கட்டுரைகள்வரலாறு

ஆவணம் அறிவோம் – 11: வெளி நாட்டினர் குறிப்புகள்

ஆ.சிவசுப்பிரமணியன்

ஒரு நாட்டின் வரலாற்று வரைவுக்கான அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்களில் ஊர் சுற்றிப் பார்க்கும் பயணிகளாகவோ, வணிகர்களாகவோ, தூதுவர்களாகவோ வந்த வெளிநாட்டவர்களின் பயணக்குறிப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

ஏனெனில் இவர்கள் அயற்பண்பாட்டினர் என்பதால் அரசியல், வாணிபம், சமயம் என்ற எல்லைக்குள் மட்டும் தம் பார்வையைக் குறுக்கிக் கொள்ளாது வேறுபாடான சமயம், பழக்கவழக்கங்கள், பண்பாடு என்பனவற்றை அறிந்து கொள்வதில் ஓரளவுக்காவது ஆர்வம் காட்டுவார்கள். மொழி புரியாமை, தம் இனம், சமயம் பண்பாடு சார்ந்த தன்னின உயர்வுப் பார்வை என்பனவற்றால் அவர்களின் புரிதலில் சில தவறுகள் ஏற்படுவதுண்டு. என்றாலும் அப்பதிவுகளை முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் அவர்கள் கண்டு கேட்டறிந்த நிகழ்வுகளின் பதிவாக அவை விளங்குவதுதான். ஆனால் இவற்றை எல்லாம் படித்தறியும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை.

நீலகண்ட சாஸ்திரியின் நூல்

தமிழ் நாட்டைப் பொறுத்தளவில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, சீனம், பாரசீகம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவை உள்ளன. இந்நிலையில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி தென் இந்தியா குறித்த பல்வேறு வெளிநாட்டவரின் பயணக்குறிப்புகளைத் திரட்டி 1939 ஆவது ஆண்டில் ‘Foreign Notices of South India (From Megasthenes To MA Huan)’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள நீண்ட முன்னுரையும் வெளிநாட்டுப் பயணிகளின் பதிவுகளுக்கு அவர் எழுதியுள்ள அடிக்குறிப்புகளும் வெறும் தொகுப்பு நூலாக இதை மதிப்பிடாதவாறு செய்துள்ளன. அவரது வரலாற்றுப் புலமையையும் கடின உழைப்பையும் இக்குறிப்புகளில் காணமுடிகின்றன. ஆங்காங்கே அவரது வைதீகப் பார்வையும் வெளிப்படுகிறது. சான்றாக இம்மொழிபெயர்ப்பு நூலில் (பக்கம் 267) இடம்பெற்றுள்ள “கடல்கட்டிகள்” என்போர் குறித்த அடிக்குறிப்பைக் குறிப்பிடலாம்.

இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 1976 இல் வெளியானது. அந்நூலின் ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரையில் அவர் எழுதியுள்ள செய்திகள் இந்நூலின் உள்ளடக்கத்தையும் அதன் தேவையையும் நாம் அறிந்து கொள்ள உதவும் என்பதால் அதன் தொடக்கப் பகுதியின் இரண்டு பத்திகள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன (தமிழ்ப்பதிப்பு 1976:V).

‘தென்னிந்தியாவின் முற்கால வரலாற்றுக்கு இதுவோர் ஆதார நூல். இந்த நூலைப் பொறுத்தவரையில் தென்னிந்தியா என்பது இலங்கையையும் உள்ளடக்கிய நிலப்பகுதியைக் குறிக்கிறது. வெளிநாட்டினர் பலர் தென்னிந்தியாவையும் இலங்கையையும் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அவை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காத நூல்களிலும் அறிஞர் குழுக்களின் வெளியீடுகளிலும் சிதறிக் கிடக்கின்றன. சாதாரண வாசகர்களுக்கும் அவை எளிதிற் கிடைக்குமாறு செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்த நூலை உருவாக்கியுள்ளேன். வெளிநாட்டார் சிலர் அரபு மொழியிலும் சீன மொழியிலும் எழுதிய குறிப்புகள் ஃபிரெஞ்சு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டுள்ளன. அவற்றுள் சில இந்நூலில் சேர்ப்பதற்காகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன’ (மேலது).

‘இந்த நூலிலுள்ள குறிப்புகள் பெரும்பாலும் கிரேக்க, லத்தீன், அரபு, பாரசீக ஆசிரியர்கள் எழுதியவை. அந்த மொழிகளில் எனக்குப் பயிற்சியில்லை. ஆனால் அவை தற்கால ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்தெழுதப்பட்டுள்ளன. அந்த மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில்தான் இந்த நூலை உருவாக்கியுள்ளேன். வெளிநாட்டார் எழுதிய குறிப்புகள் அனைத்தும் இந்த நூலில் இடம்பெறவில்லை. எனினும் முக்கியமான குறிப்பு எதனையும் நான் விடவில்லை’ (மேலது).

சாஸ்திரியாரின் இம்முன்னுரை, இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆவணங்கள் குறித்த பொதுவான அறிமுகத்தை நமக்கு வழங்கியுள்ளது. நூலில் மொத்தம் முப்பத்திநான்கு வெளிநாட்டவரின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவில் அவர்கள் கண்ட விலங்கினங்கள், தாவரங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், சகுனம் பார்த்தல், உணவுமுறை, விளைபொருள்கள், ஆடை, பருத்திநூல் துணிகள், அரசர்களின் வாழ்க்கைமுறை, முத்துக்குளிக்கும் முறை, கடற்கொள்ளை, தேவதாசிகள், அரசனின் மெய்க்காவலர்கள், தன்னைத்தானே கடவுளுக்குப் பலி கொடுத்தல், உடன்கட்டை ஏறுதல், குதிரை வாணிபம், கடல் வாணிபம், வெற்றிலைபோடுதல் என்பன குறித்த பல்வேறு செய்திகள் இக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் இங்கு அறிமுகம் செய்ய இயலாது என்பதால் ஒருசிலரது பயணக்குறிப்பின் சில பகுதிகளை மட்டும் அறிய முற்படுவோம்.

பாண்டியர் மரபில் ஆட்சி உரிமைப்போர்

முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கி.பி. 1288 முதல் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என இரு மகன்கள் இவனுக்கு இருந்தனர். இவர்களில் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகனாவான். வீரபாண்டியன் காதற் பரத்தையருள் ஒருத்தியின் மகன். பட்டத்தரசியின் மகனான சுந்தரபாண்டியனைப் புறக்கணித்துவிட்டு வீரபாண்டியனை இளவரசனாக குலசேகரபாண்டியன் நியமித்தான். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன் கி.பி. 1310 நடுப்பகுதியில் தன் தந்தையைக் கொன்றுவிட்டு அரசனாகத் தன்னை அறிவித்துக்கொண்டான். இச்செய்தியைக் கூறும் சாஸ்திரியார், வசப் என்ற அரேபியப் பயணி குலசேகரபாண்டியனுக்கும் கணிகையருக்கும் இடையிலான உறவு குறித்து எழுதியுள்ள குறிப்பை மேற்கோளாகக் காட்டியுள்ளார் (பக்கம்:48).

அக்குறிப்பில் வீரபாண்டியனின் தாயை, குலசேகரபாண்டியனின் “இடையில்லா இன்பத்துக்குக் காரணமானவள்” என்று கூறிவிட்டு அவனது அந்தப்புர வாழ்க்கையை வசப் பின்வருமாறு வருணித்துள்ளார்:

“அரசனுடைய நிர்வாக அலுவல்கள் முடிந்து, அரசவையின் கூட்டம் கலைந்த பின்னர், அவனுடைய அந்தப்புரத்தில் ஆயிரம் அழகிய கணிகையர் சூழ்ந்து அவனை மகிழ்விப்பது அந்த நாட்டு வழக்கம். அந்தக் கணிகையர் அவரவர்க்குரிய பணிகளில் ஈடுபட்டனர். சிலர் அரண்மனை அகவினைஞர்களாகவும், சிலர் மொழிபெயர்ப்பாளர்களாகவும் சிலர் குடிகலம் பரிமாறுபவர்களாகவும் பணியாற்றினர். ஆடவரும் மகளிரும் இரவும் பகலும் வரையறையற்றுக் கூடிக்களித்தனர். எந்தப் பெண்ணுக்குச் சீட்டு விழுகிறதோ அந்தப் பெண் அன்று அரசனுடன் உறங்க வேண்டும். அந்தநாட்டுப் பழக்கவழக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக இந்தச் செய்திகளை எழுதியுள்ளேன்” (பக்கம்:49).

இச்செய்தி ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கான அகக் காரணம ஒன்றை நாம் அறியச் செய்கிறது.

மார்க்கோபோலோ (1254-1324)

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைச் சேர்ந்தவர் மார்கோபோலோ. இவர், தம் சீனப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்புகையில் சோழமண்டலக் கடற்கரை வழியாகத் தமிழ்நாட்டை வந்தடைந்தார். பின் இங்கிருந்து பாண்டிய நாட்டிற்குப் பயணித்தார். அப்போது பாண்டிய நாட்டை முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான். பாண்டிய நாட்டில் அவர் கண்டும் கேட்டும் அறிந்துகொண்ட செய்திகளை அவர் எழுத்துவடிவில் பதிவு செய்துள்ளார். பின்னர் இது நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலில் அவரது கற்பனை வளமும் இணைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

பாண்டிய நாட்டில் “தையற்காரன் ஒருவனையும் காண இயலாது. அங்கேயுள்ள மக்கள் அனைவருமே நிர்வாணமாகவே காட்சி அளிக்கின்றனர்” என்று அவர் எழுதியுள்ளார். இதை மறுக்கும் வகையில் சாஸ்திரியார் தாம் எழுதியுள்ள அடிக்குறிப்பில் “பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கல்வெட்டொன்று தையற்காரர்கள் இருந்த செய்தியைக் குறிப்பிடுகிறது” என்று எழுதியுள்ளதுடன் அக்கல்வெட்டு இடம் பெற்றுள்ள கல்வெட்டுத் தொகுதியின் எண், கல்வெட்டின் எண் என்ற இரண்டையும் தந்துள்ளார். வரலாற்று ஆவணங்களை எச்சரிக்கை உணர்வுடன் பார்ப்பது போன்று ஒரு பயணியின் நேரடியான அனுபவக் குறிப்புகளும் பார்க்கப்படவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

முத்துக்குளித்தலை நேரில் பார்த்து அவர் எழுதியுள்ளது, ஒருவகையில் நேர்முக வருணனை போன்று உள்ளது (பக்கம்:266-268). மேலும் முத்துக்குளிக்கும் தொழில் நுட்பத்துடன் நின்றுவிடாமல் அதனுடன் தொடர்புடைய கூலி, வரி, பங்கு எனப் பொருளாதாரம் சார்ந்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன. “கிடைக்கின்ற முத்தில் பத்தில் ஒரு பகுதியை அரசனுக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்று மார்க்கோபோலோ எழுதியுள்ளார் (பதினாறாம் நூற்றாண்டில் போரச்சுக்கீசிய காலனியம் நிலைபெற்றவுடன் கிடைக்கின்ற முத்தில் நான்கில் ஒரு பங்கே முத்துக்குளிப்போருக்குக் கிடைத்ததாகப் பேராசிரியர் அருணாசலம் “தமிழகக் கடற்கரையில் முத்துக்குளித்தல் வரலாறு” என்ற தம் ஆய்வு நூலில் எழுதியுள்ளார். கிடைத்த முத்துக்களை நான்கு பங்குகளாகப் பிரித்து, (1) போர்ச்சுக்கீசிய படைத்தலைவன், (2) போர்ச்சுக்கல் மன்னன் (3) கத்தோலிக்கப் பாதிரியார்கள், என்போருக்குத் தலா ஒரு பங்கை வழங்கிவிட்டு எஞ்சிய ஒரு பங்கையே முத்துக்குளித்த பரதவர்கள் பெற்றுள்ளார்கள்.

அந்தப்புரம்

“அரசனுக்கு ஏறக்குறைய ஐந்நூறு மனைவியர் இருக்கின்றனர். எங்காவது ஓர் அழகிய பெண் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டால் உடனே அவளை அரசன் தன் மனைவியாக்கிக் கொள்கிறான். அவனுடைய தம்பியின் மனைவி ஒருத்தி மிகவும் அழகாயிருந்தாள். அவளை அவன் வன்முறையில் கைப்பற்றிக்கொண்டான். தம்பியோ தன்னுடைய மானக்கேட்டைப் பறைசாற்ற விரும்பாதவன். எனவே, அவன் அதைப்பற்றிக் கவலைப்படாதவன் போல இருந்துவிட்டான் (பக்கம்270).

பிற செய்திகள்

குதிரைவாணிபம், குதிரைவளர்ப்பு, தேவதாசிகள், சோதிடம், சகுனம் பார்த்தல் குறித்து விரிவான செய்திகள் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் நன்றாக அவதானித்துள்ளார் என்றே கூறவேண்டும். தண்ணீர் குடிப்பது குறித்து “அவர்கள் நீர் பருகப் பயன்படுத்தும் பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. மேலும் அவர்கள் பாத்திரத்தில் உதட்டை வைத்துக் குடிப்பதில்லை. நீருள்ள பாத்திரத்தை மேலே தூக்கிச் சாய்த்து, அதிலிருந்து தாரையாய் விழுகின்ற நீரை வாயில் பிடித்துக் கொள்கிறார்கள். யாருமே நீர்ப் பாத்திரத்தை வாயில் வைப்பது கிடையாது. புதியவர் யாரேனும் வந்தால் தங்கள் பாத்திரங்களைத் தரமாட்டார்கள். அவர்கள் கையில் நீரை ஊற்றிக் குடிக்கச் சொல்வார்கள்” (பக்கம்:277).

“அரசனுக்கு 300 மனைவிகள் இருக்கிறார்கள். இங்கெல்லாம் ஒருவனுடைய மனைவிகளின் தொகை அதிகமாக அதிகமாகப் பொதுமக்களிடையில் அவனுக்கிருக்கிற மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது” (பக்கம்:295).

======

இவ்வாறு தாம் முன்பின் அறியாத புதிய நிலப்பகுதிக்குச் செல்லும் அயற் பண்பாட்டுக்காரர் ஒருவர் அங்கு தாம் கண்ட காட்சிகளையும் கேட்ட செய்திகளையும், சுற்றுலா உணர்வு மட்டுமே கொண்டுள்ள பயணிகளின் பார்வையில் இல்லாமல் சமூகப் பார்வையில் எழுத்தாவணமாக்கும் போது அது வரலாற்றாவணமாகிவிடுகிறது. புரிதல் குறைபாட்டாலோ, தன்னின உயர்வு மனப்பாங்கினாலோ, அப்பதிவில் இடம்பெற்றுள்ள தவறுகளைக் களைந்து அதை ஒரு வரலாற்றாவணமாக்குவது வரலாற்றியலாளர் கடமையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button