கட்டுரைகள்

சமூக நீதியைப் பாதுகாக்க அணிதிரள்வோம்

ஜி.ஆர்.இரவீந்திரநாத்

வேலைப் பிரிவினையாலும், பண்டைய இந்தியாவில் நிலவிய சமூகப் பொருளாதார உற்பத்தி முறையாலும், இந்தியாவின் தனித்தன்மையான நிலைமைகளாலும், வேறு பல காரணங்களாலும் சாதியச் சமூக அமைப்பு உருவானது. மேலிருந்து கீழான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட படிநிலைச் சமூகமாக அது உருவானது.

பிறப்பின் அடிப்படையில், சாதி அடிப்படையில் குலத்தொழில் முறை உருவானது. அடித்தட்டுச் சாதிகள் கடுமையான, இழிவான, அசுத்தமான வேலைகளில் சாதி அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக ஈடுபடுத்தப்பட்டன. உயர் சாதியினருக்கு, ஆளும் வர்க்கத்திற்கு மூளை உழைப்புச் சார்ந்த அதிகாரமிக்க, கவுரவமான வேலைகள் ஒதுக்கப்பட்டன.

இந்தச் சாதி அடிப்படையிலான வேலைப் பிரிவினையை, உழைப்புச் சுரண்டலை மிகக் கறாரான முறையில் நடைமுறைப்படுத்திட, அரசு அதிகாரம், மனுதர்மம் போன்ற சட்டங்கள், வர்ணக் கோட்பாடு, கலை இலக்கியம், இதிகாசங்கள், புராணங்கள், பகவத் கீதை, கடவுள், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், மூடநம்பிக்கைகள், அகமண திருமண முறை போன்றவை பயன்படுத்தப்பட்டன.

மனு தர்மம் கி.மு.170-150 காலகட்டத்தில், புஷ்யமித்திரன் ஆட்சிக் காலத்தில் அரசச் சட்டமானது.

ஆதிக்கச் சாதிகளின் நலன்களுக்கு உகந்த முறையில், சாதிய ஏற்றத் தாழ்வைப் பாதுகாக்கக்கூடிய மிக மோசமான, கடுமையான சமூக நீதிக்கு எதிரான முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் மனுதர்மம் எனக் கூறலாம்.

இந்தியச் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு – முன்னேற்றத்திற்குச் சாதியச் சமூக அமைப்பும், மனுதர்மச் சட்டம் போன்றவையும் மிகப் பெரிய தடையாகியன.

இத்தகைய நிலைமைகளில் 1858ல் சாதி-மதம்-மொழி-இனம் பாகுபாடின்றி இந்தியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என விக்டோரியா மஹாராணி அறிவித்தார்.

1871 ல் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை எந்த ஒரு சாதியினரும் தனிமுக்கியத்துவம் பெற்றுவிடாத வகையில் பார்ப்பனரல்லாத இந்துக்களும் முஸ்லீம்களும் பெருமளவில் பதவிகளைப் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் அரசின் உயர் நிர்வாகப் பதவிகளில் மிகப் பெரும்பான்மையாக இடம் பெற்று, முழுமையான ஆதிக்கம் செலுத்தினர். அது பிரிட்டிஷ் அரசு நிர்வாகத்தில் ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கக் காரணமாயின.

21.11.1947 ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓ.பி.இராமசாமி ரெட்டியார் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனியாக 14 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். அது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் 1950ல் தீர்ப்பளித்தது.அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் போன்றோரின் போராட்டத்தால் கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க முதல் அரசியல் சட்டத் திருத்தம் ஜவஹர்லால் நேருவின் அரசால் 1951ல் கொண்டு வரப்பட்டு பிரிவு 15 ல்1 ஆம் பகுதி சேர்க்கப்பட்டது.இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

மத்திய அரசு தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என 1970-ல் அறிவித்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவில்லை.

1971 ல் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18 விழுக்காடுமென 49 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட அன்றைய முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பொழுது 1.2.1980-ல் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். இதனால் மொத்த ஒதுக்கீட்டு அளவு 68 விழுக்காடாக உயர்ந்தது.

பழங்குடியினருக்கு தனியாக 1 விழுக்காடு இட ஒதுக்கீடு தி.மு.க ஆட் சியில் கலைஞரால் வழங்கப்பட்டது. இடஒதுக்கீட்டு அளவு 69 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 1989 ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடாக கலைஞர் ஆட்சியில் 20 விழுக்காடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், திரு. வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் 27 விழுக்காடு இடதுக்கீட்டை ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் வழங்கிட 13.8.1990-ல் உத்தரவிட்டார்.

இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என மீண்டும் 16.11.1992 அன்று தீர்ப்பை வழங்கியது.

அது மட்டுமன்றி, கிரிமிலேயரை நடைமுறைப் படுத்திடவும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கிரிமிலேயர் முறையை கடுமையாக எதிர்த்தது. கிரிமிலேயரை நடைமுறைப் படுத்தக் கூடாது என்றது. மண்டல் குழு பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தக் கோரியது. இது குறித்து நாடாளுமன்றத்திலேயே தோழர் இந்திரஜித் குப்தா வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை நிகழ்த்தினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1979 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற பொருளாதார வரம்பை ஆண்டு வருமானம் ரூ.9,000 என நிர்ணயித்து திணித்தார். அதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது.

2007 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி இருக்க வேண்டும். அது வழங்கப்படவில்லை. இவ்விடங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திடவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும் தொடர்ந்து போராடி இரண்டாண்டுகளுக்கு முன்பு பெற்றன.

இந்நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் 1993 ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார். பிரத்தியேக காரணங்களின் அடிப்படையில் இட ஒதுக் கீட்டை 50 விழுக்காட்டிற்கும் மேல் மாநில அரசுகள் வழங்கலாம் என மண்டல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை கவனத்தில் கொள்ளாமலும், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமலும், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடையை தடாலடியாக விதித்தது.

இட ஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு 50% என நிர்ணயித்துள்ளதை எதிர்த்தும், பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறிய பிரிவினரை (கிரிமீ லேயர்) இட ஒதுக்கீடு பெறும் உரிமையிலிருந்து நீக்கிடவும் போடப்பட்ட ஆணையை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் அஇஅதிமுக அரசு 22.3.93 அன்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இப்பிரச்சனைக்காக தமிழக சட்ட மன்றத்தின் சிறப்புக் கூட்டம் 9.11.1993ல் கூட்டப்பட்டது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ம த்திய அரசை வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.இத்தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் ஒட்டுமொத்தத் தமிழகத் தின் உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் 16.11.93 அன்று மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து மேலும் விவாதித்திட 26.11.93 அன்று அன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதையடுத்து அரசியல் சட்டத்தின் 31 சி பிரிவின் கீழ் தமிழக சட்டமன்றத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட சிறப்பு சட்ட முன்வடிவு 30.11.93 ல் தமிழக சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, 31.11.93 அன்று நிறை வேற்றப்பட்டது.

19.7.94 31-சி பிரிவின் கீழ் ஓர் சட்டத்தைக்கொண்டு வந்து அதை இந்திய அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் சேர்த்துவிட்டால் அச்சட்டத்தை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது.எனவே தான் இப்படி ஒரு சட்டம், சட்ட மேதைகளின் ஆலோசனைகளையும் பெற்ற பிறகு கொண்டு வரப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு 19.7.94 ல் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஒப்புதல் அளித்தார்.

இச்சட்டத்தை 9 வது அட்ட வணையில் இடம் பெறச் செய்திட 76 வது அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 31.8.94 முதல் நடை முறைக்கு வந்தது. ஆனால், இதையும் மீறி உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டது. 2007 ல் உச்ச நீதிமன்றம் 9 வது அட்டவணையில் உள்ள சட்டங்களையும் நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்தலாம் எனக் கூறியது. இது புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.சுபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் ஆகியார் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை 13.7.2010 அன்று வழங்கியது.

50 விழுக்காடுக்கு மேல் இடதுக்கீடு வழங்கலாம்,மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கலாம் இட ஒதுக்கீட்டின் அளவை மாநிலங்களே முடிவு செய்யலாம் என்ற முக்கிய அம்சங்கள் அடங்கிய இத்தீர்ப்பு இட ஒதுக்கீடு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.

முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு (EWS) 10 விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்கலாம் என மோடி அரசு, சமூக நீதிக்கு எதிராக அரசியல் சட்டத்திருத்தம் செய்தது.

இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. இந்த ஈ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வெளியானது. அது சமூக நீதிக்கு எதிரானது. ஆயினும் அத்தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்பிற்குரியது. இந்நிலையில் பல மாநிலங்கள் 50% க்கு மேல் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திட முயல்கின்றன.

இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், முற்போக்கு அமைப்புகளும், சமூக நீதி அமைப்புகளும் தொடர்ந்து போராடி பெற்ற இட ஒதுக்கீடும், சமூக நீதியும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் ஒன்றிய மதவாத பாஜக அரசால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மீதான தாக்குதல்களும் மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளன.

எனவே, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, சமூக நீதிக்கு, சமத்துவத்திற்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து களம் காண்போம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை, சமூக நீதியைப் பாதுகாத்திட, வரும் நவம்பர் 18 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டம் வெற்றி பெற அணிதிரள்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button