இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர்கள்

தோழர் டி.ராஜா

இந்திய இடதுசாரி இயக்கங்களின் மிகவும் மதிப்புமிக்கத் தலைவர்களில் ஒருவராகத் திகழும் தோழர் டி.ராஜா, இந்தியத் தொழிலாளி மக்களின் போராட்டங்களையும் எதிர்பார்ப்புகளையும் தனது வாழ்க்கையிலே தாங்கி நிற்கும் ஒரு தலைவர். தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த அவர், தனது கிராமத்தின் முதல் பட்டதாரி ஆவார். அறிவாற்றலும் பொறுப்புணர்வும் கொண்ட கூர்மையான மாணவராக அவர் அறியப்படுகிறார்.

அவரது அரசியல் பயணம் மாணவர் இயக்கத்தில் தொடங்கியது. அவர் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். 1980களின் இறுதியில் அதே அமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையத்தில் பணியாற்றி முக்கியத் தலைவராக உயர்ந்தார். அதேசமயம் மக்களின் போராட்டங்களோடு தனது வேர்களை உறுதியாக இணைத்துக் கொண்டார்.

நீண்டகாலமாக தேசியச் செயற்குழு உறுப்பினராக, இந்திரஜித் குப்தா, ஏ.பி.பாரதன் போன்ற மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினார். அவர்களின் அனுபவத்தைக் கற்றுக்கொண்டு அவர்களின் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றார். 2019 ஆம் ஆண்டில், தோழர் சுராவரம் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாகப் பொறுப்பில் இருந்து விலகிய போது, டி.ராஜா பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றார். தெளிவு, ஆற்றல், பார்வையுடன் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.

ஒரு திறமையான நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர், பொதுவுடைமைக் கருத்தியலாளர், தொழிலாளர்கள், விவசாயிகள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றின் அச்சமில்லாத பாதுகாவலராகத் திகழ்கிறார். இன்று அவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடர்ச்சியும் புதுப்பித்தலுமாக விளங்குகிறார்-. கடந்த போராட்டங்களில் வேரூன்றியவராகவும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளக் கட்சியை ஆயத்தப்படுத்துபவராகவும் திகழ்கிறார்.

தோழர் அமர்ஜீத் கவுர்

இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறந்த பெண்தலைவர்களில் ஒருவர் தோழர் அமர்ஜீத் கவுர். வாழ்நாள் முழுவதும் மக்கள் போராட்டங்களுக்கு அர்ப்பணித்ததன் மூலம் ஆற்றலின் வடிவமாக விளங்குகிறார். தனது அரசியல் பயணத்தை மாணவர் இயக்கத்தில் தொடங்கினார். மிக இளம் வயதிலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பளிக்கப்பட்டார். ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகநீதிப் பாதையில் மாணவர்களைத் திருப்பினார்.

பின்னர் கட்சியின் டெல்லி மாநிலக் குழுவின் செயலாளராகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று அமைப்பு நிலைப் பணிகளைப் புனரமைத்து, தலைநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றினார். அதன் பின்பு, இந்திய மாதர் தேசியச் சம்மேளனத்தின் (NFIW) பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார், பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம், பெண் தொழிலாளர்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்காக இடைவிடாமல் போராடினார்.

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்திலும் அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக மூத்த தொழிற்சங்கமான அகில இந்தியத் தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏஐடியுசி) பொதுச் செயலாளராக இருந்த குருதாஸ் தாஸ் குப்தா உடல்நிலை காரணமாகப் பொறுப்பில் இருந்து விலகிய பொழுது, அமர்ஜித் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இந்தியாவில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் சேர்த்து விடுதலைக்குப் பின்பு முதல் முதலாக ஏஐடியுசி பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர். விடுதலைக்கு முன்பு, ஏஐடியுசி பொதுச் செயலாளராக மனிபென் காரா எனும் ஒரே ஒரு பெண்மணி இதற்கு முன் செயல்பட்டிருக்கிறார். தொழிலாளர் உரிமைகளுக்கும் பெண்கள் தலைமைத்துவத்துக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக அவர் திகழ்கிறார்.

நீண்டகாலமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கும் தோழர் அமர்ஜீத் கௌர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த பாரம்பரியங்களைக் குறிக்கும் அச்சமின்மை, தெளிவு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறார். ஒரு தலைவர், அமைப்பாளர், சமத்துவத்திற்கான போராளி என்ற வகையில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் பெண்களின் நிலையான சக்தியை அவர் வெளிப்படுத்துகிறார்.

தோழர் டாக்டர் பாலசந்திர காங்கோ

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியச் செயற்குழு உறுப்பினருமாவார். சமத்துவம், தொழிலாளர் உரிமைகள், சமூகநீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களுக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அனுபவமிக்கத் தொழிற்சங்கத் தலைவராக, மகாராஷ்டிராவிலும் நாடு முழுவதும் தொழிலாளர் மக்களின் உரிமைக்காக அவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய அவர், தொழிலாளர்கள், விவசாயிகள், சமூக அடக்குமுறையால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடையே கட்சியின் தாக்கத்தை விரிவுபடுத்த உழைத்தார். நீதிக்கான அவரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு காரணமாக, முற்போக்கான மாற்றங்களுக்கான, மதிக்கப்படும் குரலாகத் திகழ்கிறார்.

அரசியல், அமைப்புப் பணிகளோடு மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் புகழ்பெற்றவர். மகாராஷ்டிராவில் இடதுசாரி கருத்தியலின் கலாச்சார, அறிவுத் தளமாக லோக் வாங்மயா கிருஹா (மக்கள் இலக்கிய இல்லம்) பதிப்பகத்தை மாற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போது அகில இந்தியக் கட்சி மையத்தின் People’s Publishing House நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்று, முன்னேற்றச் சிந்தனைகளை இந்தியா முழுவதும் பரப்பும் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்.

சமூகநீதிக்கான வலுவான ஆதரவாளரான டாக்டர் பாலசந்திர காங்கோ ஒரு தொழிற்சங்கத் தலைவர், அறிவுஜீவி, கலாச்சாரப் பணியாளர் ஆகிய சிறந்த திறன்களை ஒருங்கே பெற்ற சிறந்த அமைப்பாளர். களப் போராட்டங்களைக் கருத்தியலோடும் இலக்கியத்தோடும் இணைப்பதிலும், சமத்துவம், ஜனநாயகம், சமூகநீதியின் விழுமியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் அவர் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்.

தோழர் ராமகிருஷ்ண பாண்டா

ஒடிசாவைச் சேர்ந்தவர். மக்கள் போராட்டங்களின் சிறந்த பாரம்பரியமுள்ள அந்த மாநிலத்தில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலிருந்தே இயக்கத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) தலைவராக உயர்ந்து, நாடு முழுவதும் இளைஞர்களுக்கு முற்போக்குச் சிந்தனைகளை விதைத்து வழிகாட்டியவர்.

அதன் பின்பு தொழிற்சங்க இயக்கத்தில் அவர் பணியாற்றினார். தொழிலாளர்களின் வலுவான நம்பிக்கைக்குரிய குரலாகத் திகழ்கிறார். உழைப்பால் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஏழைத் தொழிலாளர்களுக்கான கண்ணியம், நீதி, சமத்துவம் ஆகியவற்றை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

இரண்டாவது முறையாக அவர் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்தும் தலைவராக விளங்குகிறார். அவரது பணிகள் நேர்மை, விடாமுயற்சி, சித்தாந்தத் தெளிவு ஆகியவற்றின் சாரமாகத் திகழ்கின்றன.

ஒடிசாவின் கம்யூனிஸ்ட் முன்னோடிகளின் பாரம்பரியத்தையும், இந்தியா முழுவதிலுமுள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் இன்றைய போராட்டங்களையும் இணைக்கும் பாலமாக அவர் திகழ்கிறார். சமத்துவம், சமூகநீதி, மக்களின் ஒற்றுமை, உறுதியான போராட்டம் ஆகிய நியாயமான மனிதநேயச் சமூகத்தை உருவாக்கும் பாதையில் அவர் பயணம் தொடர்கிறது.

தோழர் ஆனி ராஜா

இடதுசாரி இயக்கத்தின் மிகவும் மிகப் பிரபலமான பெண் தலைவர்களில் ஒருவர். பல பத்தாண்டுகளாக மக்கள் போராட்டங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW) பொதுச் செயலராகப் பணியாற்றிய அவர், இந்தியப் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறை, பாகுபாடு, பொருளாதார அச்சம் ஆகிய கேள்விகளைத் தொடர்ந்து முன்வைத்து, பெண்களின் உரிமைகள், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கான குரலைத் தொடர்ச்சியாக எழுப்பி வருகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தேசியச் குழு, தேசிய நிர்வாகக் குழு, தேசியச் செயற்குழு ஆகிய உயர்ந்த நிலைகளில் பணியாற்றியவர். அடிப்படை மக்களோடு செயல்படுவதையும், அமைப்புப் பொறுப்பையும் ஒன்றிணைத்துக் கொண்டு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்களின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். அடுத்த தலைமுறை இளைஞர்களை ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுகிறார்.

தோழர் டாக்டர் கிரிஷ் சந்திர சர்மா

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவராகிய அவர், மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்களில் இருந்து வளர்ந்து வந்தவர். சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர். உ.பி. மாநிலத்தில், இஜட்.ஏ.அகமது, சர்ஜூ பாண்டே போன்ற புகழ்மிக்க மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் வழிகாட்டுதலில் அவரது ஆரம்ப அரசியல் செயல்பாடுகள் வடிவம் பெற்றன.

பின்னர் உத்தரப்பிரதேச மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். அரசியல் தெளிவும், அடிப்படை மக்களுடன் உறுதியான பற்றும் கொண்டவர் எனப் புகழ்பெற்றார். இன்று தேசியச் செயலராகப் பணியாற்றி, மக்களின் போராட்டங்களையும் ஜனநாயக, மதச்சார்பற்ற, சமசமூக இந்தியாவுக்கான பார்வையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தோழர் கே.பிரகாஷ் பாபு

கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகிய தோழர் கே.பிரகாஷ் பாபு, மக்களின் இயக்கத்திற்கான அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார். ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய அவர், படிப்படியாகக் கட்சியில் உயர்ந்து, கட்சியின் கேரள மாநிலக் கவுன்சிலின் துணைச் செயலாளராகப் பணியாற்றினார். மேலும், 1991 முதல் 2001 வரை கேரளச் சட்டமன்றத்தில் பத்தனாபுரம் தொகுதியின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அர்ப்பணிப்பும் கொள்கைத் தெளிவும் கொண்ட மக்கள் பிரதிநிதியாகப் புகழ்பெற்றார்.

கட்சியின் முக்கியச் சிந்தனையாளர்களில் ஒருவராகவும் உறுதியான ஒழுக்கநெறியாளராகவும் மதிக்கப்படும் அவர், அமைப்பைத் தெளிவுடனும் நேர்மையுடனும் வழிநடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். இன்று கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக, சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகிய இலக்குகளுக்கான அவரது அரசியல் பார்வையையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தோழர் பி.சந்தோஷ் குமார்

சுதந்திரப் போராட்ட வீரர்களும் கம்யூனிஸ்ட் தியாகிகளும் அடங்கிய குடும்பத்தில் பிறந்தவர். சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பேரில் அவர் தாத்தாவும் ஒருவர். போராட்டம், தியாகம், மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வளமான பாரம்பரியத்தை அவர் பெற்றுள்ளார். கேரள மாணவர் இயக்கத்தில் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. ஜனநாயக உரிமைகள், சமூகநீதி ஆகியவற்றுக்காக அவர் தீவிரமாகப் பணியாற்றினார். மாநில மட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் பணியாற்றிய அவர், பின்னர் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பொறுப்புகளை ஏற்றவர். இளைஞர்களின் ஆற்றலையும் அமைப்புச் சிறப்பையும் ஒருங்கிணைத்து, இளம் தலைமுறையை ஊக்குவித்து வருபவர்.

அமைப்புப் பணிகள் மேலும் விரிவடைந்து, அவர் கண்ணூரில் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றபோது அங்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், அடிப்படை மக்கள் போராட்டங்களோடு கட்சியின் உறவை வலுப்படுத்தினார். ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வளர்த்தார். அவரது தலைமையால் கட்சி கேரளாவில் வலுவான இடத்தைப் பெற்றதோடு, மக்களின் விருப்பங்களோடு இணைந்த உற்சாகமான பொதுமக்கள் இயக்கங்களை ஊக்குவித்தது.

இன்று மாநிலங்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சியின் தேசியச் செயலராகவும் பணியாற்றும் தோழர் சந்தோஷ் குமார், தியாகங்களும் கொள்கைத் தலைமையும் கொண்ட பாரம்பரியத்தை நிலைநிறுத்துகிறார். இளைஞரின் உயிர்ப்பையும் அனுபவத்தின் ஞானத்தையும் இணைத்து, அடிப்படை மக்களுடனான செயல்பாடுகளையும் பாராளுமன்றப் பொறுப்புகளையும் ஒருங்கிணைத்து, தொழிலாளர்கள், விவசாயிகள், புறக்கணிக்கப்பட்டோர் ஆகியோருக்கான வலுவான குரலாகத் திகழ்கிறார். இந்திய இடதுசாரியின் போராட்டங்களில் அர்ப்பணிப்பு, அச்சமின்மை, தொடர்ச்சி ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார்.

தோழர் சஞ்சய் குமார்

பீகாரைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். அவர் போராட்டமும் தியாகமும் நிறைந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து செல்கிறார். ஒன்றிணைந்த பாகல்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற விவசாயத் தலைவரான தோழர் வாசுதேவ் ராயின் மகனாவார்.

நிலத்தை நியாயமாகப் பகிர்ந்தளிக்கவும், ஜமீன்தாரி சுரண்டலுக்கு எதிராகவும் விவசாயிகளை ஒன்றிணைத்துப் போராடியவர் வாசுதேவ் ராய். நிலப் பிரபுக்களாலும், சமூக விரோதச் சக்திகளாலும் அவரது தந்தை படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, சஞ்சய் குமாரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து, மாணவர் நாட்களிலிருந்தே அரசியலில் ஈடுபடத் தூண்டியது.

அவர் தனது அரசியல் பயணத்தை அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வழியாகத் தொடங்கினார். கல்வி தொடர்பான பிரச்சனைகளில் மாணவர்களை ஒன்றிணைத்துப் போராடி மாவட்ட தலைவராக உயர்ந்தார். பின்னர், பாங்கா-பாகல்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாகக் கட்சியின் மாநிலச் செயற்குழுவிலும், தேசியக் குழுவிலும் பணியாற்றி வருகிறார். தற்போது கட்சியின் தேசியச் செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் பீகாரின் மக்கள் போராட்டங்களின் பாரம்பரியத்தை அவர் தொடர்ந்து தாங்கி நிற்கிறார்.

தோழர் பல்லா வெங்கட் ரெட்டி

தெலங்கானாவைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். தொழிலாளர்கள், விவசாயிகள், புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் போராட்டங்களோடு இணைந்து பணியாற்றியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலங்கானா மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றியதோடு, முனுகோடு தொகுதியிலிருந்து தெலங்கானா சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களின் எதிர்பார்ப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இன்று தேசியச் செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் பல்லா வெங்கட் ரெட்டி, தெலங்கானாவில் கட்சியின் வளமான பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னேற்றுகிறார். அவரது அமைப்புநிலைத் தெளிவும் மக்களோடு கொண்ட நெருங்கிய உறவுமூலம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றுக்கான உறுதியான ஆதரவாளராக அவர் திகழ்கிறார்.

தோழர் கே.ராமகிருஷ்ணா

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். சுரண்டலுக்கும் அநீதிக்கும் எதிரான குரலாக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். மக்களின் போராட்டங்களுக்கு அர்ப்பணிப்புடன், அவர் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழைகளும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் சார்ந்து பல வலுவான போராட்டங்களை வழிநடத்தினார்.

அவர், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவையில் அனந்தபூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு மக்களின் பிரச்சினைகளை அச்சமற்றும் தெளிவுடனும் சட்டப்பேரவையில் முன்வைத்து வாதாடியவர். பின்னர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரப் பிரதேச மாநிலச் செயலாளராக இருந்தபோது, கட்சியின் இருப்பையும் மக்கள் இயக்கங்களில் அதன் பங்கையும் வலுப்படுத்தினார்.

ஆந்திரப் பிரதேச அரசியலில் பெற்றுள்ள பெரும் அனுபவத்தாலும் பரவலான அங்கீகாரத்தாலும், தற்போது அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழுவின் அழைப்பாளராகச் செயல்படுகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button