கட்டுரைகள்

இண்டிகோ நெருக்கடி: தனியார்மய ஏகபோகம்

ம.இராதாகிருஷ்ணன்

இண்டிகோ சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம் காரணமான ஒரு விமானத் துறைச் சிக்கல் மட்டுமல்ல. இது, இந்தியாவின் பொருளாதார திசை குறித்தது.

குறிப்பாக மோடி ஆட்சியின் கீழ் உருவான தனியார் ஆதிக்கம், ஒரே நிறுவனம் மற்றும் ஏகபோக கூட்டு-நிறுவனங்களின், அதிகாரம் மிகுந்தது பற்றிய ஆழமான விவாதத்தை தூண்டியுள்ளது. இதன் விளைவுகள் ஏற்கனவே பல துறைகளில் தெளிவாகத் தெரிகின்றன. தொலைத்தொடர்பு விலைகள் உயர்ந்துள்ளன, சிமெண்ட் விலைகள் செயற்கையாக அதிகரித்து உள்ளன, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கட்டுமானப் பொருட்களை சில பெரிய குழுமங்கள் கட்டுப்படுத்துகின்றன, அதைப்போல விமானத் துறையில் இரண்டு பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செய்கின்றன.

இண்டிகோ நெருக்கடி ஒரு விபத்து அல்ல.

இது, ஒரு பெரிய கட்டமைப்பு நோயின் அறிகுறி.

இண்டிகோ அதிர்ச்சி: ஒரு மாபெரும் தனியார் நிறுவனம் தடுமாறினால், முழு நாடும் பாதிக்கப்படுகிறது.

பல வருடங்களாக அரசு ஒரு எளிய கதையைப் பரப்பியது:

திறன், ஒழுங்கு, நம்பகத்தன்மை கொண்டது தனியார்துறை என்பதே அந்த கதை.

அரசு நிறுவனங்கள் பெருங்குழப்பமானது, மந்தமானது, வினியோகம் வீணாக்கப் படுகிறது இந்த அரசியல் வார்த்தைகளைக் காரணமாக்கி ஏர் இந்தியா குலைக்கப்பட்டது, BSNL நோயுற்ற நிலையில் வைக்கப்பட்டது, இரண்டு நிறுவன விமானத் துறை சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இண்டிகோ வீழ்ச்சியால் உண்மை வெளிப்பட்டது.

தனியார் ஏகபோக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியடைய முடியும். அவை தோல்வியடைந்தால் அதன் தாக்கம் தேசிய அளவிற்கு பரவுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

விமான ரத்துகள் தொடர்ந்து நடந்தன, தகவல் பரிமாற்றம் முழுவதும் முடங்கியது, பொறுப்பேற்க யாரும் இல்லை. இது ஒரு விமான நிறுவனத்தின் தோல்வியல்ல. இது ஒரு பொருளாதார மாடலின் தோல்வி.

அரசு முக்கிய துறைகளை 2 அல்லது 3 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்துவிட்டால்,
அவற்றின் உள்ளகத் தவறுகள் நேராக “தேசிய தடங்கல்” ஆகிவிடும். நாளைய இந்தியாவை கற்பனை செய்யுங்கள்.

ஒரு பெரிய சிமெண்ட் நிறுவனம் உள் பிரச்சினையால் உற்பத்தியை நிறுத்தினால்?

ஒரு பெரிய டெலிகாம் நிறுவனம் தேசிய அளவில் நெட்வொர்க் சரிந்தால்?

அல்லது ஒரு முக்கிய விமான நிறுவனம் செயலிழந்தால்?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முழு நாடும் அதிர்ச்சியை எதிர்கொள்ளும் –

ஏனெனில் அரசு “அனைத்து முட்டைகளையும் ஒரே கூண்டில் வைத்திருக்கிறது”.

இண்டிகோ நெருக்கடி – இந்த இரு நிறுவன ஆதிக்க மாடல் தொடர்ந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதன் முன்னறிவிப்பு.

தொலைத்தொடர்பு துறை: “சீர்திருத்தம்” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு இரு நிறுவன சந்தை ஆதிக்கம்.

ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது 12க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கடுமையான போட்டி, பிராந்திய மாற்று நிறுவனங்கள், சேவைகளில் தொடர்ந்த புதுமை இருந்தது.

இப்போது நிலைமையைப் பாருங்கள், ஜியோ, ஏர்டெல் என்ற இரு நிறுவனங்களுக்கு மட்டுமே மொத்தத் துறை என்று சுருங்கியது, வோடஃபோன்-ஐடியா உயிருக்கு போராடுகிறது, BSNL திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டது.

இதற்கான திட்டமிட்ட பாதையாக புதிய நுழைவுகள் “predatory pricing” பயன்படுத்தின, சிறிய நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டன, அரசு இணைப்பை ஊக்குவித்தது, spectrum விலைப் போட்டு பெரும் குழுமங்கள் மட்டுமே வாங்கும் சூழல், BSNL-க்கு 4G, 5G திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டது.

போட்டி மறைந்ததும் விலைகள் உயர்ந்துகொண்டே வந்தன. இன்று அனைவரும் அனுபவிப்பது?

இதில் பாடம் தெளிவானது. போட்டி இல்லாத தனியார்மயம் என்பது தனியார் ஏகபோகம். அது எப்போதும் “சந்தை சுதந்திரம்” அல்ல.

சிமெண்ட் துறை: அதிக விலை, குறைந்த போட்டி, கூட்டணிகளின் பிடியில் உள்ளது.சிமெண்ட் சாதாரண பொருள் அல்ல. அது வீட்டு விலை, அரசு கட்டுமான செலவுகள், உட்கட்டமைப்பு செலவுகள், கட்டுமான தன்மை ஆகியன தீர்மானிக்கிறது

ஆனால் இந்தியாவின் சிமெண்ட் துறையில் பெரிய நிறுவனங்கள் பல நடுத்தர நிறுவனங்களை விழுங்கி இணைத்துக் கொண்டது. பிராந்திய ஒரே நிறுவனம் கைப்பற்றி (dominance belts) உருவாக்கப்பட்டு, விலைகள் இயற்கைக்கு மாறாக உயர்ந்தபடி நிலைத்திருக்கின்றன. இது “திறன்” அல்ல.

இது பிரதி-போட்டி ஆதிக்கக் குவிப்பு (concentration) .

பாதுகாப்பு இல்லாத தனியார்மயம் என்பது நெருங்கிய கூட்டணி சலுகை சார் முதலாளித்துவம். இன்றைய அரசு போட்டியை ஊக்குவிக்கவில்லை.

அதிகாரத்தை ஒரு சிலரிடம் குவிக்கிறது. அனுமதிகள், நிலங்கள், உரிமைகள் குறிப்பிட்ட குழுமங்களுக்கு, கட்டுப்பாட்டு அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன, அரசு சொத்துகள் குறைந்த மதிப்பில் under-valuation விற்பனை, அரசியல் நன்கொடைக்கு இணையான பொருளாதார முடிவுகள் ஆகும்

துறைமுகங்கள், விமானநிலையங்கள், மின்துறை, லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், டெலிகாம், மீடியா, சில்லறை விற்பனை (retail) ,இப்போது பாதுகாப்பு துறை உற்பத்தி கூட இத்தகைய நிலையில் தள்ளப்பட்டு உள்ளது தெளிவாக தெரிகிறது. இந்தியா சந்தை பொருளாதார வளர்ச்சி அல்ல நிறுவன-அரசியல் கூட்டணி ஆட்சிக்கு நகர்கிறது.

அரசு துறை vs தனியார் துறை ஏகபோகம் – ஒரு பொய் இருமையம்
அரசு பரப்பும் தவறான கோட்பாடு யாதெனில் அரசு துறை என்றால் சோம்பல், ஊழல் கொண்டது. தனியார் என்றால் திறன், சேவை உண்டு என்பது.

ஆனால் உண்மையில் அரசு துறையின் மீது பொதுக் கண்காணிப்பு உண்டு. பாராளுமன்ற பொறுப்பு உள்ளது.

இலாபமில்லாத பகுதிகளிலும் சேவை வழங்க முடியும்.

விலை நிலையாக வைத்திருக்க முடியும்.நெருக்கடி நேரத்திலும் நம்பகத்தன்மை உண்டு.

தனியார் துறையில் இலாபமே முதலானது. செலவைக் குறைக்க மனித உழைப்பை சுரண்டும். விலையை விருப்பம் போல உயர்த்தல், பொறுப்பற்ற முடிவுகள் இயல்பானவை. அரசு ஏகபோகத்தை சீரமைக்கலாம்.தனியார் ஏகபோகத்தை கட்டுப்படுத்த முடியாது.

இதற்காக
1. விலைகள் அதிகரிப்பு
2. குறைந்த சேவை தரம்
3. பணியிடங்கள் குறைப்பு (workforce cuts)
4 சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் MSME அழிவு
5. முழு அமைப்பும் முடங்குதல் (Systemic shocks)
6. கட்டுக்கடங்காத பணவீக்கம்

போன்றவற்றுக்காக ஏன் மக்கள் விலையை செலுத்த வேண்டும்.

பொருளாதார அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம். சில நிறுவனங்களிடம் பெரிய அளவில் அதிகாரம் சென்றால், ஊடகம், விளம்பரம், தேர்தல் நிதி, கொள்கைத் திசை ஆகிய அனைத்தும் குவிகின்றன.இது ஜனநாயகத்திற்கே அபாயம்.

இதன் மாற்று மாடல்:
1. முக்கிய துறைகளில் வலுவான அரசு துறை
2. உண்மையான போட்டி
3. சுயாதீன கட்டுப்பாட்டு அமைப்புகள்
4. பொதுக் கண்காணிப்பு
5. சந்தை ஆதிக்க எதிர்ப்பு (anti-trust) சட்டங்கள்
6. தொழிலாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
7. பொருளாதார அதிகாரத்தின் பன்னாட்டுவாத அதிகாரப் பகிர்வு (decentralisation)

கொண்ட மக்களை மையப்படுத்திய ஜனநாயகப் பொருளாதார கட்டமைப்பு தான்.

எனவே, இண்டிகோ எதிர்காலத்திற்கான எச்சரிக்கை என்ன என்றால் இண்டிகோ நெருக்கடி ஒரு தனிப்பட்ட விபத்து அல்ல. இது அரசு துறையை பலவீனப்படுத்தும், தனியார் ஏகபோகத்தை ஊக்குவிக்கும், போட்டியை ஒழிக்கும், பெரிய நிறுவனங்களையே நாட்டின் முதுகெலும்பாக மாற்றும் மாதிரியின் பிழை.

இதன் விளைவுகள்?

நாடே ஒரே ஒரு தனியார் நிறுவனத்தின் தவறுக்கு அடிமை ஆகிவிடும். இது திறன் அல்ல, நழுவும் பலவீனம்.

இது வளர்ச்சி அல்ல, நம்பிக்கையின்மை.

இது சந்தை அல்ல, நிறுவன ஜமீன்தாரித்தனம்.

இந்தியாவுக்கு ஒரு புதிய திசை தேவை அது, வலுவான அரசு துறை, கட்டுக்குள் இருக்கும் தனியார் துறை, உண்மையான போட்டி, ஜனநாயக கண்காணிப்பு ஆகும்.

தனியார் ஏகபோகம் தேசிய அபாயம் ஆகும். இண்டிகோ நெருக்கடி அதற்கான முதல் பெரிய எச்சரிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button