மாநில செயலாளர்

மக்கள் சந்திப்பு இயக்கமாக முன்னெடுப்போம்!

மாநிலச் செயலாளர் கடிதம்

தோழர்களே வணக்கம்

இலங்கையில் வரலாறு காணாத புயல், மழை, வெள்ளம். இலங்கை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டார்கள். அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பேரிடர் கால உதவிகள் என அனைத்தும் வழங்க ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவின் உதவியை இலங்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா உதவி செய்துள்ளது. இன்னும் கூடுதலாக உதவ வேண்டும்.

தமிழக முதல்வரும் உதவிட தயார் என அறிவித்துள்ளார்.

அருகமை நாடுகளில் பேரிடர் சூழ்ந்தால் உதவிட வேண்டும் என்று முதன்முதலில் சட்ட வடிவம் கொடுத்த நாடு கியூபா!

சிறிய நாடுதான் எனினும் எபோலா போன்ற கொடிய நோய் ஆப்பிரிக்காவை பாதித்தபோது வளர்ந்த நாடுகள் அஞ்சி நின்றன. ஆனால் உதவி செய்தது கியூபா.

தென் அமெரிக்காவில் பல நாடுகளில் மணல் புயல் ஏற்படும். பேரழிவைத் தரும் பேரிடர் அது. அங்கேயும் கியூபா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.

கொரானா தொற்று நிகழ்ந்தபோது உலகமே வியக்கும்படி கியூபா நடந்து கொண்டதையும் அறிவோம் அல்லவா?

அமெரிக்கா, ஐரோப்பா இதுவரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு செய்த நேரடி மருத்துவ சேவை 10 சதம் என்றால், கியூபா செய்த நேரடி மருத்துவ உதவி 70 சதம்.

மருத்துவப் பணிகளிலேயே நோய் பாதித்து இறந்த மருத்துவர்களிலும் கியூபா மருத்துவர்கள்தான் மிக அதிகம்.

சிறிய நாடுதான் எனினும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் மானுட சேவையை இத்தகைய திசையில் திருப்பியவர் தோழர் பிடல்!

தோழர்களே,

தமிழ்நாட்டிலும் தொடர் மழை, புயல், வெள்ளம் பாதிக்கிறது.

கட்சித் தோழர்கள் பார்வையாளராக இருந்துவிடக்கூடாது என கட்சி அறிவுறுத்துகிறது.

இளம்பருவத் தோழர்கள் – செந்தொண்டர்கள் என பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டும்.

முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர, தோழர்கள் களத்தில் இறங்கவேண்டும். மக்கள் பணி செய்ய வேண்டும்.

இது நமது முன்னோர்கள் காட்டிய பாதை.- இதன்வழி நடப்போம்!

ஜனசக்தி – ஆயுள் சந்தா- ஆண்டு சந்தா, ஜனசக்தி காலண்டர் நூற்றாண்டு சிறப்பிதழ் என தமிழ்நாடு முழுவதும் பணிகள் தொடர்வது உத்வேகம் அளிக்கிறது.

மிக மிக முக்கிய பணியாக உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், சேர்த்தல் பணிகள் காத்திருக்கின்றன.

லெனின் துவக்கிய பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியின் உறுப்பினர் நாம்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் நமது அரசியல். இந்தியாவில் நூறு ஆண்டுகளில் பல தடைகள், சதி வழக்குகள், சிறைச்சாலை, தூக்கு மேடைகள் இப்படி சந்தித்த இன்னல்கள் மட்டுமல்ல- சாதித்த சாதனைகளும் ஏராளம். கம்யூனிஸ்ட் என்பதே சரித்திர மதிப்பல்லவா? அதன் உறுப்பினர் நாம் என்பதனை விட வேறு என்ன வேண்டும்?

நிதி குறித்து லெனின் பின்வருமாறு கூறுகிறார்,

கட்சி உறுப்பினர் தரும் நிதி- ஏகாதிபத்தியத்தை முதலாளித்துவத்தை, பாசிசத்தை எதிர்த்து நாம் தூக்கிடும ஆயுதப் போரின் – துப்பாக்கி ரவை.

பிரமுகர் தரும் நிதியை ஒருமைப்பாடு என்கிறார்.

மக்கள் தரும் நிதியை – மக்களிடம் கொண்ட தொடர்பு என்கிறார்.

இந்த தொடர்பில்தான் கட்சி வாழும்.

எனவே, கட்சி உறுப்பினர் என்கிற முறையில் செயலாளர் துவங்கி கிளைச் செயலாளர், உறுப்பினர் என அனைவரும் கொடி ஏந்துவோம், உண்டியல் ஏந்துவோம். மக்கள் சந்திப்பு இயக்கமாக இதனை முன்னெடுப்போம்.

தோழமையுடன்

மு.வீரபாண்டியன்

மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button