மாநில செயலாளர்

ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்டுவோம்

மாநிலச் செயலாளர் கடிதம்

தோழர்களே வணக்கம்.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தன்னை இஸ்லாமியர் என்று கூறுவதோடு, நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட் எனப் பிரகடனப்படுத்துகிறார். அமெரிக்க அதிபர் எவ்வளவு மிரட்ட முடியுமோ அவ்வளவு மிரட்டியும் எதற்கும் பணியாத மம்தானி, சோசலிசத் திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்கிறார். அமெரிக்க அதிகார உலகம் மிரண்டு நிற்கிறது.

ஜே.என்.யூ தேர்தலில் மீண்டும் திருப்புமுனையாக, இடதுசாரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இடது வெற்றியைத் தடுக்க ஆளும் ஒன்றிய அரசு பல முயற்சிகளைச் செய்து பார்த்தது. எனினும் இடது வெற்றியைத் தடுக்க இயலவில்லை.

SIR இன்று அரசியல் உரையாடல் ஆகிவிட்டது. SIR இதனை தோலுரித்தால் தேசியக் குடியுரிமைச் சட்டம் தெரியும். இதனையும் உரித்துப் பார்த்தால் சிறுபான்மை மக்கள் தெரியும். அகதி முகாம் தெரியும்.

சிறுபான்மை மக்களைக் கண்டறிந்து, நீக்கி, அவர்களை ஓட்டுரிமை இல்லாமல் ஆக்கினால், அவர்களின் நாட்டு உரிமையும் பாதிக்கப்படும் அல்லவா? பின்னர் நாடற்றவர் அகதி முகாம் தானே? பிஜேபி சூழ்ச்சி அரசியல் புரிகிறது அல்லவா?

பொதுக் கூட்டங்கள் மற்றும் பரப்புரை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த தமிழக அரசு கூட்டிய அரசியல் கட்சிகளின் பங்கேற்பில், நமது கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றோம்.

நீதிமன்ற வழிகாட்டுதலை பொதுவாக மதித்தாலும், அதை ஏற்பதற்கில்லை.

காரணம், இனி பெரிய பொதுக்கூட்டம், பேரணி நடத்தினால் காப்புத்தொகை ஒரு லட்சம் முதல் 5 லட்சம், 10 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும். பெரிய நிகழ்ச்சிகளில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் இதர முக்கியப் பாதுகாப்பு வசதிகள் அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும்.

இவை யாவும் பல கட்சி இயங்கும் முறையில் சாத்தியமற்றது. ஜனநாயகத்தைக் கடந்து கார்ப்பரேட் அரசியல் சூழலை இது வலுவாக்கும். நமது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு இது ஏற்பல்ல என நாம் நிராகரித்து விட்டோம்.

தோழர்களே!

நவம்பர் புரட்சி தினம் மிகச் சிறப்பாக பாலன் இல்லம் துவங்கி, நமது கட்சியின் கிளைகள் வரை மிக எழுச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது. பல இடங்களில் புதிய இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்றது சிறப்பாக உள்ளது. எழுச்சி தொடர்க!

தோழர்கள் இப்ராஹிம், டி.எம்.மூர்த்தி, வ.மணிமாறன் இன்னும் பிற தோழர்களின் முன்முயற்சியில், சென்னை பாலன் இல்லத்தில் சிபிஐ ஐடி விங் கூட்டம் நவம்பர் 7ஆம் தேதி, பகல் 11 மணிக்குத் துவங்கியது. ஏறத்தாழ 30 மாவட்டங்களில் இருந்து, 75 இளம் ஆண், பெண் தோழர்கள் பங்கேற்றனர்.

இதில் பாதி கட்சிக் குடும்பம், மறு பாதி புதியவர்கள். படிப்பும், நுட்ப அறிவும், லட்சிய வேட்கையும், கட்சியின் மீதான பற்றும் அவர்கள் உரையாடல் கருத்துக்களில் தென்பட்டது.

மானுடத்தின் மகத்தான மார்க்சிய விழுமியங்களைச் சுமந்தபடி இந்த இளம் தோழர்கள் கருத்துக் களமாட தயாராகி விட்டார்கள்.

புதிய கட்டமைப்பில் இதன் செயல் துவங்கி விட்டது. நவம்பர் 11ஆம் தேதி திமுக உள்ளிட்ட நமது தோழமைக் கட்சிகள் முன்னெடுக்கும் ஷிமிஸி எதிர்ப்புப் போராட்டத்திலும் நாம் பங்கேற்றோம்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடியோடு அழிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட கொடிகளோடு அணி திரண்டு போராட்டத்தில் பங்கேற்றோம்.

நூற்றாண்டு கால நமது முன்னோர்களின் கனவுகளைச் சுமந்தபடி, நாம் முன்னேறுவோம் தோழர்களே!

தோழமையுடன்

மு.வீரபாண்டியன்

மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button