருகின்றனர் என்று பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ச.க.வின் தமிழ்ப் பண்பாட்டுப் பகை

தமிழக மக்கள் என்று கூறாமல், தி.மு.க.வினர் என்று கூறியிருந்தாலும், முதல்வர் மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அ.இ.அ.தி.மு.க., பா.ச.க. அணியினர் இது குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை.

தமிழர்கள் மீதான வன்மத்தை வாக்கு அரசியலுக்காக மோடி பயன்படுத்துகிறார் என்றே இது பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் தமிழ் மொழியின் பழமை, வள்ளுவர் பெருமை என்ற சொல்லாடல்கள் தொடர்ந்தாலும், மோடி உள்ளிட்ட பா.ச.க.வினரின் தமிழ்ப் பண்பாட்டுப் பகை மேலும் பெருகிக்கொண்டுள்ளது.

தொழில், வணிகம் ஆகியவற்றில் முன்னிற்கும் தமிழ்நாட்டை நோக்கி வேறு மாநிலங்களிலிருந்து, குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து உழைப்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வருவது கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது.

வெளி மாநிலத்தோரின் பங்களிப்பு

தமிழ்நாட்டரசின் தொழிலாளர் நலத் துறை, வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர் எண்ணிக்கையினை வெளியிட்டுள்ளது. ஒடிசாவிலிருந்து 2,86,500, பீகாரிலிருந்து 2,47,016, சார்கண்ட்டிலிருந்து 1,90,518, மேற்கு வங்கத்திலிருந்து 1,90,518 என்ற அளவில் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணியாற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களன்றி அசாம், உத்திரப் பிரதேசம், சத்தீசுகர், மத்தியப் பிரதேசம், ராசத்தான், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

அரசிடம் பதிவு பெற்றுள்ள எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அளவில் மிகுதியாக இல்லாமல், ஒரு சிலர் மட்டுமே பணிபுரிவது கணக்கில் வராமல் போயிருக்கலாம்.

ஆனால், தமிழ்நாட்டின் உடல் உழைப்பு வேண்டல்களை நிறைவு செய்யும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பினைக் குறைத்துக் கூறிவிட முடியாது. இவர்களது வரவு இல்லாமலிருந்தால் பல தொழில்கள் தொடர்ந்து நடைபெற இயலாமல் முடங்கிப் போயிருக்கலாம் என்பதையும் பலர் ஒப்புக்கொள்கின்றனர்.

சமூக நீதிக் கருத்துக்களால், தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமாகியுள்ள உயர் கல்வி வாய்ப்புகளால் ஏதோவொரு வகையில் புதிய சமூக மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்பதை மறுக்க இயலாது.

தமிழ் இளைஞர் வாய்ப்புகளைப் பறிக்கவில்லை

உயர் கல்வி கற்றோர் அல்லது பள்ளிக் கல்வி முடித்தோர் எவரும் வேறு மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, இங்குள்ள படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் இதுவரை எழவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட பிற மாநில உழைக்கும் மக்களுக்கு எதிரான மனநிலை உருவாகியிருக்கவில்லை.

பீகார் அல்லது பிற மாநிலத் தொழிலாளர்களைத் தி.மு.க.வினரோ, பிறரோ எதிர்க்கின்ற நடைமுறைச் சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் எழவில்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிற மாநிலத் தொழிலாளர்கள் வரவேற்கப்படுவோராகவே இருக்கின்றனர்.

இதனால்தான், மோடியின் கூற்று உண்மைக்கு மாறாக, வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்தும் திட்டமிட்ட நோக்குடன் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுகிறது.

கொத்தடிமைகள் அல்லர்

பிற மாநிலங்களிலிருந்து தாமாகவோ அல்லது ஒரு சில முகவர் வழியாகவோ தமிழ்நாட்டிற்கு வருகின்ற தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதில்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது. தங்களது மாநிலங்களில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததால்தான் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் அவர்கள் பணிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் திறந்திருக்கின்றன.

அவர்கள் அன்றாடப் பணிகள் இல்லாத பொழுதுகளில், தம் விருப்பம் போல நடமாடவும் உரிமைகள் இருக்கின்றன.

ஈழம், மலேசியா, தென்னாப்பிரிக்கா, பிசித் தீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏமாற்றப்பட்டு மக்கள் கொண்டுசெல்லப்பட்டதைப் போல வட மாநிலத்தவரை எவரும் இங்கு அழைத்துவரவில்லை.

கடல் கடந்த நாடுகளிலிருந்து கப்பல் வழியாகவன்றி, வேறு வகையில் தாய்நாடு திரும்பும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது போல, வட மாநிலத்தோர் நிலை இருக்கவில்லை.

வேண்டியபோது அவர்கள் தாய் நிலத்துக்குத் திரும்பும் நிலையிலேயே வாழ்கின்றனர்.
வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகின்ற தொடர் வண்டிகளில், வெளி மாநிலத்திலிருந்து வருவோரும் திரும்புவோரும் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருப்பது இதனைத் தெளிவுபடுத்தும்.

வாழ்வுத் தரம் உயர்வு

தொடக்கக் காலங்களில் நாள் ஊதியங்கள் சற்றுக் குறைவாக இருந்திருக்கலாம். தற்போது பணி வேண்டல்களால் அந்த நிலையும் மாறிவிட்டது. இதனால், வெளி மாநில மக்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவுக்கு உயர்ந்திருப்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். மேலும், இடையில் தங்களது தாய் மண்ணுக்குச் செல்வோர் பலரும் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுகின்றனர். இது தமிழ்நாட்டிலுள்ள இயல்பான நிலைமைகளையே காட்டுகிறது.

இல்லத்தினரை அழைத்து வராமல் அவ்வப்போது வந்து செல்வோர் ஒருபுறம் இருந்தாலும், நிலையாகத் தங்கள் இல்லத்தினருடன் தங்கி வாழ்வோரும் பலராக இருக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லத்தினருடன் தங்கியுள்ள பீகார் தொழிலாளி ஒருவரின் மகள் இங்குள்ள தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து தமிழ் மொழிப் பாடத்தில் 100க்கு 93 மதிப்பெண்கள் பெற்றிருப்பதையும் பி.பி.சி. செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.

வட மாநிலத்தினருடன் கலந்துரையாடத் தமிழ்நாட்டினர் இந்தி மொழியை கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பிழைப்புக்காக வந்தோர் தமிழைக் கற்றுக்கொண்டு வாழ்கின்றனர். அதாவது, இந்தி அவர்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கிவிடவில்லை. தமிழ்தான் அவர்களுக்குப் பணிகளை வாரி வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவரின் வேண்டல்கள் நீடிக்கும்போது தி.மு.க.வினர் எதிர்க்கின்ற என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

வெளி மாநிலத்தோரைத் தி.மு.க.வினர் தங்களுக்கெனப் பணியமர்த்திக் கொண்டிருக்கவில்லை. தொழில், வணிக வேண்டல்களே அவர்களுக்குப் பணிகளை வழங்கிவருகின்றன.

வெளி மாநிலத்தோர் பெறும் பயன்கள்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பகல் உணவு, கட்டணமில்லாக் கல்வி, மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், விலையில்லா அரிசி போன்ற குடிமைப் பொருள்கள், பிற சமூகப் பயன்கள் என அனைத்தையும் வேறுபாடின்றி வெளி மாநிலத் தொழிலாளர்கள் பெறுகின்றனர்.

தங்களது மாநிலங்களில் இல்லாத அளவில், சமூக நீதியுடன், சமய நல்லிணக்கமும் கலந்து வளர்ந்துள்ள மாநிலமான தமிழ்நாட்டின் கட்டமைப்புகள் அனைத்தையும் பிற மாநிலத் தொழிலாளர்களும் பெறுகின்ற வாய்ப்புகள் அமைகின்றன.

வந்து போகும் வட மாநிலத்தாரை வாக்காளர்களாகப் பதிவதை மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அதை எதிர்க்கின்றனர். இது தவிர வேறெந்த எதிர்ப்பையும் தமிழர்கள் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆகவே, அரசியல் கட்சிகள், ஆட்சியினர், தொழில் முனைவோர் என எவரும் வெளி மாநிலத்தோரை இழிவு செய்யும் வாய்ப்புகள் எழவில்லை.

ஆனால், வட மாநில மக்களும் பயன்பெறும் தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு மோடியின் பா.ச.க. ஒன்றிய அரசு எத்தகைய நிதியுதவியும் செய்ய முன்வரவில்லை.

வெளி மாநிலத்தோரைத் துன்புறுத்தும் மோடி அரசு

மாறாக, பா.ச.க.வின் ஒன்றிய ஆட்சிதான், மோடி அரசுதான் பீகார் போன்ற பிற மாநிலத் தொழிலாளர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துன்புறுத்தி வருகிறது; இழிவுபடுத்தி வருகிறது.

வடக்குத் திக்கில் சென்றுவரும் தொடர் வண்டிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட படுக்கை வகுப்புப் பெட்டிகளில்கூடப் புகுந்து வட மாநிலத்தார் பயணிகளுக்கு இடையூறாக இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துவருகிறது. ஒவ்வொரு நாளும், இத்தகைய மக்கள் கூட்டத்தினர் பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி விலங்குகள் போலப் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைபட்டுப் பயணிக்கின்றனர்.

திருவிழா போன்ற ஒரு சில நாள்களின் காட்சிகள் அல்ல இவை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்.

பெரும் எண்ணிக்கைகளில் வட புலங்களுக்குச் சென்று திரும்பும் வட மாநிலப் பயணிகளுக்குப் பயன் தரும் வகையில் கூடுதலாகத் தொடர் வண்டிகளை ஏற்பாடு செய்ய ஒன்றிய பா.ச.க. அரசு முன்வரவில்லை. பா.ச.க.வின் ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் வட மாநிலப் பயணிகளைத் துன்புறுத்தி இழிவுபடுத்துவதை இதில் காண முடியும்.

அத்துடன் நில்லாமல், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பெரும் தொடர்வண்டி நிலையங்களில் வட மாநிலத்தோரைத் தனியே நிற்க வைத்துப் பயணச் சீட்டு ஆய்வு என்ற பெயரில் மணிக் கணக்கில் காத்திருக்க செய்வதையும் பா.ச.க.வின் ஒன்றிய மோடி அரசுதான் செய்து வருகிறது.

‘கொரோனா’த் தொற்றுக் காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் நடை பயணமாகத் துயரத்தோடும் பட்டினியோடும் தங்களது தாய் மண்ணுக்குத் திரும்பியபோது, ஒன்றிய அரசு அவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தோரது பசியாற்றியது தமிழர்கள்தாம்.

இவற்றால், வட மாநிலத்தோரைத் துன்புறுத்துவதும் இழிவுபடுத்துவதும் தரக்குறைவாக நடத்துவதும் பா.ச.க.வின் ஒன்றிய மோடி அரசுதான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மொழி, இன உணர்வுகள் இல்லாத பா.ச.க.

மோடி தனது பரப்புரையைத் தமிழகத்தைத் தாக்குவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் உள்ள காங்கிரசாரும் பீகார் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கடந்தாண்டு பரப்புரையில் அப்போதைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தமிழன் கையில் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறார் என்ற கதையினை அமித் சா அவிழ்த்துவிட்டார். பூரி செகநாதர் கோயிலின் கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டில் இருப்பதாக மோடி பரப்புரை செய்தார்.

இவற்றால், பா.ச.க.வினருக்கு மொழி, இன, மாநில உணர்வுகள் வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. இவையெல்லாம் வாக்குக்கு வடிக்கும் கண்ணீர் மட்டுமே.

பணிகளைத் தேடி மும்பை செல்லும் வட மாநிலத்தார் அங்கு எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டு இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை மோடி மறந்திருக்கமாட்டார்; ஆனால் மறைக்க நினைக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது, பீகார் தொழிலாளர்களைத் தமிழர்கள் துன்புறுத்துகின்றனர் என்று பேசும் துணிவு மோடிக்கு இருக்கிறதா என்ற முதல்வரின் வினாவுக்குப் பா.ச.க.வினரால் விடையளிக்க இயலவில்லை.

வட மாநிலத்தோரை வாக்காளராகப் பதிவு செய்து, வாக்கு வங்கியாகப் பயன்படுத்தும் வாக்குத் திருட்டுக்கு மட்டுமே ஒன்றிய பா.ச.க.வின் மோடி அரசு திட்டமிடுகிறது.

தேர்தல் வெற்றிக்காக எந்த நிலைக்கும் கீழிறங்கப் பா.ச.க.வினர் தயங்கமாட்டார்கள்.
அடிப்படையில் இதில்தான் தமிழர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button