
அசையாச் சொத்துக்களை மையமாகக் கொண்டு உருவான ஒரு கலைச்சொல்லே ‘ஒத்தி’ ஆகும். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (மூன்றாம் பதிப்பு) ‘ஒத்தி’ என்ற சொல்லுக்குத் ‘தான் வாங்கிய கடனுக்காகத் தன் வீடு, நிலம் போன்றவற்றை வாடகை அல்லது குத்தகை தராமல் கடன் கொடுத்தவர் அனுபவித்துக் கொள்ளும்படிச் செய்து கொள்ளும் ஏற்பாடு’ என்று பொருள் கூறுகிறது.
ஒத்தி முறையில் கடன் கொடுத்தவருக்கு சொத்தை விற்கும் உரிமை கிடையாது. அதை முழுமையாக அனுபவித்துக் கொள்ளலாம். இடைக்காலச் சோழர் காலத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த சுந்தரர் தம் தேவாரப் பதிகத்தில் ‘விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்’ என்று திருவாரூர்ப் பதிகத்தில் பாடியுள்ளமை (1:1) இம்மரபின் தொன்மையை உணர்த்துகிறது.
பண்ணையாள் கடன் சீட்டு
நெல் வேளாண்மை மிகுந்த காவிரிச் சமவெளியில் மனிதர்களை ஒற்றி வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இது பண்ணையாள் கடன் சீட்டு என்று குறிப்பிடப்பட்டாலும் நடைமுறையில் தன்னை அடமானம் வைத்துக்கொள்ளுதலை எழுத்து வடிவில் உறுதிப்படுத்தும் அடமானப் பத்திரம்தான். ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவில் 1843 இல் அறிமுகம் செய்த அடிமை ஒழிப்புச் சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பண்ணையாள் கடன் சீட்டு பயன்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிப் பகுதியில் தாம் சேகரித்த 19 ஆம் நூற்றாண்டுக் காலத்திய நூற்றுப் பத்து ஓலை ஆவணங்களத் தொகுத்துத் தொல்லியலாளர் சீ.இராமச்சந்திரன் ‘தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சில ஆவணங்கள் அப்பகுதி வேளாண் தொழிலாளர்கள் மீது நிலவுடைமையாளர்கள் மேற்கொண்ட சுரண்டலை நாம் அறியத் துணைபுரிகின்றன.
கடன் சீட்டு: 1 (1858)
தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடியிலிருக்கும் அப்பாசாமி செட்டியாரிடம் 1858 இல் அவ்வூர் பள்ளத்தெருவிலிருக்கும் சிலம்பன் காலாடி மகன் பள்ளபாலன் என்பவர், பண்ணை ஆள் ஒத்திக் கடன்சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார். அப்பாசாமி செட்டியாரிடம் ரூ.100 கடனாகப் பெற்றுக் கொண்டே இதை எழுதிக் கொடுத்துள்ளார். அதில்,
“பண்ணை வேலை முதலணையும் யாதொரு குதாவடையில்லமல் நானும் என் பெண்சாதி காத்தியும் வேலை செய்நாளைக்கு ஒருபடி கூலியும் வயல்பங்கும் பெற்றுக்கொண்டு வருவேனாகவும்” ( பக். 63: ஏடு 79) என்று எழுதப்பட்டுள்ளது.
கடன் சீட்டு: 2 (1871)
மயிலாடுதுறை வட்டம், காட்டுச்சேரியிலிருக்கும் திருமுடிச் செட்டியார் என்பவருக்குப் ‘பறச்சேரியிலிருக்கும் சின்னச்சாம்பான் மகன் காத்தன்’ என்பவர் 1871 ஆவது ஆண்டில் ஆள் ஒத்திக்கடன் சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார் (பக்கம் 59 ஏடு 71). அதில் அவரும் அவரது மனைவியும் 1870ஆம் ஆண்டில் செட்டியாரின் பண்ணையில் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டு ஐந்து ரூபாயும் தொண்ணூறு கலம் நெல்லும் கடனாக வாங்கியதைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு ரூபாய் கடன் வாங்கும் போது அவர் எழுதிக் கொடுத்த ஆள் ஒத்திக் கடன் சீட்டில் பின்வரும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன:
‘முன் எழுதிக் கொடுத்த சீட்டில் கண்ட வாசகப்படி தங்கள் பண்ணையில் நின்று தாங்கள் இடப்பட்ட வேலைகளை தவக்கமன்னியில் செய்து வருவேனாகவும் தங்கள் பண்ணையை விட்டு விலகுங் காலத்தில் முன்சீட்டுப் பணமும் நெல்லும் இந்தப் பணமும் காலவிரை அத்தத்தில்* கொடுக்க சம்மதித்து’ (*காலம் கடந்து போகும் முன்னர்).
கடன் சீட்டு: 3
தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடியில் வாழும் முனியப்பாசாமி செட்டியாருக்கு, தரங்கம்பாடி பெருக்கிட்டாஞ்சேரி வெட்டியார்ப் புறஞ்சேரியிலிருக்கும் வெட்டியார் சின்னப்பன் தன் மகனை ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிக் கொடுத்துள்ள ஒத்திப் பத்திரத்தில்,
‘என் மகன் மாணிக்கத்தை தங்களிடத்தில் மாடு மேய்க்க விட்டு மாதம் ஒன்றுக்குச் சம்பளம் நாலு ரூபாய் களம் வயலில் அரைப்பங்கும் பத்திக்கொண்டு யாதொரு தவக்கமுமில்லாமல் மாடு மேய்த்து வருகிறது. இதற்கு முதற் கடனாக நான் தங்களிடத்தில் பத்திக் கொண்டது கு.ரூபாய்* ஐந்து (*கு: கும்பேனி.ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பேனி வெளியிட்ட ரூபாய்). இந்த ரூபாய் ரெண்டும் நான் ரொக்கம் பத்திக் கொண்டபடியால் சொல்லப்பட்ட ரூபாய் ரெண்டையும் என் மகன் சம்பளத்தில் தள்ளிவிடு வேனாகவம்* (கழித்து விடுவேனாகவும்), என் மகன் மாடு மேய்க்கத் தவக்கப் படுத்தினாலும், முகந்தப்பிப் போனாலும் நானே பாத்தியப்பட்டு தங்களுக்கு சமுசாயி சொல்லச் சம்மதிச்சு’ என்று எழுதிக் கொடுத்துள்ளார் (பக்கம்: 82 ஏடு:106).
அடிமையை ஒத்திவைத்தல்
அடிமை ஒழிப்புச் சட்டம் வரும் முன்பு ஒருவரை அடிமையாக வைத்திருந்தவர் அவரை வேறு ஒருவருக்கு ஒத்திவைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாகரம் ஊரில் உள்ள முதலியார் குடும்ப ஓலைகளைச் சேகரித்து, சென்னை ஆசியவியல் நிறுவனம் பாதுகாத்துவருகிறது. இச்சேமிப்பில் உள்ள 19 ஆவது நூற்றாண்டு ஆவணங்கள் இரண்டை கோ.உத்திராடம், ஆவணம் இதழில் (2003:109-110) வெளியிட்டுள்ளார். இவற்றில் முதல் ஓலை கிருஷ்ணன் என்ற அடிமையை ஆள்வொத்திச் சீட்டின் வழி ஒத்திவைத்ததைக் குறிப்பிடுகிறது.
ஆச்சன் என்பவர் முதலில் கந்தசாமி முதலியாரிடம் பதினான்கு ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு அவரது பண்ணையாளாக இருந்துள்ளார். கிருஷணாச்சி ஆறுமுக முதலியார் என்பவர் கந்தசாமி முதலியார் ஆச்சனுக்குத் தந்த பதினான்கு ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு ஆச்சனைத் தனது பண்ணையாளக ஆக்கிக் கொண்டதை இரண்டாவது ஓலை குறிப்பிடுகிறது.
சில உண்மைகள்
பண்ணை ஆள் ஒத்திச் சீட்டு என்ற பெயர் கொண்ட இச்சீட்டுக்கள் வெண்ணிலைக் கடன்பத்திரம், புரோநோட்டு என்ற பெயர்களில் அழைக்கப்படும் வழக்கமான கடன்பத்திரங்களில் இருந்து வேறுபட்டவை. வழக்கமான கடன்பத்திரத்தில் கடன் வாங்கியவனின் சுயேச்சைத் தன்மை பாதிக்கப்படுவதில்லை. வாங்கிய பணத்திற்கான வட்டியை ஒழுங்காகக் கொடுப்பதும் அசலை உரிய காலத்தில் செலுத்துவதும் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்பத்திரம் தன்னிடம் பணிபுரிய வேண்டும் என்பதை எழுத்தின் வாயிலாகப் பெற்றுக்கொள்கிறது.
இவ்வகையில் அது ஓர் ஒப்பந்தப் பத்திரம் என்ற தகுதியைப் பெற்று அவனது தனிமனித உரிமையைப் பறிப்பதாக அமைந்து விடுகிறது. வேலை செய்வதற்குக் கடன் கொடுத்தவர் கூலி கொடுத்துவிடுகிறார். அத்துடன் தான் கொடுத்த தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்கிறார். இங்கு இருவருக்குமான உறவு ஓர் ஒப்பந்தமாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வொப்பந்தத்தின்படி கடன் கொடுத்தவரிடம் பணி செய்யவேண்டிய கட்டாயம் கடன்வாங்கியவருக்குச் சட்டப்பூர்வமாக ஏற்பட்டுள்ளது. அவர் செய்யும் பணிக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிடுகிறது. எனவே அவர் கடன் கொடுத்தவரிடம் வேலை செய்ய மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறும் குற்றச் செயலாக (Breach of contract) பார்க்கப்பட்டது. Workmen’s breach of Contract சட்டப்படி நடவடிக்கை எடுக்க இச்சட்டம் துணைநின்றது. மொத்தத்தில் அடிமை ஒழிப்புச் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள நிலவுடைமையாளர்களுக்கு ஆள் ஒத்திக் கடன் சீட்டு பயன்பட்டது. ஆள் என்பது அடிமையைக் குறிக்கும் சொற்களில் ஒன்று என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
ஒருபுறம் ஆங்கிலக் காலனிய அரசால் அடிமை முறை ஒழிப்புச்சட்டம் அறிமுகம் செய்யப்பட, மறுபக்கம் ஆள் ஒத்திக்கடன் சீட்டானது ஒப்பந்த மீறல் என்ற சட்டப்பிரிவின் கீழ் அதைப் பாதுகாத்துள்ளது. இதற்கான தேவையை ஆர்.எஸ். சர்மாவின் (2001:100) பின்வரும் கூற்றுடன் பொருத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
‘நெல் உற்பத்தியாகும் இடங்களில் நிலமானிய முறை (Feudalism) தழைத்து வளர்ந்தது. நெல் உற்பத்திக்குக் கோதுமை உற்பத்திக்குத் தேவையான மனித நேர அளவைவிட ஐம்பது மடங்கு மனித நேரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. பீகாரின் பாட்னா, கயா மாவட்டங்களில் வழங்கும் சொலவடை ஒன்றையும் இது தொடர்பாக அவர் மேற்கோள் காட்டுகிறார். அது வருமாறு: ‘கைம்பெண்ணாலும் கூட கோதுமையைச் சாகுபடி செய்ய முடியும்’. ஆதரவற்ற நிலைக்கு அடையாளமாகக் கிராமப்புறங்களில் கைம்பெண் விளங்குகிறாள். கோதுமைச் சாகுபடிக்குக் குறைந்த அளவு வேளாண் தொழிலாளர்கள் போதும். பார்லி சாகுபடிக்கு இதை விடக் குறைந்த ஆட்கள் போதும். ஆனால் நெல் நாற்று நடும் பருவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்படும். பெருநிலக்கிழார்கள் கட்டாய உழைப்புக்கு (Forced Labour) ஆள் பிடிப்பார்கள்.’
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த தஞ்சை மாவட்ட நிலைமையும் இத்தகையதாகத்தான் இருந்துள்ளது. கைவசம் அடிமைகளை வைத்திருந்தவர்களுக்கு அடிமை ஒழிப்புச் சட்டம் ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதை எதிர் கொள்ளும் வழிமுறையாக ஒரு வகையான கட்டாய உழைப்பு முறையாக “ஆள் ஒத்தி” என்பதை அறிமுகம் செய்துள்ளனர். ஒருவன் அல்லது ஒருத்திக்குக் கடன்கொடுத்து அதற்கு வட்டி வாங்கியதுடன் கட்டாய உழைப்பாளிகளாக அவர்களை மாற்றினர்.
மேலே காட்டிய கடன் சீட்டுக்கள் எண் 2, 3 இல் இதற்கு முன்னர் வாங்கிய கடன் உட்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். இது தொடரும்போது இவர்கள், தாம் அடைக்க வேண்டிய கடன் தொகையிலிருந்து மீளமுடியாத நிலைக்கு ஆளாகிவிடுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும். அடிமையைக் குறிக்கும் சொற்களில் ஒன்று ஆள் என்பதாகும் (சூடாமணி நிகண்டு 11: 257. திவாகரம்: 2: 64). மீள முடியாத அடிமை என்ற பொருளில் திருநாவுக்கரசர் ‘நாம் என்றும் மீளா ஆளாய்க் குறுகினோம்’ என்று பாடியுள்ளார். இம்மீளா நிலைக்கு ஆள் ஒத்திச் சீட்டு அழைத்துச் சென்றுள்ளது.
ஆள் ஒத்திச் சீட்டின் வழியே தம் மனைவி, மகனை ஒருவகையான அடிமை முறைக்குள் ஆட்படுத்திய ஆண்களையும் இங்கு சந்திக்க முடிகிறது. இங்கு மேற்கோளாகக் காட்டிய சீட்டுக்களை எழுதிக் கொடுத்த பண்ணையாள்களாக தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட சாதியினரே உள்ளனர்.
இம்மக்கள் பிரிவினர் தமக்கென சொந்தக் குடியிருப்புகள், நில உரிமை, குடும்பம், என்பனவற்றைக் கொண்டிருந்த சுயேச்சை மனிதர்கள் தாம். கல்வி கற்கும் உரிமையைப் பெற்றவர்களாக இருந்துள்ளார்கள். வைதீகச் சமயமரபு சார்ந்த பெரிய கோயில்களுக்குக் கொடை வழங்கும் அளவுக்குப் பொருள் வளமும் இவர்கள் பெற்றிருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. பறைத்தறி, உழப்பறையர் என்று கல்வெட்டுக்களில் இடம்பெறும் சொற்கள் நெசவாளர், உழுதொழில் மேற்கொள்வோர் என வேறுபாடான தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றன.
வருணமற்றவர்கள் என்ற பொருளைத் தரும் அவர்ணர் என்றழைக்கப்பட்டு, தீண்டாமைக்கு ஆளாகி அடிமை நிலையைவிட இழிவான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்ட அவலம் வைதீகப் பரவலின் பின்னர்தான் நிகழ்ந்துள்ளது. வாழுமிடம், ஆடைஅணிகலன்கள், புழங்குபொருள்கள் பயன்படுத்தல் தொடர்பான இறுக்கமான – இழிவான பண்பாட்டு அடையாள மறுப்புகளுக்கு ஆட்படுத்தி மார்கஸ் கூறும் பொருளாதாரம் அற்ற சுரண்டல் முறையையும் நடைமுறைப் படுத்தினர். இது காரணம் பற்றியே அம்பேத்கர்,
‘தீண்டாமை, மறைமுக வடிவமான அடிமைத்தனமாகும்’. ‘தீண்டாமை என்பது அடிமை முறையின் இந்திய வடிவம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் ஆள் ஒத்திச் சீட்டு என்பது உரிமையியல் (சிவில்) சார்ந்த ஓர் ஆவணம் மட்டுமல்ல. அது வரலாறு, சமூகவியல் தொடர்பான ஆவணமும் ஆகும் என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் சான்று பகர்கின்றன.
சான்றாதாரம் :
உத்திராடம் கோ. (2003) மாகறல் ஆள் ஒத்தி ஓலைகள் ஆவணம். இதழ்14. பக்கம்109-110.
ஸ்ரீதர். தி.ஸ்ரீ., பதிப்பாசிரியர் (2005), தரங்கம்பாடி ஒலை ஆவணங்கள்.
Sharma.R.S. (2001) Early Medieval Indian Society.

