கட்டுரைகள்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வலிகளைத் தாண்டி கிடைத்த வெற்றி!

டி.எம்.மூர்த்தி

பெண்கள் கிரிக்கெட், பெரிதும் கவனத்தை ஈர்த்தது இல்லை. இப்போது பேசப்படுகிறது.
உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் (ஆண்கள் கிரிக்கெட் என்று சொல்லுவதில்லை!) இந்தியா அணி வெற்றி பெற்றிருப்பதும் ஒரு காரணம்.

அந்த வெற்றிக்கு இன்னொரு காரணம் உண்டு. அது ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

கிரிக்கெட் குடும்பப் பின்னணியை சாராத ஒரு பெண். கிருத்துவ மத ஊழியர் குடும்பத்தில் இருந்து வந்தவர். அரை இறுதிப் போட்டியில், பலமுறை உலக சாம்பியன் ஆக இருந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. நங்கூரமாக நின்று 127 ரன்கள் குவித்து, அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றவர்.

பொதுவாக இத்தகைய பெரிய போட்டிகளில், வெற்றி பெற்றதும் அந்த அணியின் வீரர்கள் எக்காளமிட்டு வெற்றியைக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் ஜெமிமா, கண்ணீர் பெருக கையிரண்டையும் கூப்பி வணக்கம் சொன்னார். அது வெற்றியின் ஆனந்தம் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அனுபவித்த வலியின் மிச்சம். அந்த ஒளி மிகுந்த தருணத்தில் பின்னால் கவ்விப் பிடித்திருந்த ஆழமான இருள்.

மத அடிப்படையிலான அவதூறு, சமூக ஊடகங்களில் அவர் மீது பொழியப்பட்ட சாக்கடை மழை, இவற்றினால் மன அழுத்தத்துடன் அவர் மேற்கொண்ட தனிப்பட்ட போராட்டம், இவையே அந்தக் கண்ணீர் பெருக்குக்குக் காரணம்.

மும்பையின் புறநகர் பகுதியில், ‘கர் ஜிம்கானா கிளப்” எனும் புகழ் பெற்ற மன்றம் இருக்கிறது. கிரிக்கெட் மட்டுமல்லாது பல்வேறு விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கும் இடம் அது. கருத்தரங்க கூடங்கள் உண்டு.

இவர் இந்திய அணியில் இடம் பெற்ற போது, அந்தக் கிளப் இவரை கௌரவ உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. இவரது தந்தை ஒரு மத ஊழியர் என்பதால், அனுமதி பெற்று அங்கு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறார்.

ஜெமிமா, மதமாற்றம் செய்வதற்கான கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அவர் மீது எழுப்பப்பட்ட அவதூறு. இதற்கு ஆதாரமும் இல்லை, குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை, எந்த சட்ட பூர்வ நடவடிக்கையும் இல்லை.

ஆனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தி சங்கிகள் குதறி எறிந்து விட்டார்கள். மதம் மட்டுமின்றி அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி பாலியல் அவதூறுகளும் புயல் போல சுழன்று அடித்தன.

அவரது தந்தை, நான் பிரார்த்தனை கூட்டங்களை தான் நடத்தினேன், மதமாற்றம் என்றெல்லாம் எப்போதும் நடந்ததில்லை என்று கதறினார். அந்த கிளப்பின் தலைவரும் இந்த அவதூறுகளில் உண்மை இல்லை என்று பேசினார். ஆனால் அவதூறு இரைச்சல்களுக்கு மத்தியில், அவரது குரல் எடுபடவில்லை.

அவரை கிளப்பில் இருந்து நீக்கினால் தான், இந்தக் கூச்சல் அடங்கும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஜெமிமா கிளப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

வேறு வழியின்றி, கிளப்பின் உறுப்பினர் நிலை ரத்து செய்யப்பட்டது, ஜெமிமாவுக்கும் குடும்பத்திற்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. எந்த நீதிமன்றமும் அவர் மீது குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை; ஆனால் அவமானமும் நம்பிக்கையின்மையும் மனதில் ஆழமாகப் பதிந்தன.

உலகக்கோப்பை அரை இறுதிக்குப் பிறகு ஜெமிமா வெளிப்படையாகச் சொன்னார்:

“நான் ஒவ்வொரு நாளும் அழுதேன். எனக்கு விளையாட்டைத் தாண்டி வாழ்வது கூட முடியாதது போல தோன்றியது.”

அணியில் இடம் இழப்பது, செயல்திறன் குறைவு என்று சொல்லப்படும் விமர்சனங்கள், மற்றும் ஆன்லைன் வெறுப்புப் பதிவுகள்- இவை அனைத்தும் அவரை மனச்சோர்வுக்குள் தள்ளின.

அந்த துன்பநிலையிலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. “நான் அமைதியாக இருந்தேன். கடவுள் எனக்காக போரிட்டார்”. அது அவரது கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை. இதற்காகவும் அவர் இகழப்பட்டார். ஏனென்றால் அவரது கடவுள் இயேசு பிரான்.

இந்த நாட்டில் விண்வெளியில் பாயும் ஏவுகலங்களை இயக்கிய பின்பு இறைவனை வழிபட்ட ஆகச் சிறந்த விஞ்ஞானிகள் உண்டு. அப்போது அவர்களை யாரும் இழிவு படுத்தவில்லை. மாறாகப் புகழ்ந்தார்கள். ஏனென்றால் அவர்களது இறைவன் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர் அல்லர்.

ஜெமிமா தன் அனுபவத்தை மறைக்கவில்லை.

“மனநலப் பிரச்சனைகள் வீரர்களிடையே அரிதல்ல; ஆனால் நாம் பேசத் தயங்குகிறோம். உதவி கேட்கலாம். அதில் தவறு இல்லை.”

அவர் திறந்த மனதுடன் தனக்கு வழங்கப்பட்ட உளவியல் ஆலோசனையைப் பற்றியும், குடும்பமும் நண்பர்களும் தன்னைக் காத்தனர் என்றும் விளக்கினார், “தன்னைத்தானே ஏற்றுக்கொள்வது” தான் மிக முக்கியம் என்று வலியுறுத்தினார்.

2025 உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது, ஜெமிமா மட்டுமின்றி முழு இந்திய அணியும் புதிய வரலாற்றை எழுதியது. ஆனால் அந்த வெற்றி ஒரு பெண் வீராங்கனையின் உள் உலகத்தின் மீட்பாகவும் இருந்தது.

அவர் பின்னர் சொன்னார்: “நான் எனக்காக அல்ல, அணிக்காக விளையாடினேன். எனக்கு அதுதான் மீட்பு. நான் நூறுகளைத் தாண்டி ரன்கள் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு களத்தில் இறங்கவில்லை. எனது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு எனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது.

இறுதி ஆட்டத்திலும் கூட, இந்தியாவைப் போலவே முதல் தடவையாக இறுதி ஆட்டத்தைத் தொட்ட தென்னாப்பிரிக்கா அணியோடு அவர்கள் விளையாடினார்கள். அங்கும் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

வெற்றி பெற்றதும் மட்டையை தூக்கி எறிவது, ஸ்டம்பைப் பறித்துக் கூத்தாடுவது என்ற வழக்கமான பாணியை இந்திய அணிப் பெண்கள் பின்பற்றவில்லை.

மிக நன்கு விளையாடி வெற்றி வாய்ப்பை இழந்த, தென் ஆப்பிரிக்க அணியின் வீராங்கனைகளைக் கட்டித்தழுவி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவ்வாறு ஆறுதல் சொன்னவர்களில் ஜெமிமா முக்கியமானவர்.

அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பதை அவர் அறிந்திருந்ததே இதன் காரணம்.

அவரது ஆட்டத்திறனையும், ஒழுக்க முறைமைகளையும் பழிதூற்றிய சங்கிகள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button