
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக மோடி தன்னைத் தானே புகழ்ந்து கொண்டாலும், 80 கோடி மக்கள் இன்னும் மானிய விலையில் தரப்படும் பொதுவிநியோகத் திட்ட தானியத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், இதே நாட்டில், தீவிர ஏழ்மையை முற்றிலும் ஒழித்த முதலாவது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. ஒன்றிய அரசின் நிறுவனமான நிதி ஆயோக்கின் 2021 அறிக்கைப்படி, கேரளாவின் தீவிர ஏழ்மை விகிதம் வெறும் 0.7% ஆகும். இந்திய நாட்டின் சராசரியான 14.96 சதத்துடன் ஒப்பிடும்போது இது அபூர்வ சாதனையாகும்.
வறுமை என்பது உணவு, சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பல்முனை வறுமைக் குறியீட்டின் (மல்ட்டி மைமென்ஸனல் பாவர்ட்டி இண்டெக்ஸ் – எம்பிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது உலக வங்கி அளவீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குறியீடாகும்.
இந்தத் துறைகளில் கேரளா மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மாநிலம் 64,000க்கும் மேற்பட்ட மிகக் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை வீடு வீடாகச் சர்வே செய்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீடுகள், நிலம், நிதி உதவி, அடையாள ஆவணங்களை ஜியோ டேக்கிங் என்ற கணினி பதிவு முறையில் அனைத்துத் திட்டங்களும் கண்காணிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.
இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் கட்சி சார்பின்றி, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. கேரளா அரசின் பங்கேற்பு, நிர்வாக முறை, இதற்கான அடித்தளமாக அமைந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றுப் பாதையும், நிலச்சீர்திருத்தங்களும், கல்வி மற்றும் சுகாதார முதலீடுகளும் இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணங்களாகும்.
முக்கியச் சாதனைகள்:
- மனித வள மேம்பாட்டுக் குறியீடு (HDI): 0.7 (இந்திய சராசரி 0.71)
- எழுத்தறிவு: 96.2% (இந்தியா 77.7%)
- சராசரி மனித ஆயுள்காலம் : 78.2 ஆண்டுகள் (இந்தியா 72)
- குழந்தை இறப்பு விகிதம்: 1000 குழந்தைகளுக்கு 5 பேர் மட்டும்
- உடல்நலத்துக்காக அரசு செலவு : ஒருவருக்கு ரூ.1000 (தேசிய சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்)
- தொழிலாளர் சராசரி ஊதியம் : ரூ.700 (தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம்)
கேரளா அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, (LDF, UDF) இரு கூட்டணிகளும் குடிமக்கள் நலத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்தன. மதப் பன்மைத்துவம், சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு, பண்பாட்டு மரபுகள் ஆகியவை பாஜகவின் சமூகப் பிளவுக் கொள்கைகளுக்கு எதிராக ஒருமைப்பாட்டை உருவாக்கின.
கியூபாவுடன் ஒப்பீடு: கேரளாவைப் போல கியூபாவும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நல அரசை உருவாக்கி, பல்முனை ஏழ்மையை 0.7% அளவிற்குக் குறைத்தது. இரண்டும் பொருளாதார அழுத்தங்களை மீறி, மனித கண்ணியத்தையே வளர்ச்சியின் அளவுகோலாகக் கொண்டன.
நிறைவாக:
மாநிலத்தின் வளர்ச்சி என்பது கட்டுமானங்கள், உற்பத்திக் குறியீடு (ஜிடிபி) ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியதல்ல.
மாறாக, தடுக்கக்கூடிய மரணங்களில் எந்த ஒரு குழந்தையும் மரணமடையாததை உறுதி செய்வது, யாரொருவரும் கல்வி கற்க வாய்ப்பில்லாது கல்லாமையில் உழல்வதையும், எந்த ஒரு குடும்பமும் பட்டினியுடன் உறங்கச் செல்லாது இருப்பதையும் உறுதி செய்வதுதான் உண்மையான வளர்ச்சி.
மக்கள் நல வாழ்வை மையமாகக் கொண்ட அரசியல், சுகாதாரம், கல்வி, சமத்துவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த விளைவுதான் வளர்ச்சி என கேரளா நிரூபித்துள்ளது.
இந்தியாவின் ஏழ்மை ஒழிப்புப் பாதையில் கேரளா ஒரு வழிகாட்டும் ஒளி விளக்காக நிற்கிறது.