தலையங்கம்

மாமிசம் உண்பது இழிவானதா?

தலையங்கம்

திருப்பரங்குன்றம் குறித்து இன்னொரு தீர்ப்பு வந்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்திலும் மிருகங்களை பலி கொடுக்கக் கூடாது, பலியிடப்பட்ட மிருகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை வழங்கக்கூடாது என்றும் தடை விதிக்கக் கோரி பிப்ரவரி 16, 17 தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது வந்த தீர்ப்பு இது.

அந்த மனுவோடு சேர்த்து, திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் மலை என்று பெயரிட வேண்டும், சமணர் குன்று என்று பெயரிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட்டுள்ளன.

 

தில்லியில் இருந்து வெளியிடப்படும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகை, அதன் பிப்ரவரி 7ஆம் தேதியிட்ட இதழில், பிப்ரவரி 4 அன்று திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களின் ‘பிரம்மாண்டமான’ ஆர்ப்பாட்டத்தில் “வெற்றிவேல், வீரவேல், காப்போம் காப்போம் ஸ்கந்த மலையைக் காப்போம்” என்று 50 பேர் முழக்கமிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

‘ஸ்கந்த மலை’ எனப் பெயரிட வேண்டும் என்று எந்த மனுவும் தாக்கலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ஒரு கோரிக்கை நேர்மறையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை; எதிர் விளைவை உருவாக்கவும் வைக்கப் படலாம்.

இரண்டு நீதிபதிகள் கொண்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு ஜூன் 24ல் வழங்கிய 107 பக்கத் தீர்ப்பில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தைக் கூறி, மூன்றாவது நீதிபதி ஒருவரை நியமித்துத் தீர்வு காணுமாறு கூறியிருக்கிறார்கள்.

நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில், “மதங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்துக் கோவில்களிலும் விலங்குகளைப் பலியிடுதல் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டி, விலங்குகளைப் பலியிடுவதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய இயலாது என்கிறார் அவர்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஆடு கோழி உள்ளிட்ட விலங்குகளை இறைவனுக்குப் பலியிடக் கூடாது எனச் சட்டம் அமல் நடத்தப்பட்டபோது, அதனை எதிர்த்து தமிழ்நாடு கொதித்தெழுந்தது. எனவே அந்தச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

“திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தர்காவில் விலங்கு பலியிடுதல் என்பது பழங்காலத்திலிருந்தே முஸ்லிம்களால் மட்டுமல்ல, பிற சமூகங்களாலும் ஒரு மத நடைமுறையாக உள்ளது என்பது தெளிவாகிறது.

முருகன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்கா ஆகியவை மலையின் வேறு வேறு பகுதிகளில் உள்ளன. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டு முறையும் இன்னொரு வழிபாட்டுத் தலத்தின் புனித வெளியை ஆக்கிரமிக்கவில்லை.

திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக நிலைத்திருக்கிற பொது அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கிற நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது அதிகாரிகள் உறுதியான, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அந்த நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

இன்னொரு நீதிபதியான ஸ்ரீமதி அவர்கள், மலை மீதுள்ள தர்காவில் பாரம்பரியமாக விலங்குகள் பலியிடப்படுவதற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார்.

மேலும் திருப்பரங்குன்றம் கோவில் அருகில் இறைச்சி விற்கும் கடைகள் இல்லை என்பதாலும், அங்குள்ள திருமண மண்டபங்களில் மாமிச உணவு பரிமாற அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், கோவிலில் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும், பல திருமண மண்டபங்களில், புலால் உணவு பரிமாற அனுமதிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் கோவிலின் புனிதத்தை காப்பதற்கானது அல்ல.

திருப்பரங்குன்றம் ஊரில், மிகப் பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் மாமிச உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கோவிலில் புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள் என்றும் கூற முடியாது.

திருப்பரங்குன்றத்தைச் சுற்றி, கருப்பண்ணசாமி கோவில் உள்ளிட்ட ஏராளமான நாட்டார் தெய்வ வழிபாடு உண்டு. இங்கெல்லாம் விலங்குகளைப் பலியிடுவது மரபு. ஒட்டுமொத்தமாகப் பலியிடக் கூடாது என்று
தீர்ப்புரைக்கப்பட்டால், பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும்தான்.

தமிழ்நாட்டில் 98 சதவீதம் பேர் மாமிச உணவு சாப்பிடுபவர்கள்தான். மாமிசம் உண்பதே இழிவானது, தரக்குறைவானது என்று ஒரு குற்ற உணர்வுக்குள் தள்ள, மீதமுள்ள இரண்டு சதம் உயர்சாதி இந்துக்கள் முனைகிறார்கள்.

“நீதிமன்றங்களை விட உயர்ந்த நீதிமன்றம் ஒன்றுண்டு. அது மனசாட்சி நீதிமன்றம். அது மற்ற எல்லா நீதிமன்றங்களையும் விட மேலானது” என்பார் காந்தியடிகள்.

திருப்பரங்குன்றத்திற்குள் பாரம்பரியமாக நிலவும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைக் கலவரக் காடாக்கும் சூழ்ச்சிகளைத் தமிழ் மக்கள் முறியடிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button