சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம் எப்படி நடைபெறுகிறது?
பஞ்சாப் மாநிலச் செயலாளர் பந்த்சிங் பிரார் விளக்கம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் சண்டிகர் நகரத்தில், செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில், இந்த மாநாட்டை நடத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநில செயலாளர் பந்த்சிங் பிரார் விவரித்தார்.
“கட்சிப் பேராயத்தை நடத்துவதற்கு தெலுங்கானா மாநிலம் தயாராக இருந்த போதும் கூட, இந்த முறை இந்தியாவின் வட பகுதியில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் நாங்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.
பெரும் தயக்கம் எங்களுக்கு இருந்தது. கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களைப் போல பஞ்சாப்பில் எங்கள் கட்சி பலமாக இல்லை. சென்ற மாநாடு விஜயவாடாவில் நடைபெற்ற போது அது பெரும் திருவிழா போல அமைந்தது. அதே அளவுக்கு எங்களால் நடத்த முடியுமா? என்பதே தயக்கத்துக்குக் காரணம்.
ஆனால் இது குறித்து எங்களது மாநிலக் குழுவில் பேசிய போது, நன்றாக நடத்தி விடலாம் என்று தோழர்கள் உற்சாகத்தோடு சொன்னார்கள். சொன்னது மட்டுமல்ல, உடனடியாக செயலிலும் இறங்கினார்கள்.
காலிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் உறுதியோடு எதிர்த்துப் போராடியது. இடதுசாரி இயக்கங்கள் தீவிரவாதத்தை எதிர்த்து பெரும் தியாகங்களை செய்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ் பிஜேபி அகாலி உள்ளிட்ட எந்த பூர்ஷூவா அமைப்பும் களத்தில் நின்று போராட முன் வரவில்லை. கட்சியின் மூத்த தலைவரான தர்ஷன்சிங் கனடியன் உட்பட கட்சியின் முக்கியமான தலைவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.
கட்சி உறுப்பினர்களும் அவர்களது குடும்பங்களுமாக 3200 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டார்கள்.
பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளை பராமரித்துப் படிக்க வைக்க கட்சி மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டது. தோழர்கள் சத்யபால் டாங், விமலா டாங் போன்றவர்கள் பெரும் பங்களிப்பு செய்தவர்கள். அன்று குழந்தைகளாக இருந்தவர்கள் எல்லாம் இப்போது வளர்ந்து பெரியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களை அழைத்து அவர்களது பெற்றோர்களின் தியாகங்களை கௌரவிக்கவும் வேண்டும், நன்கொடையும் பெற வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
இதனை முதலில் தெரிவித்தவர், தேசிய குழு உறுப்பினராக உள்ள நரிந்தர் சோகல். அவரது பெற்றோர்கள் காலிஸ்தானி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, நான்கு வயது குழந்தையாக இருந்த அவரது கால்களிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இப்போதும் அந்தக் குண்டுகள் உடலில் இருந்து நீக்கப்படாத நிலையிலேயே அவர் வாழ்ந்து வருகிறார்.
(குழந்தையாக இருந்த நரிந்தர் சோகல், கட்சியால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார். கட்சி தனது பொறுப்பில் வளர்த்து படிக்க வைத்தது. அவர் மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளராகவும், இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகியாகவும் பணியாற்றி இருக்கிறார். இப்போது கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக உள்ளார். திருவனந்தபுரம் கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்).
அந்தக் குடும்பங்கள் அக மகிழ்வோடு வரவேற்று 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வசூலித்து தருவதாக உறுதியளித்தனர்.
தொலைபேசி தொழிற்சங்க இயக்கத்தைச் சார்ந்த தோழர் ஸ்வதந்தர் குமார், புற்றுநோய் முற்றிய நிலையில், தனது மரணப் படுக்கையில் இருக்கிறார். “இது எனது கட்சி. அகில இந்திய மாநாட்டை நடத்தும் பெரும் கௌரவம் அதற்கு தரப்பட்டிருக்கிறது. எனது பங்கை நிறைவேற்றுவேன்” என்று கூறி, சங்க உறுப்பினர்களை தொலைபேசியிலேயே அழைத்துப் பேசி ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்துள்ளார்.
இதைச் சொல்லும் போதே பிராரின் கண்கள் கலங்கின. உணர்வு மேலீட்டால் நாக்கு தழுதழுத்தது. இரும்பு போல் உறுதியான, ஆறு அடிக்கு மேல் உயரம் கொண்ட அந்தத் தோழர் கண் கலங்கியது கட்சி வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்தியது.
“மின்சாரத் தொழிலாளர்கள், குடிநீர் வாரிய தொழிலாளர்கள், பஞ்சாப் மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், சாலை போக்குவரத்து மற்றும் அரசுப் பணியில் இருப்பவர்கள், அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் என ஒரு மாதத்துக்கும் குறுகிய காலத்திலேயே 40 லட்சம் ரூபாய் வசூலித்து ஒப்படைத்து இருக்கிறார்கள்.
மாநாட்டு நிதிக்காக எந்த பூர்ஷூவா கட்சித் தலைவர்களிடமும், பெருமுதலாளிகளிடமும் நிதி வசூலிப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.
800 பிரதிநிதிகள் வரை வருவார்கள். 2 கோடி ரூபாயாவது தேவைப்படும். அதனை எமது உறுப்பினர்கள், குடும்பங்கள், அனுதாபிகளிடமிருந்தே வசூலித்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இறங்கி இருக்கிறோம்.
கட்சியின் நிறுவனர்களான சோகன்சிங் பாக்னா, சோகன்சிங் ஜோஸ் ஆகியோரது நினைவிடங்களில் இருந்தும், பிரிட்டிஷ் ராணுவம் படுகொலை நடத்திய ஜாலியன் வாலாபாக்கில் இருந்தும், பகத்சிங், சுகதேவ் ராஜகுரு நினைவிடம் அமைந்துள்ள, இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஹுசைனி வாலாபாக்கிலிருந்தும், ஐந்து தியாக ஜோதிகள் மாநாட்டுக்கு எடுத்துவரப்படுகின்றன.
வரவேற்புக் குழுவின் தலைவராக, மேகாலயா மாநிலத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் உள்துறை அமைச்சரான இந்திரஜித் குப்தா அவர்களின் தனிச்செயலாளராக பணிபுரிந்தவரும், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருமான ஸ்வராஜ்பீர் சிங், வரவேற்புக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஓய்வுக்கு பின் புகழ் பெற்ற பஞ்சாப் டிரிப்யூன் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு, மோடிக்கு ஆதரவாக பத்திரிகைகள் எழுத வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதால், பதவி விலகினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்புக் குழு உறுப்பினர்களாகவும், பந்த் சிங் பிரார் செயலாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இந்தியா முழுவதிலும் இருந்து, மாநில மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட பேராயத்திற்கான பிரதிநிதிகளை வரவேற்க பஞ்சாப் தயாராக இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அகில இந்திய மாநாட்டை நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறச் செய்வோம்” என்று பந்த் சிங் பிரார் பேசினார்.