கட்டுரைகள்

வள மாணவர்க்கான மருத்துவ நுழைவுத் தேர்வு

மே.து.ரா.

இந்திய மருத்துவக் கழகம் என்னும் சட்ட முறை அமைப்புதான் 2010இல் இந்த நீட் எனும் நுழைவுத் தேர்வை முதலில் பரிந்துரை செய்தது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் தொகையினைப் பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் கொண்ட தகுதி இல்லாதோருக்கு இடம் தருவதைத் தடுக்கத்தான் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், புதுச்சேரியில் உள்ள சிப்மர் (JIPMER) தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், படையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றோடு, மாநிலங்களின் தேர்வுகள் எனப் பலவகைப்பட்ட நுழைவுத் தேர்வுகளை ஒரு மாணவர் எழுதுகின்ற நிலை அப்போது இருந்ததால், ஒருங்கிணைந்த ஒரே தேர்வு என்னும் திட்டம் தீர்வாகக் காட்டப்பட்டது.

2010இல் காங்கிரசார் கொண்டுவந்த நுழைவுத் தேர்வுத் திட்டத்தில், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் இல்லை. ஆனால், மாநில அரசுகள் வேண்டுமெனில், ஒன்றிய அரசின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விருப்ப உரிமை தரப்பட்டிருந்தது.

இத்தகையதொரு நடைமுறை, வேறு சில நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக இருந்துவருவதுதான். எடுத்துக்காட்டாக, ஒன்றியத்தில் உள்ள 21 இந்திய மேலாண்மை நிறுவனங்களுக்காக (அய்.அய்.எம்.), பொது நுழைவுத் தேர்வு (கேட்) நடத்தப்படுகிறது. ஆனால், இந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை அய்.அய்.டி. உள்ளிட்ட நூற்றுக் கணக்கான அரசு சார்ந்த மற்றும் தனியார் மேலாண்மை நிறுவனங்கள் தங்களது சேர்க்கைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இது வலியுறுத்தல் ஏதுமின்றி விருப்ப அடிப்படையில் ஏற்கப்படுகிறது.

பாரதிய சனதாக் கட்சியினர் 2014இல் ஒன்றிய ஆட்சியைப் பிடித்த பின், அவர்களோடு தொடர்புடைய ‘சங்கல்ப்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு அனைவருக்கும் நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தியது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு, பா.ச.க. அரசு நுழைவுத் தேர்வு நடத்த முன்வந்தது. உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

மருத்துவ நுழைவுத் தேர்வினை எதிர்த்துப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தாலும், அய்ந்து நீதியர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு 2016 ஏப்ரல் 11இல் நுழைவுத் தேர்வினை இறுதியில் உறுதி செய்தது.

மருத்துவக் கல்வியில் தகுதி மட்டுமே அடிப்படையாக இருக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாடம் நடத்துகிறது. ஆனால், கடந்த ஆண்டுகளில் நீட் எனப்படும் நுழைவுத் தேர்வின் வழியாகத் தகுதியுடையோர் மட்டும்தான் சேர்ந்தார்களா என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய முயற்சிக்கவில்லை. அத்துடன், தகுதியிருந்தும் பலர் கட்டணம் செலுத்த வழியின்றி, மருத்துவப் படிப்பில் சேர இயலாமல் விடுபட்டதையும் உச்ச நீதிமன்றம் பார்க்கத் தவறிவிட்டது.

அதாவது, மிகு மதிப்பெண் இருந்தும் பலர் மருத்துவக் கல்வியில் சேர இயலாததையும், மிகக் குறைந்த மதிப்பெண்ணுடன் பலர் மருத்துவப் படிப்பில் சேர்வதையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

நிரம்பாமல் இருக்கும் இடங்களை நிரப்பவேண்டும் என்ற பெயரில் தகுதி இல்லாதோர் சேர்க்கப்படுகின்றனர்.

தன்நிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நன்கொடை. முதலீட்டுக் கட்டணம் என்ற வெவ்வேறு பெயர்களில் பெருந்தொகை பெறுவதைத் தடுக்கும் வழி காணாமல், தகுதி என்ற பெயரில் நுழைவுத் தேர்வினைப் பரிந்துரைத்தபோது, இந்திய ஒன்றிய மக்கள் பிரிவினரின், சமூக-பொருளிய-பண்பாட்டு-இருப்பிட நிலைமைகளை உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

அத்துடன், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ஏதுமின்றிப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்த தகுதிவழிச் சேர்க்கை முறைக்கு இதில் மாற்றுத் தீர்வு எதுவும் கொடுக்கப்படவில்லை.

ஒன்றிய அரசின் பள்ளிகளில் இருக்கும் பாடத் திட்டங்கள் இந்த தேர்வுகளுக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனால், இந்த நுழைவுத் தேர்வு பல்வேறு மாநில மாணவர்களுக்குப் பேரிடியாக வந்து விழுந்தது என்றுதான் கூறவேண்டும்.

மராட்டியம், குசராத், ஆந்திரம், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் தனித்தனியே தங்களது பாடத்திட்டங்களைக் கொண்டு, தங்களது மாநிலங்களில் நுழைவுத் தேர்வினை அதுவரை நடத்தி வந்தன.

தமிழ்நாட்டைப் பொருத்த வரை, ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைவிடச் சற்று மேலான பாடப் பகுதிகளைக் கொண்டதாகவும் தமிழ்நாட்டினுடைய பாடத்திட்டம் இருக்கிறது. இதனால் கல்வித்தரம் குறைவென்ற குற்றச்சாட்டும் எழ வாய்ப்புகள் இருக்கவில்லை.

ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆதியவற்றின் பாடத்திட்டங்களில் பல ஒப்புமைகள் இருந்தாலும், கற்பித்தல் முறை, தேர்வு முறை, புரிதலுக்கான வழிமுறைகள், பயன்பாட்டுப் பார்வை போன்றவற்றில் பல வேறுபாடுகள் நிலவின; இன்று வரை அவை நீடிக்கின்றன.
மேலும், நீட் என்று அழைக்கப்படும் நுழைவுத் தேர்வு முறையும் முற்றிலும் வேறானதாக இருந்தது.

முதல் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணாக்கர், மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக மட்டும் வேறொரு பாடத்திட்டத்தினைப் பயிலவேண்டிய நிலை ஏற்பட்டது.

அத்துடன், மாணவர் அறிதிறனை மதிப்பிடும் முறையும் நுழைவுத் தேர்வில் வேறானதாக அமைந்திருந்தது.

12ஆம் வகுப்பிற்கான தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவது தமிழ்நாட்டில் தொழிற்கல்வி, கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு அடிப்படையாக இருப்பதால், இன்று வரை அவற்றை முற்றிலும் புறக்கணித்துவிட்டு மருத்துவ நுழைவுப் படிப்புக்காக மட்டும் காலத்தை ஒதுக்க இயலாத நிலையில் தமிழக மாணாக்கர் இருந்தனர்.

பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் முடிந்த பின் இடைப்பட்ட ஓரிரு திங்கள்களுக்குள் தங்களுக்குத் தொடர்பில்லாத, முற்றிலும் வேறான ஒன்றிய அரசின் பாடத்திட்டங்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதும் பயிற்சி பெறுவதும் தேர்வு முறையில் கடைப்பிடிக்கப்படும் கருத்துருக்களின் பயன்பாட்டு முறைமைகளைக் கற்றுத் தேர்வதும் இயலாததாக அமைந்துவிடுகிறது.

‘இதனால், மருத்துவக் கனவில் இருப்போர், பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின்னர் ஓராண்டு பயிற்சி நிறுவனங்களில் பெரும் செலவுகளைச் செய்து சேரவேண்டிய இன்றியமையாமையும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவ நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி தருகின்ற வாய்ப்புகளை ஆங்காங்கே ஏற்படுத்தித் தந்தாலும், குறுகிய காலத்தில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளப் பலரால் முடிவதில்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையே நம்பியிருக்கும் எளிய ஏழை ஊரகப் பகுதி மாணவர்கள் இதனால் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டோராக மாறிவிடுகின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வினால் மாணவர்களிடையே சில பாகுபாடுகள் இயற்கையாகவே எழுந்துவிடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

  1. நகர்ப்புற, ஊரக மாணாக்கர் என்ற பாகுபாடு
  2. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
  3. ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே உருவாகும் வேறுபாடு
  4. தனியாகப் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெறாத மாணாக்கருக்கு இடையில் எழும் பாகுபாடுகள்
  5. வளம் கொண்டோர் மற்றும் வளமில்லாதோர் என்ற பாகுபாடு.

இவற்றுக்கான தீர்வினைக் காணாவிட்டால் சமூகநீதி என்பது பெரும்பகுதி மக்களுக்கு மறுக்கப்பட்டதாகிவிடும்.

தமிழ்நாட்டில் 2024ஆம் 7,60,606 பேர் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை எழுதினர். இவர்களில் 3,42,000க்கு மேற்பட்டோர் அரசுப் பள்ளிகளில்தான் படித்து முடித்திருந்தனர். அதாவது 45% அளவினர் அரசுப் பள்ளிகளைச் சார்ந்திருந்தனர். எஞ்சியோர் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆவர்.

தேர்ச்சி என்று எடுத்துக்கொண்டால், அரசுப் பள்ளிகள் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49%, தனியார் பள்ளிகள் 98.70% என்ற அளவில் அமைந்து, அனைத்துமாகச் சேர்ந்து 94.56% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவற்றைப் பார்க்கும்போது அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அளவு பாராட்டத் தக்கதாகத்தான் இருக்கிறது.

ஆனால், நீட் தேர்வுக்கு முன்னர் 0.7% மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். ஆனால், நுழைவுத் தேர்வின் அறிமுகத்துக்குப் பின் இந்த அளவு குறைந்து 0.1% மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க முடிந்தது. இந்த அவலத்தைப் புறந்தள்ளிவிட இயலாது.

‘நுழைவுத் தேர்வுக்கு முன்னர்கூட மிகக் குறைந்தோரே மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது என்றாலும், பின்னர் அதைவிட எண்ணிக்கை குறைந்துவிட்டதைத் தெளிவாகக் காண முடிகிறது.

ஒன்றிய அரசுப் பாடத்திட்டத்தில் படித்தோர் 2024இல் 74,337 பேர் மட்டுமேயாவர். அவர்களின் தேர்ச்சி அளவு 98.74% ஆகும்.

‘அதாவது, ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்தோருக்கும், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்தோருக்கும் இடையேயான தேர்ச்சி அளவில் பெருத்த வேறுபாடுகள் இருக்கவில்லை.

சமூக-பொருளிய-பண்பாட்டு-இருப்பிடக் காரணிகளால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் மிகு மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்கும் உயர் நிலையினை அடைய முடியாமல் போய்விடுகிறது. மேலும், நுழைவுத் தேர்வுகளும் பெருத்த தடையாக இடைவெளியினை இப்போது மிகுதிப்படுத்திவிட்டதைக் காணலாம்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

வளம் கொண்ட பகுதியினருக்கு, பயிற்சிக்கான வாய்ப்புகள், அத்தகைய பயிற்சிகளுக்காகச் செலவிடக்கூடிய செல்வம், இவற்றால் அவர்கள் எடுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் ஆகியன இயல்பாகவே அவர்களுக்கு ஓர் உயர்நிலையினைப் பெற்றுத் தந்துவிடுகின்றன.

இதனால், இந்த வளமான மாணவர்களே பெரிதும் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குறைந்த கட்டண இடங்களையும் அள்ளிக்கொள்கின்றனர்.

தங்களது திறமை, விடாமுயற்சி, ஈடுபாடு, ஆர்வம், எதிர்கால நம்பிக்கை போன்ற தகுதிகளால் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை ஒருசிலர் பெற்றாலும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் அவற்றுக்கான கல்விக் கட்டணம், தங்கும் விடுதிச் செலவுகள் போன்றவற்றைச் செலுத்த இயலாததால் வாய்ப்புகளை இழக்கின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் வழியாகவே இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. எஞ்சியுள்ள 15% இடங்கள் அனைத்திந்திய அளவிலான ஒதுக்கீடு என்று தட்டிப் பறிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் தமிழ்நாடு அரசின் முழு உதவியோடு நடத்தப்படுகின்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய இட ஒதுக்கீடு என்பது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் தெரியவில்லை. ஆனால், எந்த வகையிலான சட்டங்களோ, விதிகளோ, முறைமைகளோ இல்லாத போதிலும், இத்தகையதொரு ஒதுக்கீட்டினை உச்ச நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்துவிட்டது.

தமிழ்நாட்டு மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள 15% ஒதுக்கீடுகளைப் பெற முடியும் என்றாலும், எதிர்காலத்தில் தாங்கள் படித்த மாநிலங்களில் பணிபுரியும் நிலையில் இல்லாதோர் பிற மாநிலங்களுக்குச் செல்வதில் பயன் எதுவும் இருக்கப்போவதில்லை. அத்துடன், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளும் இடங்களும் மிகுதி. இதனால், தமிழக மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பெரிதும் இழக்கின்றனர் என்பதில் அய்யமில்லை.

தன்நிதித் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65% இடங்களைத் தகுதி அடிப்படையில் கலந்துரையாடல் வழியாக அரசு நிரப்புகிறது. எஞ்சியுள்ள 35% இடங்கள் மேலாண்மையினரின் ஒதுக்கீடாகக் கருதப்பட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இருந்தாலும் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற வளமான பகுதியினரே பயன் பெறுகின்றனர்.

மருத்துவக் கல்விக்குத் தகுதிதான் அடிப்படை என்றால், மேலான்மையினர் ஒதுக்கீடு ஏன் என்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் இல்லை.

கல்விக் கட்டணம் மிகுதியாக இருப்பதால் இந்த இடங்களில் ஏழை எளிய ஊரகப் பகுதியினர் சேர முடிவதில்லை. இதனால் தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் பெரிதும் வளமான மாணவர்களுக்கான ஒதுக்கீடு போலவே அமைந்துவிடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இவையன்றி, இந்திய ஒன்றியம் முழுதும் 59 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில் 14 தமிழ்நாட்டுக்குள் இருக்கின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என அழைக்கப்படும் அனைத்தும், தனியார் தன்நிதிக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டவைதாம். பின்னர், பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மகுடம் சூட்டப்பட்டவை அவை.. இருந்தாலும், இவை தமிழக அரசின் சேர்க்கை முறை, இட ஒதுக்கீடு ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டுத் தனி உரிமையுடன் நடந்துகொள்கின்றன.

ஒன்றிய அரசினால் நடத்தப்படும் சேர்க்கை முறையில் இவற்றுக்கும் இட ஒதுக்கீடும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் பொருந்தும் என்றாலும், தனியார் தன்நிதிக் கல்லூரிகள் போன்று கட்டணங்களைக் கொண்டிருப்பதால் ஏழை எளிய ஊரக மாணவர்கள் அங்கு இடம் பெறக்கூடிய நிலைமைகள் உருவாகவில்லை.

நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படை என்பது தனியார் தன்நிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் என்றாலும், கட்டணப் பெருக்கத்தினால் வளமானோரே வாய்ப்புகளைத் தட்டிப்பறித்துக்கொள்கின்றனர்.

மேலும், கட்டண மிகுதியால் இங்கு பல இடங்கள் நிரப்பப்படாமல் இருந்துவிடுகின்றன. இதனால், அந்த இடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத் தேர்வில் பெறவேண்டிய குறைந்த அளவு தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவு நுழைவுத் தேர்வு மதிப்பெண் எனத் தகுதி அளவு குறிக்கப்பட்டிருந்தாலும், அவை விருப்பம் போலக் குறைக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வெறும் 0 மதிப்பெண் பெற்றிருந்தோரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. உச்ச நீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் தருகிறது.

ஆனால், உரிய மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏழை எளியோருக்கு மருத்துவக் கல்வி என்பது கனவாகவே கடந்து விடுகிறது.

இதுதான் உண்மை நிலை என்றால், தொடர்பில்லாத பாடத்திட்டத்தைப் பயின்று காலத்தை வீணடித்து, பொருள் செலவினை ஏற்றுக்கொண்டு, அதற்காக நுழைவுத் தேர்வினை நாடகம் போல் ஏன் நடத்தவேண்டும் என்ற வினா எழுவது இயற்கை.

வளம் கொண்டோர் தகுதி அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரியில் சேருகிறார்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளவே இந்த நீட் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பயிற்சியகங்கள், தனியார் மருத்துவ நிறுவனங்களின் கொள்ளைக்காகவே நடத்தப்படுகின்றன.

நுழைவுத் தேர்வு இல்லாத காலத்தில் பன்னிரண்டாவது வகுப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற ஒரு வரையறை இருந்தது. இது இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடு முறியடிக்கப்பட்டுவிட்டது. நுழைவுத் தேர்வு எழுதினால் மட்டும் போதும் என்ற நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.

‘நுழைவுத் தேர்வு கூடாது’ எனத் தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலாகப் பெரிதும் ஓங்கி ஒலிப்பது, அதோடு நின்றுவிடக்கூடாது. இதனால் மட்டுமே சமூக நீதிக்கான வாய்ப்புகள் உருவாகாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இவற்றுக்கு மேலாக அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும்.

1. தகுதி இல்லாதோருக்கு வாய்ப்பளிக்கும் நுழைவுத் தேர்வில் உண்மையும் நேர்மையும் இல்லாததால், அது நீக்கப்படவேண்டும்

2. சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினால் மட்டும் ஏற்படுத்திய 15% அனைத்திந்திய ஒதுக்கீட்டு முறை நிறுத்தப்படவேண்டும்

3. அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாது, தன்நிதிக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அனைத்து மருத்துவ இடங்களும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படவேண்டும்

4. நுழைவுத் தேர்வினை நீக்குவதன் வழியாக, தன்நிதி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களை விருப்பம்போல் நிரப்பிக்கொள்ள வாய்ப்புகளை வழங்கிவிடக்கூடாது. அரசு முடிவு செய்யும் கட்டணங்களுக்கு மேலாக மிகு தொகை பெறுவது தடுக்கப்படவேண்டும்

5. தமிழ்நாட்டில் 45% பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்வதால், அவர்களுக்கான ஒதுக்கீட்டினை மேலும் மிகுதிப்படுத்தவேண்டும்.

நுழைவுத் தேர்வு வருமுன் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடந்து வந்தபோது ஒன்றியப் பாடத்திட்ட மாணவர்கள், தாங்கள் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் படித்தோர் அளவுக்கு மதிப்பெண்கள் பெற இயலவில்லை என்னும் நிலையினைச் சுட்டிக்காட்டி, இதனால் மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் தங்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது ஒன்றியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்களைச் சீராக்கித் தரும் திட்டத்தினை உயர்நீதிமன்றம் வகுத்து, அவர்களுக்குச் சில புள்ளிகள் சேர்க்கப்பட்டன.

அய்.அய்.எம். எனும் உயர் மேலாண்மை நிறுவனங்களில்கூட, பொறியியல் படிப்பு அல்லாதோர் மற்றும் மகளிர் போன்றோருக்குச் சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இவை போன்று, தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% ஒதுக்கீட்டுக்கு அப்பால் மதிப்பெண்கள் சீராக்குதல் என்ற அளவில் கூடுதலாக மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படவேண்டும்.

சமூக நீதியினைப் புறக்கணித்துவிட்டால், நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லையென்றாலும் பயன்கள் அனைத்தும் பெரும்பாலான மக்களுக்குக் கிடைக்காமல் போகும். இதனையும் மறந்துவிடக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button