
நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சாலையுலா (ரோடு ஷோ) பரப்புரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 27-ஆம் தேதி நாமக்கல், கரூரில் அவருடைய சாலையுலா பரப்புரை நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரம் குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசும் அரசியல் கட்சிகளும் இழப்பீடுகளை அறிவித்துள்ளன.
தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு திரண்ட மக்களை, ரசிகர் கூட்டம், தற்குறிகள், கட்டுப்பாடற்றவர்கள், மரங்களிலும் வீட்டின் மாடிகளிலும் தாவிக் குதிப்பவர்கள்.. என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். தவெக தரப்போ சதி நடந்திருக்கிறது, அரசு தங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு இதைவிட பெரும் கூட்டங்களைக் கண்டிருக்கிறது. அண்மையில் சில லட்சம் பேர் திரண்ட சல்லிக்கட்டுப் போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அங்கு எந்தவித அத்துமீறலோ, சிறு நெரிசலோ இன்றி ஆண்களும் பெண்களும் சேர்ந்து போராடினர். விஜய் நடத்திவரும் நிகழ்ச்சிகளில் மட்டும் நெரிசலும் உயிர்ப் பலியும் ஏற்படுவது ஏன்?
தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருக்கும் கதாநாயகன் விஜய் அரசியலில் களமிறங்கி இருக்கிறார். கட்சி தொடங்கியிருக்கிறார். பெரும்பாலும் இளம் ரத்தங்கள். அதுவும் அரசியல் அறியாத, அரசியலைப் பேச விரும்பாத பெருங்கூட்டம் அரசியல் களத்திற்குள் வந்திருக்கிறது. கல்வியில், அரசியலில் முன்னேறிய தமிழ்ச் சமூகத்தில், இந்தப் பெரும்கூட்டம் விரைவாக அரசியல் மயப்படும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவானது. ஆனால் நடந்தது என்ன?
மாநாடுகள் உட்பட தவெக நடத்திய நிகழ்ச்சிகளில் திரண்ட கூட்டத்தையும் தொண்டர்களையும், தவெக தலைமையில் இருப்பவர்கள் கையாண்ட விதமும், தவெக தொண்டர்கள் நடந்து கொண்ட விதமும் அதிர்ச்சி அளிக்கிறது.
விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளில் மேடைக்குச் செல்வதற்கான நடை மேடையை ராம்ப் வாக் என்கின்றனர். விஜய் செல்லும் இந்த நடை மேடைக்குள் யாரையும் வரவிடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளில் கிரீஸ் பூசி வைத்திருந்தனர். அதனையும் மீறி, ஏறி வந்த தொண்டர்களை விஜய்யின் பாதுகாவலர்களான பவுன்சர்கள் தூக்கி வீசினர். நடைமேடையில் விஜய் நடந்து சென்றதை காண்பதற்கு அரிய காட்சியாக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் (ரசிகர்கள்) ஆரவாரித்தனர். தவெக கொடி போன்ற துண்டுகளை விஜய் மீது வீசினர். விஜய்யின் கண்களும் முகமும் பூரித்தன. அரசியல் கட்சியின் மாநாடு போன்று நடக்காமல், திரை நட்சத்திரத்தைக் கொண்டாடும் விழா போன்று ஏற்பாடுகளும் நிகழ்ச்சி நிரல்களும் இருந்தன. அதாவது, தவெக தொண்டர்களின் ரசிக மனநிலையைப் போக்கி, அரசியல்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி நிரலோ பேச்சுகளோ இடம்பெறவில்லை. விஜய் பேச்சுகூட திரண்டிருப்பவர்கள் ‘ரசிகர்கள், அவர்களுக்கு இது போதும்‘ என்ற தன்மையில்தான் இருந்தன. இரண்டு மாநாடுகளின் காட்சிகளே இதற்குச் சான்று.
நாமக்கல், கரூர் சாலையுலா (ரோடு ஷோ) பரப்புரையின் போதுகூட ஊர்தியின் முன்புறத்தில் அமர்ந்திருந்த விஜய், மின்விளக்கை எரியவிட்டும் நிறுத்தியும் விளையாடிக் கொண்டிருந்தார். மின்விளக்கை நிறுத்தும்போது ரசிகர்கள் அமைதியாவதையும் மின்விளக்கு எரியும் போது ஆரவாரிப்பதையும் கண்டு அகமும் முகமும் மகிழ்ந்தார். தான் பயணித்த ஊர்திக்குள் சென்று திரையை இழுத்துவிட்டுக் கொண்டு அமர்கிறார். திடீரென வெளியே வருகிறார். எள்ளலாகவும் சவால் விடும் வசனங்களைப் பேசுகிறார்.
“சிஎம் சார் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலீடா? உங்க குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்குப் போகுதா?”
“நேரடியாகவே கேட்கிறேன். என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா? அதற்கான ஆள் நானில்லை. அப்படி என்ன செய்வீர்கள்? கொள்கையை பெயரளவில் வைத்து குடும்ப ஆட்சி நடத்தும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த(?) எனக்கு எவ்வளவு இருக்கும்?”
இப்படி நரம்பு புடைக்கக் கத்தி, திரைப்பட சூட்டிங் போன்று சவால் விடும் வசனங்களைப் பேசுகிறார். தவறான தகவல்களைச் சொல்லி அங்கு திரண்டிருக்கும் கூட்டத்தின் ரசிக மனப்பான்மையை தன்னுடைய அரசியலுக்கு ஆதரவாக ஏற்றிவிடும் வகையில் பேசுகிறார்.
“நான் மக்களை சந்திக்கக் கூடாது. அவர்களுடன் பேசக் கூடாது. அவர்களுடைய குறைகளை கேட்கக் கூடாது. அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என்பது தான சார் உங்க எண்ணம்? இந்த அடக்குமுறை, அராஜகம் எல்லாம் வேண்டாம் சார்.”
“இந்தப் பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு, தில்லா, கெத்தா, நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சி.எம் சார்”
இவை அனைத்தும் நாகப்பட்டினத்தில் விஜய் பேசியவை. இவற்றில் என்ன அரசியல் பார்வை இருக்கிறது? தவெக தொண்டர்களின் ரசிக மனநிலையை அரசியல்படுத்தும் வகையில் இல்லாமல் இருப்பது ஏன்? மாறாக, காவல்துறையும் நீதிமன்றமும் தவெக கூட்டங்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எந்தப் பொறுப்புணர்வும் இன்றி எகத்தாளமாகவும் எதிர்ப்பாகவும் தொண்டர்களைத் தூண்டிவிடும் பேச்சாகும்.
அதாவது, கட்டுப்பாடின்றியும் தலைவரின் பேச்சுக்கு அடங்காமலும் திரண்டிருக்கும் இளையோர் கூட்டத்திடம், பொது ஒழுங்குக்கு கட்டுப்படுவது தவறு, காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் தன் மீதான அடக்குமுறை என ஏற்றிவிடுகிறார். அவருடைய இந்தப் பேச்சு எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?
கேரவன் போன்ற ஊர்தியில் நின்று கையசைத்தும், சவால் விடும் வகையில் பேசியும் அரசியலற்ற பெருங்கூட்டத்தை தேர்தல் அரசியலுக்குத் திரட்டிவிட முடியும். முதலமைச்சர் பதவியைப் பிடித்துவிட முடியும் என விஜய் நம்புகிறார். அவருக்காக வேலை செய்யும் குழுவினரும் நம்புகின்றனர். அதன் விளைவுதான் கரூர் துயரம்.
விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மூன்று அவசர ஊர்திகள் (ஆம்புலனஸ்) செல்கின்றன. அவர் பேசிக்கொண்டிருந்த ஊர்தி அருகிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டும் தண்ணீரின்றியும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களுக்குத் தண்ணீர் கேட்டு கத்துகின்றனர். விஜய் தண்ணீர் பாட்டிலைத் தூக்கிப் போடுகிறார். காலையில் இருந்தே தண்ணீரும் உணவும் இல்லாமல், விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுகின்றனர்.

விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தது போல, விஜய் எப்போது வருவார்.. எப்போது வருவார்.. என அவருடைய அரசியல் உரைக்காகவும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி அவர் வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். அதுதான் விஜய்யின் எதிர்ப்பார்ப்பு. கரூரில் திரண்டிருந்த பெருங்கூட்டம் இப்படித் திமிறி எழுந்ததால் என்ன ஆனது? என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பகல் 12 மணிக்கு கரூரில் விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்துக்கு அவர் வந்து சேரும் போது இரவு 7 மணி. ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வந்து விடுவார் என அறிவிக்கப்பட்டதால், காலை 9 மணிக்கே வேலுசாமிபுரத்தில் ரசிகர்கள், தொண்டர்கள் திரளத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தண்ணீரின்றியும், மூச்சுத்திணறியும் இறந்த நிகழ்வுகள் அதிர்ச்சியில் உறைய வைப்பவை.
மக்கள் சந்திப்பு என்ற பெயரில் விஜய் சாலையுலா (ரோடு ஷோ) நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை ஆறு மாவட்டங்களில் இந்த சாலையுலா முடிந்திருக்கிறது. எந்த மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களை அழைத்து விஜய் கலந்துரையாடவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக நின்று மாவட்டச் செயலாளர்களும் விஜயை நோக்கி துண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றனர்.
கொள்கையை நம்பி, மக்களை நம்பி விஜய் கட்சி தொடங்கவில்லை. தனக்கிருக்கும் நட்சத்திரப் பிம்பம், மக்களைத் திரட்டியும் வாக்குகளாக மாற்றியும் கொடுத்துவிடும் என நம்புகிறார். இதற்கான செயல்திட்டங்களையே விஜய்யும் அவருடைய வியூக வகுப்பாளர்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்குக் கொடுக்கப்பட்ட விலைதான் 41 உயிர்கள் பலி.
கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட காணொளியில்கூட, “சிஎம் சார், உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்” என்று திரைப்படப் பாணி சவால் விடுக்கிறார்.
ரசிக வெறியூட்டப்பட்டு, வழிபாட்டு மனநிலையுடன் திரட்டப்படும் மக்கள் கூட்டத்தை, மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்வதுதான் விஜய் வகுத்துள்ள வியூகம். இதற்கு ரசிகர்களை அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
“கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன்” என்று விஜய் அடிக்கடி பேசுகிறார். அவர் கரியரை விட்டிருக்கலாம். ஆனால் திரைப்படத்தைப் போன்று அரசியலிலும் உச்ச நட்சத்திரமாகவே தொடர விரும்புகிறார். இதன் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கிறோம்.
ஒன்று மட்டும் உறுதி, விஜய் போன்ற தத்துவம், அரசியல் இல்லாத நட்சத்திரங்களால், தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்.