இந்தியாதமிழகம்

காலம் தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் கற்றுத்தரும் பாடம்

பொதுச்செயலாளர் டி.ராஜா எழுச்சியுரை

கம்யூனிஸ்டுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் இங்கு வெளியிடப்பட்டுள்ள ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல். இந்த இரு நூல்களும் வரலாற்றுப் புத்தகங்கள் மட்டுமல்ல, வரலாற்றுப் பாடங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி “காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்” நூல் வெளியீட்டு விழா சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கி உரையாற்றினார்.

அப்போது, “கம்யூனிஸ்டுகளுடைய வரலாறு ஒரு மகத்தான வரலாறு. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்புரீதியாகத் தொடங்கி இன்றைக்கு நூறு ஆண்டுகள் ஆகின்றன.
கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய போது நாடு அடிமைப்பட்டிருந்தது. பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் காலனிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலம்.

காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதினார்கள். அது ஒரு மாபெரும் இலக்கியமாகவே போற்றப்படுகிறது. உலக நாடுகளில் அது பேரிலக்கியமாகப் போற்றப்படுகிறது. ஏடறிந்த வரலாறு, வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருக்கிறது என்று தொடங்கி, அது முடிகிறபொழுது உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

இழப்பதற்கு எதுவுமில்லை; அடிமைச் சங்கிலிகளைத் தவிர. வெல்வதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது. இப்படித்தான் கம்யூனிஸ்டு அறிக்கை முடிகிறது. இந்த கம்யூனிஸ்டு அறிக்கையை தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர் பெரியார்.

கம்யூனிசம் என்று சொல்லுகிறபொழுது அது ஒரு வாழ்க்கை நெறி. அக வாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான நெறிகளை கம்யூனிசம் போதிக்கிறது. கம்யூனிஸ்டுகள் தங்களுடைய சுக, துக்கங்களைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம், மக்களுடைய சுக, துக்கங்கள். நாட்டினுடைய சுக, துக்கங்கள். மக்களை எப்படி விடுவிப்பது, நாட்டை எப்படி விடுவிப்பது – காலனியாதிக்க காலத்தில் தொடங்கப்பட்ட கட்சிதான் முழுமையான சுதந்திரம் என்று பேசியது. பூரண சுயராஜ்யம் (முழு விடுதலை) என்பதை முன்வைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம் என்பதை நான் பெருமையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காலனியாதிக்கம் ஒழிய வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி இருக்கிற இந்தச் சமூகம் மாற வேண்டும் என்று போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள்.
இந்திய சமூகம் வெறும் வர்க்கங்களால் மட்டுமான சமூகம் அல்ல, சாதிகளால், மதங்களால் பிளவுபட்டிருக்கிற சமூகம். ஏழை, பணக்காரன் என்று பிளவுபட்டிருக்கிற சமூகம். இந்தச் சமூகத்தை மாற்றுவது எப்படி?

இந்தக் கேள்வி மார்க்ஸ் காலத்திலேயே எழுந்தது. உலகத்தைப் பல்வேறு கோணங்களில் பலரும் வியாக்கியானம் செய்கிறார்கள். அதை மாற்றுவது எப்படி? என்பதுதான் மார்க்ஸ் முன்வைத்த கேள்வி. மாற்றம், மாற்றுவதற்கான போராட்டம், அதற்கான ஓர் அமைப்பு என்று வருகிறபொழுதுதான் நாம் யோசிக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் சித்திரவதை செய்யப்படலாம், சிறைச்சாலைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படலாம், தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்படலாம், துப்பாக்கிக் குண்டுகள் அவர்களுடைய உடல்களைத் துளைக்கலாம். கம்யூனிஸ்டுகள் கொல்லப்படலாம். ஆனால், கம்யூனிஸ்டுகள் தோற்பதில்லை, தோற்கடிக்கப் படுவதில்லை.

இந்தியாவில் முதல் சதி வழக்கை சந்தித்த இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம்தான். கான்பூர் சதி வழக்கு. அங்குதான் கட்சித் தொடங்கப்பட்டது.

மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, பெஷாவர் சதி வழக்கு. எத்தனை சதி வழக்குகள் கம்யூனிஸ்டுகள் மீது போடப்பட்டன. அவற்றை எல்லாம் சந்தித்துதான் கம்யூனிஸ்டுகள் நாட்டினுடைய விடுதலைக்காகப் போராடினார்கள்.

சென்னை நகரத்தைச் சார்ந்த சிங்காரவேலர்தான் கம்யூனிஸ்டு கட்சியினுடைய முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அவர்தான் அரசியல் விடுதலை மட்டுமல்ல சமூக விடுதலையும் வேண்டும் என்றார். தீண்டாமையில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், சாதிக் கொடுமைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

இந்தியாவில் இந்தப் பிரச்சினைகளை இன்றைக்கும் எதிர்கொண்டிருக்கிறோம்.
சாதி ஏன் இன்றும் இருக்க வேண்டும்?

இந்தியாவில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே ஒரு பிசாசு இருக்கிறது. சாதி என்ற அந்தப் பிசாசைக் கொல்லாமல், பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம் பற்றி பேசிப் பயனில்லை. இதைச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

இதையேதான் தமிழ்நாட்டில் பெரியார் பேசினார். தீண்டாமை ஒழிய வேண்டும். சாதியம் ஒழிய வேண்டும். சமூக சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். பகுத்தறிவு வளர வேண்டும். அந்த பகுத்தறிவு என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப் பெரியார் சொல்வதற்கு என்ன காரணம்? இன்றைக்கு மனித மனமே மூடப்பழக்க வழக்கங்களால், விஞ்ஞானத்திற்குப் புறம்பான கருத்துகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனித மனம் விடுதலை பெற வேண்டும். இது இன்றைக்கு பெரும் பிரச்சினையாக வந்திருக்கிறது.
இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இங்கு வெளியிடப்பட்டுள்ள இரண்டு தொகுதி நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது. இங்கே தோழியர்கள் நிரம்ப இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இரண்டு நூல் தொகுதிகளையும் நீங்கள் வாங்குங்கள். செங்கொடி காத்த சிகப்பி பற்றிப் படியுங்கள். ஒரு பெண் எப்படி செங்கொடிக்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து செங்கொடியைப் பிடித்து நின்றாள் என்பதை விவரிக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. இந்தியாவை ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா’ (United States of India) அதாவது இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட வேண்டும் என்றவர் அம்பேத்கர்.

மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு. அதை ஒற்றைப் பரிமாண ஆட்சி என்று மோடி நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்திய அரசு ஒரு ஒற்றைப் பரிமாண அரசு அல்ல. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு சரித்திரப் பின்னணிகளைக் கொண்ட ஒரு நாடு. பெரும் வேறுபாடுகளைக் கொண்ட நாடு. இதை அங்கீகரிக்காமல் இந்தியாவை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இப்பொழுது நாடாளுமன்றம் செயல்படுவது அரிதாக இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கவிழ்க்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் முயன்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் செயலிழந்தால் என்ன ஆகும்?

இட்லர் காலத்தில் இதுதான் நடந்தது.

இட்லர் தொடுத்த முதல் தாக்குதலே ரீய்ஸ்டாக் என்ற நாடாளுமன்றத்தை தீயிட்டு எரித்து இல்லாமல் செய்ததுதான்.

இப்பொழுது பாஜக, ஆர்எஸ்எஸ் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள்.

எனவே, ஜனநாயகத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?

அரசியலமைப்புச் சட்டத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?

இவைதான் நம்முன்னால் இருக்கும் பெரும் கேள்விகள்.

இன்றைய இந்தியச் சூழலில், தமிழகச் சூழலில் புரட்சியை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டுமானால் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டு அனைவரும் ஓரணியில் நின்று போராட வேண்டும். இதுதான் இன்றைய காலத்தின் தேவை.
இன்றைக்கு காசாவில் என்ன நடக்கிறது? உணவு கிடைக்காமல் இரண்டு வயது, மூன்று வயது குழந்தைகள் தட்டினை ஏந்தி அவதி அடைகின்றனர். பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி செத்து மடிகின்றனர்.

உலகம் ஒரு குடும்பம் என்று பேசுகிற இந்தக் காலத்தில் காசாவில் குழந்தைகள் ஏன் சாக வேண்டும்? இந்தக் கொடுமைக்கு எங்கே முற்றுப்புள்ளி வைப்பது? எனவே போரற்ற உலகம், பசியற்ற உலகம், ஒரு புதிய உலகம் அமைய வேண்டுமானால், கம்யூனிஸ்டுகள் தியாக உணர்வோடு தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்பதுதான் இந்த நூல்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கிற பாடம்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button