கட்டுரைகள்வரலாறு

ஆவணம் அறிவோம் – 9: மோடி ஆவணங்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்

இதுவரை ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு, காகிதம் என்பனவற்றின் மீது எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை அறிந்து கொண்டோம். எழுதப்பட்ட பொருள்களின் பெயர்கள் அடைமொழியாக அமைந்து இவற்றை அடையாளம் காட்டின. நாம் இப்போது பார்க்க இருப்பது காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணங்களை.

ஆனால் இவை காகித ஆவணங்கள் என்ற பொது அடையாளத்தைப் பெறாது, மோடி என்ற முன்னொட்டைத் தாங்கியுள்ளன. இதற்கான காரணத்தை அறிய சிறிது வரலாற்றுக்குள் நுழைவோம்.

தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு:

துக்ளக் பரம்பரையினர் டில்லியை ஆண்டபோது தமிழ்நாட்டில் அவர்களது படையெடுப்பு நிகழ்ந்து அவர்களது கட்டுப்பாட்டிற்குள் தமிழ்நாட்டின் சிலபகுதிகள் வந்தன. விஜயநகர மன்னர், குமாரகம்பணன் என்ற தன்படைத் தளபதியை அனுப்பி மதுரையை மீட்டதுடன் தன் பேரரசின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டை மாற்றினார்.ஆளுநர் போன்று,வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிய ‘நாயக்’ என்ற பதவிப் பெயர் கொண்டவர்களை உருவாக்கினார். இதுவே நாயக்க மன்னர் என்று தமிழில் வழங்கலாயிற்று. இவர்களின் ஆட்சிப்பகுதி பாளையங்கள் என்ற சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இவற்றை நிர்வகிக்கப் பாளையக்காரர்கள் என்போர் நியமிக்கப்பட்டார்கள்.

தஞ்சை தாயக்கர்:

மதுரை நாயக்கராக இருந்த சொக்கநாதநாயக்கர் என்பவர் தஞ்சை நாயக்கர் மீது படையெடுத்து கி.பி. 1673 இல் அதைக் கைப்பற்றினார். தஞ்சை இளவரசனாக இருந்த செங்கமலதாஸ் மீண்டும் ஆட்சியைப் பெறவிரும்பி பிஜப்பூர் சுல்தானின் துணையை வேண்டினான். பிஜப்பூர் சுல்தானும் அதை ஏற்று ஏகோஜி என்ற வெங்கோஜி தலைமையில் படை ஒன்றை அனுப்பினான்.இப்படையின் துணையால் செங்கமலதாஸ் தான் இழந்த தஞ்சை ஆட்சியைத் திரும்பப் பெற்றான். ஆனால் ஓராண்டுக் காலம்தான் அவன் ஆட்சி நிலைத்தது. மராத்தியனான ஏகோஜி செங்கமல தாசை ஒழித்துக் கட்டிவிட்டு தானே தஞ்சை மன்னனானான். கி.பி.1676 தொடங்கி 1684 முடிய தஞ்சை மன்னனாக ஆட்சி புரிந்தான். சரி இவன் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? தொடக்கப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை வரலாற்றுப் பாடத்தில் இடம் பெற்றுள்ள சிவாஜியின் மாற்றாந்தாயின் மகன்தான் இவன்!.

நம்பிக்கைத் துரோகத்தின் வாயிலாக கி.பி. 1676 இல் இவன் கைப்பற்றிய ஆட்சி கி.பி 1855 முடிய திருச்சிக்குக் கிழக்கே கொள்ளிடத்திற்குத் தெற்கே வரையிலான காவிரி பாயும் வளமான நிலப்பகுதியில் ஒன்றரை நூற்றாண்டுக்காலம் வரை நீடித்திருந்தது. இந்த வரலாற்றுடன் நிறுத்திக் கொண்டு, மராத்தியர் ஆட்சியில் அறிமுகமான மோடி ஆவணம் குறித்து அறிய முற்படுவோம்.

மோடி ஆவணம்:

தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஒன்றரை நூற்றாண்டுக் காலம் நிலைத்திருந்த மராத்தி மன்னர் ஆட்சிக்கான முக்கியச் சான்றாக அமைவது மோடி ஆவணமாகும். மோடி என்பது ஓர் எழுத்து முறையைக் குறிக்கும். தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சியின் போது அரசு ஆவணங்கள் பெரும்பாலும் மோடி எழுத்திலேயே எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறை குறித்து மோடி ஆவணங்கள் தொகுப்பின் பதிப்பாசிரியரான ப.சுப்பிரமணியன்(1989: க்ஷி) தம் பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘மோடணே என்றால் மராட்டி மொழியில் உடைதல் என்று பொருள். அஃதினின்று ‘மோடி’ என்ற சொல் வந்திருக்கக் கூடும். தொடக்க காலத்தில் மராட்டி மொழி பேச்சு வடிவினின்று எழுத்துருக் கொண்டபோது அதற்கெனத் தனி வரிவடிவம் இல்லையாதலால், முன்னரே வழக்கிலிருந்த சமஸ்கிருத மொழிக்குரிய “தேவநாகரி” எழுத்தைக் கைக்கொண்டனர். ஹேமாட்பந்த் என்ற தேவகிரி யாதவ அரசர்களின் அமைச்சர் மராட்டி மொழிக்கும் ஒருவகை சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். அவ்வாறு தேவநாகரி எழுத்தை உடைத்துச் சிதைத்து மாற்று வடிவம் உண்டாக்கிய எழுத்து முறையே “மோடி”எழுத்தாயிற்று.’

‘மோடி எழுத்துக்கள் தேவநாகரி வரிவடிவத்தை அடியொற்றியவையாயினும் தேவநாகரியிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு குறில் நெடில் வேறுபாடுமில்லை. இடத்துக்குத் தக்கவாறு அமைத்துப் படித்துக் கொள்வதே முறையாயிற்று. மேலும் எழுதுகோலைக் காகிதத்திலிருந்து எடுக்காமல் தொடர்ச்சியாக வேகமாக எழுத மோடி எழுத்துப் பயன்படுகிறது. இதனால் சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப்போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. மோடி எழுத்தினைப் படிக்க வல்லார் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ளக் கூடுமாகையால் அரசியல் இரகசியங்கள் பிறரறியாமல் காப்பதற்கும் பயன்பட்டது.’

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்படும் மோடி ஆவணங்களைப் படிக்கும் பயிற்சி உடைய மோடி பண்டிதர்கள் என்றழைக்கப்பட்ட ஓரிருவர் பணியாற்றி வந்தனர். இவர்கள் துணையுடன் இந்நூலகத்தின் ஆய்விதழில் மோடி பலகணி என்ற தலைப்பில் ஒரு சில மோடி ஆவணங்களின் தமிழ் வடிவம் வெளிவந்தது. மற்றப்படி இவை பரவலாக அறிமுகமாகவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியன் அவர்கள் தஞ்சை வாழ் மராத்தியர்கள் சிலரைத் தேர்வு செய்து உதவித் தொகை வழங்கி அவர்களை மோடி எழுத்துக்களைக் கற்கும்படிச் செய்ததுடன் அவர்களின் துணையுடன் அம்மோடி ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்ததுடன் ‘தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக 1989 இல் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

இம்மொழிபெயர்ப்பு அச்சாக்கம் பெறுமுன்னரே 1984 இல் திரு வேங்கடராமையா எழுதிய ‘தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாயமும்’ என்ற நூலும் வெளிவந்துள்ளது. என்ன காரணத்தாலோ இம்மொழிபெயர்ப்புப் பணி மூன்று தொகுதிகளுடன் நின்று போய்விட்டது (காரணம்? தஞ்சைப் பெருவுடையாருக்கே வெளிச்சம்!).

சில எடுத்துக்காட்டுகள்

மேற்கூறிய மூன்று தொகுதிகளில் அக்கால சமூக நிலையை அறியச் செய்யும் பல்வேறு செய்திகள் அடங்கிய பல ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. குடிமக்கள் கொடுத்த மனுக்கள், அதன்மீது மன்னர் எழுதிய குறிப்புகள், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ரெசிடண்ட் என்ற பதவி வகிக்கும் வெள்ளையரின், மன்னர் ஆதரவுப் போக்கு என்பன சமூகத்தின் சராசரி குடிமக்களின் அவலத்தை நாம் அறியச் செய்கின்றன.

அதிலும் குறிப்பாக முதல் இரண்டு தொகுதிகளில் இடம்பெற்றுள்ள சில செய்திகள் நம்மை வியப்படையச் செய்யும், சில சினமூட்டும், சில துயருரச் செய்யும் தன்மையன. குறிப்பாக விற்பனைப் பொருளாகச் சிறுமியரும் பெண்களும் ஆக்கப்பட்டிருந்த அவலம் ஆளுவோரின் ஆதரவுடன் நிகழ்ந்துள்ளது. நாணயங்கள, அஞ்சல்தலை, பட்டாம் பூச்சி சேகரிப்போர் போன்று தஞ்சை மராத்தி மன்னர்களில் சிலர் பெண்கள் சேகரிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர்.இதன் பொருட்டு அரசே பெண்களை விலைக்கு வாங்கியுள்ளதைச் சில ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக சில ஆவணங்கள் கூறும் செய்திகளைக் காண்போம்.

பிரம்படியும், தேங்காய் விடலை போடும் தண்டனையும் வழக்கிலிருந்துள்ளது. பிராமணர்கள் உச்சிக்குடுமி வைப்பதை ஒரு சடங்காக நடத்தியுள்ளார்கள். இச்சடங்கு நடத்த ஆகும் செலவுக்குப் பணம் வேண்டி அரசிடம் மனுக் கொடுத்துள்ளமையும் மன்னர் பணம் கொடுக்க உத்தரவிட்டதையும் சில ஆவணங்கள் பதிவு செய்துள்ளன. நாகூர் தர்க்கா திருவிழாவுக்கும் அரசு நிதியுதவி வழங்கும் வழக்கம் இருந்துள்ளது.

சிறுமியரை அரசே விலைக்கு வாங்கியுள்ளது. மராத்தியர் ஆட்சியில் பழக்கத்தில் இருந்த சக்கரம் என்ற நாணய வடிவில் இதற்கான கிரையத் தொகை தரப்பட்டுள்ளது (9 சக்கரங்கள் 14 பிரிட்ஷ் ரூபாய்க்கு இணயாகும்) இதுகுறித்து வெங்கட்ராமையா (1984: 127) தம் நூலில் தரும் செய்திகள் வருமாறு:

  •  சிதம்பரம் பிள்ளை அலிகானா சந்திலிருக்கும் வெள்ளாளர் சுப்புபிள்ளை பெண்சாதியின் பெண் காவேரி வயது 12.கிரயம் 10.சக்கரம்.
  • அப்புராவ் காடிகே வைப்பாட்டி லெஷ்மியின் பெண் சீதாபாயின் வயது 10 சர்க்காரில் விலைக்கு வாங்கியது.
  • நாடக சாலையில் கிருஷ்ணாவின் பெண் செல்லம் வயது 10. சர்க்காரில் கிரயம் சக்கரம் 10.எழுத்துக் கூலி 2 பணம்

கல்வெட்டியல் அறிஞர் இராசு தம் நூலில் இரண்டாம் சிவாஜி (1832-1855) என்ற தஞ்சை மராத்திய மன்னன் இருபது மனைவியரையும் 48 வைப்பாட்டிகளையும் வைத்திருந்தான் என்றும், இவர்களுக்காக மங்கள விலாசம் என்ற பெயரில் மாளிகை ஒன்றைக் கட்டிவைத்திருந்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவன் இறந்த போது 42 வைப்பாட்டிகளும் 15 மனைவியரும் உயிரோடிருந்துள்ளனராம்.

இவ்வாறு மரபு வழி வரலாற் றாசிரியர்கள் கண்டு கொள்ளாத வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மோடி ஆவணங்களில் பதிவாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button