
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் ஜெய்ஷ்-இ -முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நிலைகள் என்று சொல்லப்படும் பஹவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட், பிம்பர், கோட்லி, ஷவாய், நல்லா கேம்ப், பிலால் முகாம் ஆகிய 9 இடங்களின் மீது இந்திய ராணுவம், மே 7ஆம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இந்த ஒன்பது பயங்கரவாத தளங்களும், சுகாதார மையங்களை போல காட்டிக் கொண்டனவாம்.
இந்தியாவின் அனைத்து கட்சிகளும் இந்தத் தாக்குதலை ஆதரித்துள்ளன. மோடி ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில், அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும் முதலாவது நடவடிக்கை இதுவே ஆகும்.
“முழு நாடும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்தைப் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம்” என்று பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பாகிஸ்தான் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை தவிர்க்க தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில் இந்திய தாக்குதலுக்கு ஏற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்ள படைகளுக்கு முழு அதிகாரம் அளித்து இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.
பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்பது வேறு. அதே நேரத்தில் இது இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒரு போராக மாற்றப்படுவது சரியும் அல்ல; நல்லதும் அல்ல.
“முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போர்கள் பெரும்பாலும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக அல்ல, ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காகவே நடத்தப்படுகின்றன” என்பது மார்க்சிய மூலவர்களின் கருத்தாகும்.
தமிழ்நாடு உட்பட, போருக்கான பயிற்சிகள் நாடெங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் எல்லையில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் திட்டமிட்டபடி அதே நாள்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“வேறொரு நாட்டின் நிலத்திலிருந்து தனக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலை எந்த நாடும் ஏற்க வேண்டியது இல்லை” என்று பிரிட்டன் கருத்து தெரிவித்துள்ளது.
“பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு பதிலடி தருவது பற்றி பாகிஸ்தான் யோசிக்க வேண்டாம்” என்று அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியிருக்கிறார்.
“இது சீக்கிரம் முடிய வேண்டும்” என்கிறார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்.
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து இந்தியா முன்கூட்டியே அமெரிக்காவுக்கு தெரிவித்திருந்தது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறது.
ஒளிவு மறைவில்லாமல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். ‘அமெரிக்காவிற்காகவும், பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காகவும் சுமார் மூன்று தசாப்தங்களாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவும் பயிற்சியும் நிதி உதவியும் வருகிற மோசமான அசுத்த வேலையை பாகிஸ்தான் செய்து வருகிறது”.
“அது ஒரு தவறு, அதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். இந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானைக் குறை கூறுவது பெரிய வல்லரசுகளுக்கு மிகவும் வசதியானது. அவர்களது ஆணையின் படி 80களில் சோவியத் யூனியனுக்கு எதிராக கலகம் செய்து சீர்குலைப்பதில் வெற்றி பெற்று, அந்தச் செயலுக்காக வாஷிங்டனில் அவர்கள் விருந்து தந்து கொண்டாடியவர்களைத்தான், இன்று பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்கள்” என்றார் அவர்.
இந்த பதட்ட சூழல் உருவானதற்கு பின்பு, ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்து கொண்டிருப்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது” என்று பேசியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். 1947-ல் அவருக்கு எத்தனை வயது என்று தெரியவில்லை!!
எல்லைக்குச் சென்று போரில் பங்கேற்க தயாராக வேறு இருக்கிறாராம் ‘ரகசிய வேலைகளில் சமர்த்தரான’ நயினார்.
“சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026ல் தமிழகத்தில் ‘வெற்றிவேல் வீரவேல்’ ஆபரேஷனை தொடங்கப் போவதாகவும் பேசியுள்ளார்.!
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையோடு தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு அவர் பேசுகிறார் என்றால், தமிழ்நாட்டை எதிரி நாடு என்றே பாஜக முடிவெடுத்து விட்டது என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
தனக்கு எதிரான ‘பயங்கரவாதி’களின் அடையாளங்களை தமிழ்நாடு அறிந்தே இருக்கிறது!