காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -2)
க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்

இரண்டாம் பாகம் தொடக்கமே சின்னியம் பாளையம் தியாகிகளின் வரலாற்றுக் குறிப்புகளோடு தொடங்குகிறது. குறிப்புகள் மூன்றரைப் பக்கங்கள்தான் இருக்கின்றன. அதைப் படிக்கிறபோது ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ ‘தூக்குமர நிழலில்’ என்கிற தலைப்புகள் நினைவலைகளாக எழும்பி விழுகின்றன. களப்பால் குப்புவைப் பற்றி படிக்கிறபோது நில பிரபுத்துவம் எப்படியெல்லாம் கொடுமைகளை இழைத்து இருக்கிறது என்பதை ஜீவபாரதி பதிவு செய்து இருக்கிறார். அக்கொடுமைகள் நினைவுகளாக மனத்திடையே மீண்டும் விரிகிறபோது கோபம் வருகிறது. இரத்தம் சுடேறுகிறது. களத்தில் நின்று போராட்டத்தை எதிர் கொண்ட தோழர்கள் அவர்களின் தலை பூமியைப் பார்க்காமல் எதிரியைக் கண்களால் பொசுக்கியதை நாம் எழுத்துகளில் காண முடிகிறது. அவ்வீரத்திற்கு இணையானது வேறு எது?– என்று வினா தொடுக்கச் செய்கிறது.
சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைச் ‘சேலம் சிறையில் சிந்திய இரத்தம்’ என்று தலைப்பிட்டு ஜீவபாரதி எழுதி இருக்கிறார். இது 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி. அப்போது பனம்பள்ளி கோவிந்தமேனன் போலீஸ் மந்திரியாக இருந்தார். கேரளப் பகுதிகள் சில சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்தன. கம்யூனிஸ்டுகள் 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி ஒரு மாபெரும் அதிர்வை இந்தியாவில் ஏற்படுத்தியது. அந்த 22 பேர் யார், யார் எனப் பெயர் விவரங்களை இரண்டாம் பாகத்தில் அறிந்து கொள்கிறோம்.
‘தூக்கு மர நிழலில்’ எழுதிய சி.ஏ.பாலன் பற்றிய குறிப்பைப் படிக்கிறபோது தமிழில் குமுதத்தில் அது தொடராக வெளிவந்தது நினைவுக்கு வருகிறது, இவரது குறிப்பை முடிக்கிறபோது ஜீவபாரதி, ‘வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் கழித்தவர்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். ‘துன்பம் உறவரினும்’ என வள்ளுவர் கூறுவாரே அவ்வடிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
ப.விருத்தகிரி பற்றி இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. தொழிற்சங்கங்களை நடத்துவதற்கு இவருடைய புத்தகங்கள் வழி காட்டின. நாமும் அதனைப் பயன்படுத்தி இருக்கிறோம். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியல் இக் குறிப்பில் இடம் பெற்று இருக்கிறது.
ஞானையா பற்றி சொல்ல வேண்டுமானால் உலகம் சுற்றியவர். தொழிற்சங்கத்தை கட்டி அமைப்பதில் திறமை மிகுந்தவர். தபால் தந்தி துறையில் பணியாற்றிய தி.மு.க.காரரான ஏ.எஸ்.ராஜனை கடுமையாக விமர்சனம் செய்தவர். ஜி.இலட்சுமணன் பற்றி மட்டும் ஜீவபாரதி கூறி இருக்கிறார். ஓர் அமைப்பைக் கட்டும் போது அவர்களுக்கு ஏற்படுகிற இடையூறுகளை கடுமையாக விமர்சிக்கவே செய்வர். ஞானையா தனது இறுதி காலத்தில் தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கொள்கையாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நூலில் இடம் பெற்றுள்ள வி.கே. நரசிம்மன் கடைசியாக சத்ய சாயிபாபாவிடம் இருந்தார். இதனை நாம் அறிந்து இந்த புத்தகப் பார்வையில் வெளிப்படுத்தினோம். ஜீவபாரதி சிறிவில்லிப்புத்தூர் மகாராஜபுரம் தோழர் சீனிவாசன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார் என்று ஒரு தோழரைப் பற்றி இந் நூலில் தெரிவித்து இருக்கிறார். பின்னால் சொல்லப்பட்ட இரண்டை விட ஞானையாவின் கொள்கைப் பார்வை ஒரு வகையில் வரவேற்கத்தக்கதே ஆகும்.
இரண்டாம் பாகத்தில் மலேயா கணபதி வருகிறார். மலேயா கணபதி மலேயாவில் சென்று எப்படி இயங்குகிறார். எப்படி வாழ்க்கையைத் தொடங்கினார். தொழிற்சங்கங்களைக் கட்டினார். அங்கே இருந்த இயக்கங்களோடு தொடர்பு கொண்டு கணபதி வளர்த்தெடுத்தார். அங்கே நேதாஜியை அவர் சந்தித்தது – தடை செய்யப்பட்ட மே தினத்தைக் கொண்டாடியது போன்ற நிகழ்வுகளை ஜீவபாரதி எழுதியிருக்கிறார். இதன் மூலம் ஆளுவோரை அவர் கதி கலங்கச் செய்து இருக்கிறார். கணபதியால் மலேயாவே போராட்டக்களமாகிவிட்டது. பல அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்த கணபதி மிகத் திறமையாகச் செயல்பட்டார். இவரை ஒழிக்க மலேயா அரசு முயற்சி எடுத்தது. தலைமறைவு ஆனார். இறுதியில் போலீசிடம் சிக்கினார். இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இவ்விவரங்களை எல்லாம் ஜீவபாரதி சொல்கிறார்.
1949 மே மாதம் 4 ஆம் தேதி கணபதி தூக்கிலிடப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு சுமார் 48 பக்கங்களில் ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ எனும் தலைப்பில் ஒரு சிறு பிரசுரத்தை கலைஞர் எழுதி வெளியிட்டார். இச்சிறு வெளியீடு மாபெரும் பரபரப்பைத் தமிழ்நாட்டில் அச் சமயத்தில் உருவாக்கிற்று. இதைப் பற்றி இந் நூல் ஒன்றும் கூறவில்லை.
நா.வானமாமலை ஓர் அறிவொளி வட்டத்தை ஏற்படுத்தியவர். திராவிட இயக்கத்தின் தமிழ் உரை நடையை ‘செயற்கை நடை’ என விமர்சனம் செய்தவர். ஆனாலும் இவரது ஆய்வுகளையும் நூல்களை யும் கே.ஏ.மதியழகன், இராம.அரங்கண்ணல், ப.புகழேந்தி போன்றோர் படித்ததை நாமறிவோம். நாமும் அவரது ‘ஆராய்ச்சி’யைப் படித்து இருக்கின்றோம். நாட்டுப் புற பாடல்களை வாசித்து இருக்கின்றோம். இவரும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
இரண்டு பாகங்களில் சொல்லப்பட்டு இருக்கிற அனைத்துத் தோழர்களைப் பற்றியும் நினைவு கூர்ந்து சொல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு உண்டு. ஆனால் இது இயலாத ஒன்று. இதிலுள்ள பலர் பொது மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்து போனவர்கள். ஒரு சிலர் புகழ் பெற்றவர்கள்–நாடறிந்தவர்கள். தொழிற் சங்கத்தினர்–பெருந்தலைவர்கள் என்ற வரிசையில் இருப்பவர்கள். அதனால் அவர்களின் ஓவியத்தைப் பார்ப்பதோடு செய்திகளையும் அறிந்து மன நிறைவு கொள்வர். தாம் அறியாதவர்கள் ஆனாலும் அவர்களின் தியாகங்களை அவர்களின் சாகசங்களை அறிந்து மலைப்பர், போற்றுபவர். அப்படிப்பட்ட இரு வகையினரும் இந்த இரண்டு பாகங்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.
ஆகவே நூலில் இடம் பெற்றுள்ள அனைவரையும் இந்தப் ‘பார்வையில்’ அறிமுகப்படுத்த முடியாது. எனினும் இன்னும் மூன்று பேரைப் பற்றி நாம் சொல்ல விரும்புகின்றோம். தொழிற்சங்கத் தலைவர் எஸ்.சி. கிருஷ்ணன். இவர் மின்சாரம் வழங்கு துறையில் தொழிற்சங்கங்கள் தொடங்கும் போது Madras Electricity System ஆக இருந்தது. மின்சாரம் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் உழைக்க வேண்டி இருந்தது. 1950 களில் – தினக்கூலிகளாக 1 1/4 ரூபாய் நாள் ஒன்றுக்கு கூலி வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றினர். இவர்களுக்காக முதன் முதலில் ஒரு சங்கம் அமைத்து அவர்களை ஒரு வகைப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் எஸ்.சி. கிருஷ்ணன். இவரைப்பற்றி மின்சார வாரியத்தில் பணியாற்றி இன்றைக்கு 80 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
சென்னை, பிரிக்கப்படாத செங்கற்பட்டு மாவட்டங்களில் உள்ள MES தொழிலாளர்கள் எஸ்.சி. கிருஷ்ணனை தங்களின் சிறந்த வழிகாட்டியாகக் கொண்டார்கள். இதை நாம் நேரிடையாக அறிவோம். அந்த எஸ்.சி. கிருஷ்ணனைப் பற்றி இந்நூல் பதிவு செய்து இருக்கிறது. தொழிற் சங்கம், அரசு மற்றும் நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் சட்ட நெறியைப் பின்பற்றச் செய்து இருக்கிறது. புதிய சட்டங்களை இயற்ற செய்து இருக்கிறது என்பதே பெரியதொரு வரலாறு. இதையாரும் இன்றைய வரை விரிவாக எழுதியதில்லை.
அடுத்து ஜெயகாந்தன். இவர் தனக்குத் தானே ஆசிரியனாக இருந்து கற்றுக் கொண்டவர். உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முழுவதுமாக முடிக்காதவர். ஆனால் அவரோடு உரையாடினால் அவர் மேடைப் பேச்சைக் கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. அவரின் மேதமை மட்டுமே புலப்படும். பாரதி கவிதைகள் அத்தனையும் அவருக்கு மனப்பாடம். பல ஏடுகளில் ஆசிரியராக இருந்தவர். ஒன்று பட்ட கம்யூனிஸ்டுக் கட்சியில் பிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்தவர். நேரில் சந்தித்துப் பேசினால் ஓர் அரசரைப் பேட்டிக் காண்பதுபோல் இருக்கும் ‘எல்லா மொழியும்’ பேசுவார். இமயம் அளவுக்குச் செருக்கு உள்ளவர். ஜீவாவை ஞானசிரியனாகக் கொண்டவர். இவரை நமக்கு ஜீவபாரதி பதிவு செய்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் விமர்சனங்கள்’ என்கிற புத்தகத்தில் ‘தி.மு.க.வை ஒரு சமூக சீரழிவு இயக்கம்’ என்று எழுதியிருந்தார் ஜெயகாந்தன். அதையெல்லாம் தி.மு.க. பெரிதுபடுத்தவில்லை. ‘சரஸ்வதி’ எனும் பத்திரிகையில் ஆரம்ப காலத்தில் கதைகள் எழுதி வந்தார். இப்பத்திரிகையின் ஆசிரியர் வ.விஜய பாஸ்கரன் அவருடைய அனுபவங்களைத் தொகுத்து ‘திரும்பிப் பார்க்கிறேன்’ எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். அதன் வெளியீட்டு விழா நம் தலைமையில் – சின்னகுத்தூசி தங்கிருந்த ‘லாட்ஜின்’ பெரிய வளாகத்தில் நடைபெற்றது. ஆர்.நல்லகண்ணு நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஜெயகாந்தன் பெற்றுக் கொண்டார். ஏ.ஆர். வேங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். அந்தப் புத்தகத்திற்கு நாம் மதிப்புரை எழுதியிருந்தோம்.
அந்த மதிப்புரையில் இறுதியாக நாம்,ஒரு கம்யூனிஸ்டு எல்லாம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அவனுக்கு எதையும் எதிர்கொள்கிற துணிச்சலும் இருக்கவேண்டும். அவன் மக்களோடு மக்களுக்காக இயங்க வேண்டும். ‘நமக்காக இருப்பவன் இவன்’ என ஏதுமிலிகள் இவனை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதற்கும் மேலாக அவன் எல்லாம் கற்றும், பெற்றும் ஏதுமில்லாதவனாகவும் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் ‘துறவு மார்க்கத்தின் இச்சை!’ இவ்வளவு கடினங்களையும் ஏற்பவனும் தாங்குபவனுமே ஒரு கம்யூனிஸ்டு!’என்று எழுதியிருந்தோம்.
இந்நூலில் தொகுக்கப் பெற்று வரலாற்றுக் குறிப்புகள் வரையப்பட்டு இருப்பவர்கள் நாம் மதிப்புரையில் குறிப்பிட்டு இருக்கிற வரையறைக்கு உட்பட்டவர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை மாற்றி அமைக்கிற போராட்டத்தில் அவர்களின் புரட்சிகரமான பங்களிப்பை எவர்தான் மறுதலிக்க முடியும்?
தோழர் பெ.சீனிவாசன் பற்றி இந்நூலில் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அவர் ‘தமிழகக் கம்யூனிஸ்டு வீரர்கள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். இந் நூலும் இரண்டு பாகங்களைக் கொண்டது. இதில் நானூறுதியாகிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். இந் நூலில் அவரைப் பற்றி எதுவும் அவர் சொல்லவில்லை. இந்த விவரங்களை ஜீவபாரதி எழுதியிருக்கிறார்.
‘தன்னை மறந்து இன்பமுற வெண்ணிலாவே
ஒரு தந்திரமொன்று சொல்லிடுவாய் வெண்ணிலாவே’
என்று கேட்டார் வள்ளலார். இதோ சீனிவாசன் ‘தன்னை மறந்து’ மற்றவர்களைப் பதிவு செய்து இருக்கிற களவீரராகத் திகழ்வதை பார்க்கின்றோம். நாம் இன்னும் சீனிவாசனின் நூலைப் படிக்கவில்லை. இப்படி ஒரு நூல் வந்திருப்பதை இந் நூலின் மூலம்தான் அறிந்தோம்.
இப்படி இந்த இரண்டு பாகங்களிலும் இடம் பெற்று இருக்கிற வீராங்கனைகள் வீரர்கள் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகளாக படிப்போர்க்கு தெரிவார்கள். ஆக்கமளிக்க உதவுவார்கள். நூலினுள்ளே குறைகளைவிட நிறைகளே மிக அதிகமாகத் தெரிகின்றன. இதை எழுதித் தொகுத்த ஜீவபாரதி இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை முடித்து இருக்கிறார் என்றால் அவரைப் பாராட்டுகின்றோம். போற்றுகின்றோம்.
நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை வீச்சில் நன்றாகப் பாகுப்படுத்தி கூறி இருந்தார்கள். சமூக விடுதலை திராவிட இயக்கத்திற்கானது; வர்க்க விடுதலை பொதுவுடைமை இயக்கத்திற்கானது என்றாலும் இவ்விரண்டு இயக்கங்களும் இவ்விடுதலைகளை இணைந்து பணியாற்றிப் பெற வாய்ப்புள்ளவை என்பதை அவ்வுரை வீச்சு வெளிபடுத்த முனைகிறது என்று நாம் கருதுகின்றோம். அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வலதுசாரிகளின் கூச்சல் ஓயும்; ஒழியும்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய வைரமுத்து நமக்குக் கிடைத்த கபிலர். அவர் உரையில் பட்டுத் தெறித்த கருத்தை ஏடுகளிலிருந்து வெட்டி எடுத்து வைத்திருக்கிறோம். காலம் தோறும் கம்யூனிஸ்டுகள் நூலைப் பற்றி அவர், ஆட்கள் மீது வாள் வீசலாம், ஆனால் சூரிய ஒளி மீது எப்படி வாள் வீசுவீர்கள்? கம்யூனிச் சித்தாந்தம் காற்றைப் போன்றது. சூரிய வெளிச்சத்தைப் போன்றது. தியாகம் இல்லாத கட்சி வாழ்வதில்லை. முகம் தெரியாத தியாகி களின் கதையை கண்ணுக்குத் தெரியாத வேர்களின் கதையை இந் நூல் பதிவு செய்துள்ளது. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் இந் நூலைப் படிக்க வேண்டும்”– என்று கவிப்பேரரசு பரிந்துரை செய்கின்றார். நாமும் அதனை வழிமொழிகின்றோம்.
ஜீவபாரதியின் நூல் வரவேற்கத் தகுந்த ஒரு சிறந்த ஆவணம். எந்த இயக்கத்துக்காரர்களும் முன்னணி வீரர்களும் படித்துப் பயன் பெறலாம். நூலின் முன்னே கட்டியங் கூறும் முத்தரசனின் அணிந்துரை யையும் அரசியல்வாணர்கள் படித்துப் பார்த்தால் நெஞ்சில் நிறுத்துவர். முழு மெய்ப்பொருளை அறிய முயல்வர்.