தலையங்கம்

குஜராத் அமைச்சரவை கூண்டோடு விலகல்!

தலையங்கம்

பாஜக ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்தில் இது நடந்திருந்தால், அனைத்துப் பத்திரிகைகளிலும் இது எட்டுப் பத்தி தலைப்பாகி இருந்திருக்கும். ஆனால் இது குட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் தவிர்த்த மீதியுள்ள 16 அமைச்சர்களும் 16.10.2025ல் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகினர்.

வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2027ல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் முன்னதாக அமைச்சரவையை, அனைத்துச் சாதிகளுக்கும் வட்டாரங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும் வகையில் மாற்றி அமைப்பதற்காக இந்தப் பதவி விலகல் என்று பாஜக கூறுகிறது!

1995ல், காங்கிரசைத் தோற்கடித்து பாஜக பதவியேற்றது. இடையில் சங்கர்சிங் வகேலா, கட்சியை உடைத்து இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ததைத் தவிர்த்து, இதுவரை பாஜக-தான் அரசோச்சுகிறது.

ஆளவந்ததிலிருந்து மத வெறியைக் கிளப்பி விட்டுக் கொண்டே இருந்தது. 2001 இல் மோடி முதலமைச்சரானார். 2002ல் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்த கலவரத்தில் 2000க்கு மேற்பட்டோர், பெரும்பாலும் முஸ்லிம்கள், படுகொலை செய்யப்பட்டனர். பாஜக ஆட்சியில் நங்கூரமிட்டது.

பாஜக ஒன்றுதான் ஊழலே இல்லாத, ஊழலை ஒழித்த கட்சி. அதுவே அதன் சாதனை என்று தமிழ்நாட்டிலும் அதற்கு வெளியிலும் டமாரமிடும் சங்கிகள் பலர்.

ஆனால் குஜராத்தில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல் குறித்து, வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்ல, அந்தக் கட்சியினரே கடிதப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஜெதாபாய் பார்வத், குடிநீர் வழங்கலில் நடக்கும் கட்டற்ற ஊழல் குறித்து கடிதம் எழுதினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் பட்டேல், வருவாய்த்துறையில் நடைபெறும் ஊழல், நிலப் பத்திர ஊழல் பற்றி எழுதினார்.

குமார் கனாணி உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் அரசின் செயலின்மையையும், ஊழல் உச்சத்தில் இருப்பதையும் பற்றி கடிதம் எழுதினர்.

ஜவகர் சாவ்டா என்ற எம்.எல்.ஏ, தனது தொகுதியில் ஆற்றை மறித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டிருப்பது பற்றி புகார் எழுதினார்.

அமுல் பட் உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள், காசு கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதினர். காண்ட்ராக்டர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கடிதங்களில் இருந்தன.

இந்தக் கடிதங்கள் அனைத்தும், கட்சித் தலைவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எழுதப்பட்டிருந்தாலும் கூட, அவை அனைத்தும் பத்திரிகைகளில் வெளிவந்தன. கட்சிக்குள் இருந்தே கசிய விடப்பட்டவை அவை.

இதனைச் சமாளிப்பதற்காக, உயரதிகாரிகளுக்கு குஜராத் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. எம்எல்ஏ, எம்பி-க்களிடமிருந்து வரும் கடிதங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து இரண்டு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை உயர்த்தாமலேயே ஆண்டுக்கணக்கில் தள்ளிப் போடுவதைத் தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டித்தன. பல ஆண்டுகளாக காண்ட்ராக்ட்டில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு நிரந்தரம் பெறத் தகுதி உண்டு என்று குஜராத் உயர் நீதிமன்றம் 2024 அக்டோபரில் தீர்ப்பு வழங்கியது.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம் ரூ.24,800 உதவியாளருக்கு ரூ.20,300 ஊதியம் கொடுக்க வேண்டும் என்று இந்த ஆகஸ்ட்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நிரந்தர உதவிப் பேராசிரியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் தரும்போது, காண்ட்ராக்ட் பேராசிரியர்களுக்கு ரூ.30,000 கொடுப்பது அநீதி, ‘சம வேலைக்குச் சம சம்பளம்’ தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது.

ஆனாலும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதைத் தவிர்த்து, நிதி நெருக்கடி, அரசுக் கொள்கை என குஜராத் அரசு சமாளித்தது.

இவை அனைத்தும் குஜராத் மாநில பாஜக அரசை நிலைகுலையச் செய்திருக்கின்றன. தொழிலாளர் தலையில் தொடர்ந்து கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம். வரும் தேர்தல்களை எதிர்கொள்வதில் நம்பிக்கை இழந்திருக்கிறது பாஜக.

தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக, அரசு எந்திரத்துக்குள் ஒட்டுண்ணிகள் புகுந்து ஊழல் சாம்ராஜ்யம் ஆகிவிட்டது. தனது தோல்விகளுக்காக, அடுத்தவர் மீது பழி போட்டே தப்பிக்கும் பாஜக, இப்போது தனது அமைச்சர்களையே பலியாடுகள் ஆக்கிவிட்டது.

இரட்டை எஞ்சின்களில் ஒன்று, ஒர்க் ஷாப்புக்குப் போயிருக்கிறது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button