

காஷ்மீர் தனி நாடாக இருக்கிறது, இந்தியாவோடு இணைத்தால்தான் அங்கு வளர்ச்சி சாத்தியம் என்றெல்லாம் பேசிய பாஜக ஒன்றுபட்ட காஷ்மீரை, 31 அக்டோபர் 2019 அன்று, ஜம்மு – காஷ்மீர் அதன் மாநில அந்தஸ்தில் இருந்து நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றியது. ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரு மாநிலத்தை இப்படி திட்டமிட்டுத் தகர்த்தது பாஜக!
ஜம்மு – காஷ்மீர், லடாக்கை மீண்டும் மாநிலமாக்கத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அதனை ஏற்கவில்லை?
லடாக் மக்களை ஏமாற்றிய பாஜக!
தேர்தல்களின் போது லடாக் மக்களுக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்று பேசிய பாஜகவின் உறுதி மொழியைத்தான் இன்று போராட்டக்காரர்கள் முன்வைக்கிறார்கள். லடாக்கை எடுத்துக் கொண்டால் அரசியலமைப்பு அட்டவணை 6ன் படி வடகிழக்கு மாநிலங்களைப் போல் சுயாட்சி நடத்தும் வகையில் தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினர். சில நாட்களுக்கு முன் இதில் பங்கேற்ற 2 பேர் மயங்கினர். ஆனால் ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.
அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை!
அரசியலமைப்பின் பிரிவு 244 இன் கீழ் ஆறாவது அட்டவணை தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதற்கு அனுமதியளிக்கிறது. அதாவது தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள். இவை மாநிலத்திற்குள் சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தில் குறிப்பிட்ட அளவு சுயாட்சியைக் கொண்டுள்ள வகையில் அமையும்.
நிலம், காடு, நீர், விவசாயம், கிராம சபைகள், சுகாதாரம், காவல், திருமணம், விவாகரத்து, சமூகப் பழக்கவழக்கங்கள், சுரங்கம் போன்றவற்றில் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளைத் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களை உருவாக்கலாம்.
அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத்திற்கு வழிவகை செய்கிறது. இதனைத்தான் லடாக்கிய மக்களும் கேட்கிறார்கள்.
சோனம் வாங்சுக் குற்றவாளியா?
இது தொடர்பாக கடந்த அக்டோபர் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய பாஜக அரசு தயாராக இல்லை என்ற காரணத்தால்தான், லடாக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில அந்தஸ்து கோரி போராடும் பல அமைப்புகளின் இணைப்புக் குழுவின் Leh Apex Body இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இது வன்முறையானது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்கள், லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் உட்பட அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டு வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். செரிங் ஆங்சுக் (72) மற்றும் தாஷி டோல்மா (60) ஆகிய இருவரின் உடல் நிலையும் மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது வன்முறைப் போராட்டங்களுக்கு உடனடித் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று சோனம் வாங்சுக் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு லடாக்கில் நடந்த மிக மோசமான வன்முறைச் சம்பவம் இது எனக் கருதப்படுகிறது.
இந்த வன்முறையைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வந்த 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நடந்த வன்முறைகளுக்கு சோனம் வாங்சுக்தான் காரணம் என்று குற்றம்சாட்டியது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் சதி என்றெல்லாம் பேசியது. அதன் பின்னர், ஒன்றிய அரசால் சோனம் கைது செய்யப்பட்டார்.
வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பாத லடாக்!
மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை நீட்டிப்பு, லே மற்றும் கார்கிலுக்குத் தனி மக்களவைத் தொகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகிய நான்கு கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். லடாக் மக்களுக்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையில் நீட்டிப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்றும், அதனால் அதற்குத் தடை ஏற்படுத்துவதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது. அப்படியெனில் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி விட்டன, இனி முதலீடுகள் குவியும் என்று பேசினாரே பிரதமர், அது என்னவாயிற்று?
லடாக்கைப் பாதுகாப்பதே லடாக் மக்களைப் பாதுகாப்பது!
இந்திய அரசியலமைப்பில் பாரதமாகிய இந்தியா என்பது மிகவும் அடிப்படையாக வகைப்படுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு மக்களை மையத்தில் வைக்கிறது. இந்தியா என்றால் என்ன?, அது கூட்டாக எதற்காகப் பாடுபடுகிறது என்பதைத் தீர்மானிப்பது (நாமாகிய) மக்களே. இன்றைய எந்தவொரு அரசாங்கமும் மக்களின் கூட்டு விருப்பத்திற்கு உரிய அறங்காவலர்களாக மட்டுமே செயல்பட முடியும், அதன் எஜமானர்களாகச் செயல்பட முடியாது. எனவே நாம் ஏற்றுக் கொண்ட அந்தச் சமூக, அரசியல், பொருளாதார ஒப்பந்தத்தை மதிக்குமாறு லடாக் மக்கள் ஒன்றிய அரசிடம் கேட்டு வருகின்றனர். லடாக் மக்கள் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டும், நீண்ட காலமாக தங்களது தனித்துவமான கலாச்சாரம், மரபுச் சூழலைப் பாதுகாத்து வருகின்றனர். தொலைதூர மற்றும் கடினமான எல்லைப் பகுதிகளில், ஆயுதப் படைகளுடன் சேர்ந்து, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அவர்கள் எப்போதும் தங்களால் இயன்றதைச் செய்துள்ளனர்.
இன்று, அவர்கள் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கின்றனர். நீடித்த வளர்ச்சி இன்மை, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பனி, பனி மூடிய பகுதிகள், நிலம், நீர் மற்றும் தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். அரசியலமைப்பின், பாதுகாப்புகள் இல்லாமல், மக்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான லடாக்கின் நுட்பமான சமநிலை மீது, மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்திற்று. ஒன்றிய அரசின் பெரு நிறுவன ஆதரவுக் கொள்கைகள், இந்தப் பெரும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.
இமயமலைப் பகுதி மற்ற மாநிலங்களில் நடப்பது போல, லடாக்கில் மெகா திட்டங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை ஒன்றிய அரசு ஏற்கெனவே தீவிரமாக அமல்படுத்த, பரிசீலித்து வருகிறது, கனிம வள வேட்டைக்குப் பெருமளவிலான நிலங்கள் மற்றும் வளங்களை, பெரு நிறுவனங்களுக்கு ஒப்படைப்பது குறித்தும் மிகத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக்கிற்கு, பாதுகாப்பை வழங்குவதும், முழுமையான மாநிலமாக அதனை அங்கீகரிப்பதும், ஒரு நியாயமான கோரிக்கை மட்டுமல்ல, அவசரத் தேவையும் கூட. பெரும்பான்மையான லடாக்கியர்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் லடாக்கிய மக்கள் தங்களது நிலம், வளங்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க அதிகாரம் அளிக்கும். இந்த நடவடிக்கைகளின் தன்மை நிலையானது, சுற்றுச்சூழல் ரீதியாகப் பொறுப்பானதுடன், உள்ளூர் மக்களின் உணர்வுகளோடு, வேரூன்றியுள்ளது என்பதையும் உறுதி செய்யும்.
லடாக்கைப் பாதுகாப்பது என்பது அதன் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல, உலகின் மிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான இமயமலைப் பகுதியைப் பாதுகாப்பதுமாகும். இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி, எல்லை தாண்டிய பதற்றங்களைக் கண்காணிக்க உதவும். லடாக் மக்களைக் கேட்டுக் கொள்வதன் மூலம், நமது அரசின் ஜனநாயக உள்ளடக்கம், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நீதிக்கான ஒரு வரலாற்று முன்மாதிரியை உருவாக்க முடியும்.
உள்ளூர்த் தகவல்கள், மக்கள் ஒத்துழைப்புடன் நமது எல்லைகளைப் பாதுகாக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபை, 2025 ஆம் ஆண்டை சர்வதேசப் பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாகக் கடைப்பிடிப்பதால், இந்தியா, லடாக்கின் சுற்றுச்சூழலை அதன் தனித்துவத்தைப் பாதுகாப்பதே முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால் இந்துத்துவ, கார்ப்பரேட், பாசிச பாஜக அரசு, மக்களைப் பற்றி என்றும் கவலைப்பட்டதில்லை. தனது எஜமானர்களை ஏற்றி விடவும் செய்யும், மக்களை எத்தி விடவும் துணிவார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு!