ஜெயின் கோவில் இடிப்பு, தேவாலயத்திற்குள் வன்முறை.. பற்றிப் படரும் இந்துத்துவ பாசிசம்
வ.மணிமாறன்

ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதவாத, வெறுப்பு அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிரானது. மும்பை ஜெயின் கோவில் இடிப்பும், அகமதாபாத் தேவாலயத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதும், இதற்கு அரசுக் கட்டமைப்பு அரணாக இருந்ததும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது.
திகம்பர ஜெயின் கோவில் இடிப்பு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலே பார்லே பகுதியில் திகம்பர ஜெயின் கோவில் உள்ளது. பழமையான இந்தக் கோவிலில் சமணர்கள் (ஜெயின்) வழிபட்டு வந்தனர். 2020 ஆம் ஆண்டு முதல் இந்தக் கோவிலை இடிக்க பிர்கான்மும்பை மாநகராட்சி நிர்வாகம் (BMC) தொடர்ந்து முயன்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலம் என்பதால், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமே இடித்துவிடலாம் என சங்கிகள் திட்டமிட்டனர். கோயிலை இடிக்க 2020 நவம்பர் 11 முதல் மாநகராட்சி முயன்று வருகிறது.
பழமையான பங்களா ஒன்றுக்குள் இருக்கும் திகம்பர ஜெயின் கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்றது மாநகராட்சி. சட்டப்பூர்வமாக கட்டப்படவில்லை என்றது. இருப்பினும் ஜெயின் பிரிவினரின் எதிர்ப்பாலும், நீதிமன்றம் மற்றும் அரசியல் தலையீடுகளாலும் திகம்பர ஜெயின் கோவில் தப்பிவந்தது.
கோவிலை இடிப்பதற்கு எதிராக ஜெயின் பிரிவினர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஜெயின் கோவிலை இடிக்கக் கூடாது என இடைக்காலத் தடை பெற்றனர். இந்த வழக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்தது. சமண தெய்வங்கள் காப்பாற்றப்பட்டுவிடும். திகம்பர ஜெயின் கோவில் தப்பிவிடும் என ஜெயின்கள் நம்பிக்கையோடு இருந்தனர்.
ஆனால், மும்பை உயர்நீதிமன்றம் கோவிலை இடிக்கவே கூடாது என நிரந்தரமாகத் தடை விதித்துவிட்டால் என்ன செய்வது? என்று சங்கிகள் கவலைப்பட்டனர். இதனால், அன்றைய பொழுது விடிவதற்கு முன்பு, புல்டோசர்கள் கோவிலைச் சூழ்ந்து நின்றன. திகம்பரர் உள்ளிட்ட கடவுள்கள் தவிர கோவில் இடித்து நொறுக்கப்பட்டது. தகவலறிந்து திரண்ட ஜெயின்கள், தங்களின் கோவிலைக் காப்பாற்ற முடியவில்லையே என கண்ணீர் விட்டனர். திகம்பரக் கடவுளுக்கும் திகைப்புதான்.
ஆர்எஸ்எஸ், பாஜக இந்துத்துவ அமைப்பினருக்கு சிறுபான்மையினர் என்றாலே எட்டிக்காய்தான். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் என்ன? ஜெயின்களாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
தேவாலயத்திற்குள் புகுந்து அமளி
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஈஸ்டர் திருநாள் (ஏப்ரல்-20) அன்று தேவாலயம் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
கல்வாரி நோக்கி கால்களைக் கடித்து
கருணை தேவனை பின்தொடர
மனம் வருந்தி நீ வருவாயா..
மனம் திருந்தி நீ வருவாயா..
பழிகளைச் சுமத்தினரே பாவிகள் ஒன்றுசேர்ந்து
சிலுவை சாவினையே சுமத்தி இகழ்ந்தனரே..
என்று மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்தனர். திடீரென கையில் தடிகளுடன், மிரட்டும் தொனியுடன் பஜ்ரங்தளம், விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சங்கிகள் புகுந்து, ‘ஜெய் ஸ்ரீராம்‘ ‘ஜெய் ஸ்ரீராம்‘ என கத்திக் கொண்டே இருந்தனர். உயிர்த்தெழுந்த இயேசுவை மனமுருகி வழிபட்டதை அவர்கள் நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தனர். ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்பதை நிறுத்திவிட்டு “இந்துக்களை மதம் மாற்றுகிறீர்களா?” என்று எச்சரிக்கும் தொனியுடன் கத்தினர். அமைதிப் பிரார்த்தனைக் கூடம் அமளிக் கூடாரமாகி விட்டது. இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. சங்கிகள் பத்துப் பேர் மீது வழக்குப் போட்டிருப்பதாக குஜராத் காவல்துறை கூறியுள்ளது. ஆனால் அவர்களின் பெயர்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இஸ்லாமியர்களின் கொந்தளிப்பு
ஒன்றிய அரசு வக்ஃபு சட்டத்தை திருத்தியதுடன், உடனடியாக நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளது. முறைகேடுகளைத் தடுப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் கொண்டுவந்திருப்பதாக மோடி அரசு விளக்கம் அளித்தாலும், சட்டத் திருத்தங்களின் நோக்கம் அதுவல்ல. உண்மையில், வக்ஃபு சொத்துகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும், நகரங்களில் உள்ள வக்ஃபு நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பதற்கும் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள்தான் அவை. இதனை உணர்ந்துள்ள இஸ்லாமியர்கள் கொந்தளித்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு வருகின்றனர்.
சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து
பாஜக அரசின் நடவடிக்கைகள் வெறுப்பு அரசியலை விரிவாக விதைத்துள்ளன. சமூகத்தில் ஆழமான பிளவுகளை உருவாக்கியுள்ளன. நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களிலும், காவல்துறை போன்ற அரசுத் துறைகளிலும் சங்கிகளை ஊடுருவச் செய்ததுடன், தலைமைப் பொறுப்புகளிலும் நியமித்துள்ளனர். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நீர்த்துப் போகச் செய்து, இந்துத்துவ அரசியல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வழியமைத்துக் கொடுக்கின்றனர்.
மொத்தத்தில், ஒன்றியத்தையும் மாநிலங்களையும் ஆளும் பாஜக, இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது. மத வெறுப்பு அரசியலுக்கு ஆதரவையும் அதனை மறைக்கும் பணியையும் செய்து வருகின்றது.
எனவே பாசிச பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள்தான், பாகுபாடான சட்டங்களையும் அரசின் கொள்கைகளையும் திரும்பப்பெற வைத்திடும். நெருக்கடியில் இருக்கும் சட்டத்தின் ஆட்சியையும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும் காப்பாற்றும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.