மாநிலச் செயலாளருக்கு தலைவர்கள் வாழ்த்து

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில், புதிய மாநிலக் குழு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 13.09.2025 அன்று சென்னையில் கூடிய புதிய மாநிலக் குழு, கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியனை ஒருமனதாகத் தேர்வு செய்தது. அவருக்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மாநிலச் செயலாளராகத் தேர்வாகியுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துத் தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அது வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 16.09.2025 அன்று சந்தித்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

13.9.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் வேம்புலி வெங்கடேசன், எம்.எஸ்.மூர்த்தி, சந்தோஷ்குமார், ஜி.சுப்பிரமணி மற்றும் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேசு உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியன் அவர்களை பாலன் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சம்பத், சாமுவேல்ராஜ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா,எஸ். ஏழுமலை, மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராகிம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
