மாநில செயலாளர்

சிவக்கட்டும் சேலம்! (மாநில மாநாட்டை நோக்கி… 1)

கட்சிக் கடிதம்

போர்க்குணமிக்க தோழர்களே!

மக்கள் நலனுக்கான போராட்டக் களங்கள் கண்டு, முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மக்களைத் திரட்டி தினமும் போராடுகிறோம்.

ஜனநாயக நடைமுறைகளை வெறுத்து ஒதுக்கி வரும், பாஜக ஒன்றிய அரசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைகளையும் எதிர்த்துத் தொடர்ந்து அரசியல் இயக்கங்களை நடத்தி வருகிறோம்.

உள்ளூர் மக்கள் பிரச்சினைகள் தொடங்கி முதல் உலக நாடுகளின் உறவுகள் வரை எல்லா நிலைகளிலும் ஏகாதிபத்திய ஆதிக்கம், நிதி மூலதனச் சக்திகள், பன்னாட்டுக் குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கொள்கைகள், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வருகிறோம்.

கடந்த மூன்றாண்டுகளில் நாம் மேற்கொண்ட அரசியல் பணிகளையும், அமைப்புநிலைப் பணிகளையும் பரிசீலிப்பது அவசியமாகிறது.

நமது கட்சி, கடந்த 2022 அக்டோபர் 14-, 18 தேதிகளில் விஜயவாடா நகரில் நடைபெற்ற 24 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் தீர்மானம், ஆகஸ்ட் 6, 7, 8, 9 தேதிகளில் திருப்பூர் மாநகரில் நடைபெற்ற 25-வது மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், இதனைத் தொடர்ந்து, தேசியக் குழு மற்றும் மாநிலக் குழு அவ்வப்போது கூடிய எடுத்த முடிகள் என அனைத்தின் மீதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும்.

அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பு நிலை குறித்தும், அதற்கு வகுத்து வழங்கப்பட்ட கடமைகளின் நிறைவேற்றம் குறித்தும் பரிசீலிக்க வேண்டிய கடமையும் முன் வந்துள்ளது.

அமைப்பு நிலையின் பலம், பலவீனம் குறித்து, விமர்சன ரீதியான மதிப்பீடுகள் செய்து, தவறுகளையும், குறைகளையும் நீக்க வழிவகை காண வேண்டும்.

கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள தோழர்கள், தங்கள் பணிகளை சுய விமர்சனங்களையும் உள்ளடக்கி அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, அடுத்த இலக்கை நோக்கி முன்னேற திட்டமிட்டு, செயலாற்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள கட்சிக் கிளை அமைப்புகள், இடைநிலை அமைப்புகள் மாவட்ட அமைப்புகளின் மாநாடுகள் நடந்து வருகின்றன.

இந்த மாநாடுகளில், குறிப்பாக கட்சிக் கிளை மாநாடுகள், அன்றாடம் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுடன் உயிரோட்டமான உறவும், தொடர்பும் உள்ள அமைப்புகள் என்ற முறையில், கட்சியின் கொள்கை நிலைகள் மற்றும் அரசியல் முடிவுகள் மீது மக்களின் கருத்தோட்டங்களை உள் வாங்கி, மேல் அமைப்புகளுக்கு தெரிவித்து, சரியான முடிவுகள் எடுக்க உதவுகின்றன. இந்தப் பணி இடைக்குழுக்களும், மாவட்டக் குழுக்களும் மாவட்ட அளவிலான கருத்துக்களை தொகுத்து வழங்கி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து மாநில மாநாடுகள் நிறைவு பெற்று, வரும் செப்டம்பர் 21 முதல் 25 வரையிலும் கட்சியின் 26-வது அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகரில் நடைபெறவுள்ளது.

நமது கட்சியின் அமைப்பு விதிகள், கட்சி அமைப்புகளுக்கும், உறுப்பினர்களுக்கும் மிக விரிவான ஜனநாயக உரிமைகளை வழங்குகிறது.

கட்சி உறுப்பினர், தனது உள்ளத்தில் உருவாகும் கருத்துக்களை ஒளிவு, மறைவு இல்லாமல் கட்சி அமைப்பில் முன் வைக்க அனுமதிக்கிறது. இதன் மீது கட்சி அமைப்பு மேற்கொள்ளும் முடிவுக்கு உறுப்பினர் கட்டுப்பட்டு செயலாற்றும் கடமையினையும் வலியுறுத்துகிறது.

மேதை லெனின் வகுத்தளித்த ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளை கட்சி, வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி வருகின்றது. இதனடிப்படையில் மாநாடுகளில் மிக உயர்ந்தபட்ச ஜனநாயகம் பின்பற்றப்படுவதைக் காண முடியும்.

ஜனநாயகம் என்பது மிக, மிக முக்கியமானது. அதே நேரத்தில், வரம்பற்ற ஜனநாயகம் அராஜக நிலைக்கு தள்ளிவிடும் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் உழைக்கும் மக்களின் ஜனநாயகம் என்பது வரைமுறைகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், இடைநிலை அமைப்புகளின் மாநாடுகளிலும், இடைநிலை அமைப்பு மாநாடுகளில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் மாவட்ட மாநாடுகளிலும், மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மாநில மாநாட்டிலும், மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், கட்சிப் பேராயத்திலும் பங்கேற்க உரிமை பெறுகிறார்கள்.

கட்சி அமைப்புகள் பரிபூரண உள் கட்சி ஜனநாயக முறைகளை பின்பற்றி, கிளைகள் தொடங்கி, தேசியக் குழு வரை இத்தகைய முறையை நாம் பின்பற்றுகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நம் கட்சியின் அமைப்பு விதிகள் தான் நம் ஒவ்வொருவரையும் வழி நடத்துகின்றது.
தோழர்களே, நம் நாட்டை வழி நடத்துவது, “மக்களாகிய நாம்” ஏற்றுக் கொண்ட அரசியலமைப்புச் சட்டம்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக எவரும் செயல்பட முடியாது, கூடாது.
நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் மிக முக்கியமானது போன்று கட்சியை கீழ் இருந்து மேல் வரை வழிநடத்துவது கட்சியின் அமைப்பு விதியாகும்.

உறுப்பினர் தொடங்கி பொதுச் செயலாளர் வரை கட்சி கிளை தொடங்கி கட்சி பேராயம் வரை நமக்கு வழிகாட்டுவது நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்ற அமைப்பு விதியாகும்.

ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு அமைப்பும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். அதன் மீது அமைப்பு ரீதியாக செயல்பட வேண்டும். அரசியல் முடிவுகளுக்கு அப்பால் சென்று செயல்பட முடியாது. அதே போன்று அமைப்பு முறைகளுக்கு உட்படாமலும் செயல்பட முடியாது.

நாம் கம்யூனிஸ்ட்கள் என்கிற முறையில் நமக்கு இரண்டு நெறிமுறைகள் உண்டு.
ஒன்று அரசியல், மற்றொன்று அமைப்பு நிலை.

இவை இரண்டையும் இரண்டு கண்களைப் போன்று மதிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் கிளை மாநாடுகள் எவ்வாறு நடைபெற வேண்டும். இடைநிலை, மாவட்ட மற்றும் மாநில மாநாடுகள் நடைபெற வேண்டும் என்பது குறித்து ஒரு விரிவான சுற்றறிக்கை மாநில மையத்திலிருந்து, கட்சி அமைப்புகளில் செயல்படும் நிர்வாகிகள் – மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் – அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலக் குழு அனுப்பிய சுற்றறிக்கை கிடைக்கப் பெற்ற தோழர்கள் மிக பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் தவிர்க்க முடியாத பல்வேறு அரசியல் பணிகள் காரணமாக கிளை மாநாடுகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளன.

சில மாவட்டக் குழுக்கள், கிளை, இடைநிலை மாநாடுகளை நடத்தி முடித்து, மாவட்ட மாநாடுகளையும் நடத்தி முடித்துள்ளன.

குறிப்பாக சேலம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு தெற்கு, தனி 2, தனி 4 போன்ற மாவட்டங்களின் மாநாடு நடந்து முடிந்துள்ளன.

மற்ற மாவட்டங்களும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. கிளை மாநாடுகளை முழுமையாக முடித்த மாவட்டங்களில் உள்ள கிளை செயலாளர்களுக்கு மாநிலக்குழு சார்பில் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலம், குமரி, தேனி, தென்காசி, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி மாநகர் போன்ற மாவட்டங்களில் கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப் பெற்ற அனைத்து கிளைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பல கிளைச் செயலாளர்கள் கடிதம் கிடைத்தது குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து மாநில மையத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பெற்ற கிளைச் செயலாளர்களில் ஒரு பகுதியினர் முகவரியை மட்டும் அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட கிளைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து கிளைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும்.

அவர்களுக்கு மட்டுமின்றி, இடைநிலை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் இடைநிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்ட மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்படும்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், இடைநிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முழு முகவரியைத் தவறாது விரைவாக, மாநில மையத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

கிளை மாநாடுகளில் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு பேரணியில் பங்கேற்க ஒவ்வொரு கட்சி கிளையும் குறைந்தபட்சம் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து வருவது பாராட்டிற்குரியது. இவை மட்டுமின்றி, ஒவ்வொரு கட்சி கிளையும் மக்கள் தொண்டர் அணிக்கு குறைந்தபட்சம் ஒரு இளம் தோழரை தேர்வு செய்து வருவது வரவேற்கதக்கது.

தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் மட்டும் மண்டல வாரியாக முகாம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண் தோழர்களும் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டு மண்டல வாரியாக பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சேலம் பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்களின் கம்பீரம் மிக்க அணிவகுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து முனைப்போடு செயல்பட்டு வருவதும், இவர்களுக்கான பயிற்சி அளித்திட தோழர்கள் எம். இலகுமய்யா, சந்திரசேகர ஆசாத், திருப்பூர் பன்னீர் மற்றும் தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம், கட்சியின் மாநில 26வது மாநாடு மாநகர் சேலம் நகரில் ஆகஸ்ட் 15-ல் தொடங்கி 18-ம் நாள் வரை நான்கு தினங்கள் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. அவைகள் குறித்த விவரம் அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்படும்.

மாநாட்டு நிறைவு நாளான ஆகஸ்ட் 18-ம் நாள் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்க, ஆயிரமாயிரமாய், பல்லாயிரமாய், குடும்பத்தோடு லட்சக்கணக்கில் பங்கேற்க ஆயத்தமாவீர்!

சேலம் மாநகர் செம்மயமாகி, சிவக்கும் எழிலார்ந்த காட்சியை நாடு காண வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.

வணக்கம்.

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button