தமிழகம்

ஒன்றிய அரசை கண்டித்து ஜனவரி 5 தமிழ்நாடு முழுவதும் இரயில் நிலையம் முற்றுகை

இளைஞர் பெருமன்ற மாநிலக் குழு முடிவு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு, மாநிலக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் இரா.தமிழ் பெருமாள் தலைமையில் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.சந்தானம் அரசியல் விளக்க உரை நிகழ்த்தினார். கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் கேசவராஜ் துவக்கவுரை ஆற்றினார். மாநிலச் செயலாளர் க.பாரதி அமைப்பு நிலை குறித்து பேசினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 5.2026 அன்று, மாநிலந்தழுவிய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

தமிழ்நாட்டில் இரயில்வே, வங்கி, தபால், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் 1 லட்சம் பணியிடங்களை பறித்து, தமிழ்மக்களுக்கு துரோகம் செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் 2026 ஜனவரி 5அன்று, தமிழ்நாடு தழுவிய இரயில் நிலையம் முற்றுகை நடத்தப்படும்.

இளைஞர் விரோத, தொழிலாளர் 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுக!

இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் உழைக்கும் மக்கள் இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற, தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதமாக, ஒன்றிய பாஜக அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறது. கால வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வேலை முறை, எந்நேரத்திலும் நிறுவனத்தை முதலாளி மூடுதல், தொழிற்சங்கங்களை நீர்த்துப் போகச் செய்தல், வேலை நிறுத்தத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள், தொழிலாளர் நீதிமன்றங்களை மூடி தீர்ப்பாயங்களை அமைத்தல் உள்ளிட்ட மிக மோசமான சரத்துகளை இச்சட்டத் தொகுப்புகள் கொண்டிருக்கிறது.

எனவே, இளைஞர் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் 4 சட்டத் தொகுப்புகளை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும்

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக!

தமிழ்நாட்டில் உள்ள 170க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில் 7500க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கி வருபவை இக்கல்லூரிகள் தான். இவற்றில், கௌரவ விரிவுரையாளர்கள் குறைந்த ஊதியத்தில் கற்பித்தல் பணியோடு, பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கல்வி வளாகத்தில், ஒரே மாதிரியான பணிக்கு, நிரந்தர ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம், கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் என்பது சமூக நீதிக்கு எதிரானது ஆகும். இவ்வாறு பாகுபாடான முறையில் வழங்குவது கண்ணியமற்ற செயல் என்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. எனவே, 2020ஆம் ஆண்டு அரசாணை 56ன்படி கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுக!

ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இது, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் மருத்துவம் பயிலும் வாய்ப்பையும், கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகவும் அமைந்தது. தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பை தகர்ப்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நீட் தேர்விற்கு எதிராக தமிழ்ச் சமூகம் இன்று வரையிலும் போரிட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 2025 – 2026ஆம் கல்வியாண்டு முதல், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற்று, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பிடுக!

இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகளின் பணியிடங்களில் பல லட்சக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. மறுபக்கம் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைந்து வருகின்றனர். வேலை செய்வதற்கான அறிவும், ஆற்றலும், திறமையும் கொண்ட இளைஞர் சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நல அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்

அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம் எனும் சட்ட திருத்தத்தை திரும்ப பெறுக!

தமிழ்நாட்டில் அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு சட்ட திருத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எரிவாயு மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி, ஈயத் தொழில்கள், ஆபத்தான பூச்சிகொல்லிகள் மற்றும் உர உற்பத்தி, கண்ணாடி உற்பத்தி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்கனவே அமலில் இருந்த தடையை இவ்வரைவு சட்ட திருத்தம் நீக்கியுள்ளது.

இத்தொழில்களில், பெண்கள் ஈடுபடும்போது, அவர்களுக்கு கருத்தரித்தல் பாதிப்பு, மாதவிடாய் பிரச்சினைகள், ஹார்மோன் சீர்கேடு, இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, அபாயகரமான தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தலாம் என்ற தமிழ்நாடு அரசின் வரைவு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு, தமிழ்நாடு மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது.

சாதி ஆணவப் படுகொலையைத் தடுத்திட சிறப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!

  • ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிகளை மூடக் கூடாது, அவற்றை மேம்படுத்த வேண்டும்!
  • தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்!
  • நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை திரும்பப் பெற வேண்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button