அறிக்கைகள்

துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

குழப்பம் ஏற்படுத்தும் தீர்ப்பு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது குழப்பம் ஏற்படுத்துவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் நியமனம் பெற்ற ஆரம்ப நாளிலிருந்து திரு ஆர்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத நெருக்கடியை ஏற்படுத்தி வந்த ஆளுநரின் பொறுப்பற்ற செயலை தடுக்க வேண்டும் என பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் முறையிடப்பட்டது. இதன் மீது எந்த விளைவும் ஏற்படாத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

ஆளுநரின் உள்நோக்கம் கொண்ட எண்ணத்தை உணர்ந்து கொண்ட உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநர் கிடப்பில் போட்டு, முடக்கி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனச் சட்டப்படி, துணை வேந்தர்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாஜக வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முறை, அரசு தரப்பு கேட்டுக் கொண்ட நியாயமான கால அவகாசம் தர மறுத்த விதம், அவசர, அவசரமாக இடைக் காலத் தடை உத்தரவு பிறப்பித்த வேகம் அனைத்தும் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தி, அடுக்கடுக்கான வினாக்களை எழுப்புகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் கடந்த 13 ஆம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்திற்கு எழுதியுள்ளார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருப்பது, குடிப்பங்களை ஏற்படுத்த வலிந்து மேற்கொள்ளப்பட்ட செயலாகும். நீதி பரிபாலன வரலாற்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button