கட்டுரைகள்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியாது! மார்க்ஸ் எழுதியதும் தெரியாது!

வ.மணிமாறன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கடி வரலாற்று ஆசிரியராக மாறி விடுகிறார். அவருடைய மேடைப் பேச்சுக்கள் வரலாற்று வகுப்பில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கோர் எடுத்துக்காட்டு: வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று புகழ்ந்துரைத்தது.

1. பத்தாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது சனாதன தர்மம்

2. சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்

அவருடைய பேச்சில் உள்ள மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வரலாற்று அடிப்படையிலானது. அதாவது, சனாதன தர்மத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகள் என்று எப்படிக் கூறுகிறார்? எந்த வரலாற்று ஆய்வாளர் இதனை நிறுவினார்? அதற்கான சான்றுகள் என்ன? என்ற விளக்கங்கள் எதுவும் இல்லாமல் பேசும் வரலாற்று ஆசிரியர் அவர்.

இந்த வரிசையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 25.11.2025 அன்று காரல் மார்க்ஸ் பற்றிப் பேசியிருக்கிறார். அதில், “கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தான் தேவை என்று கூறியிருக்கிறார். ஏனென்றால், இந்தியா ஒரு அடக்குமுறை கொண்ட நாடாக இருக்கிறதாம். இந்தியர்கள் பசுவையும், குரங்கையும் வழிபடுவதால், ஏகாதிபத்தியம் அவர்களுக்கு தேவை என கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறார். இதேபோன்று கார்ல் மார்க்சைப் பின்பற்றுபவர்கள், இந்தியாவின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாற்றுப் பாடம் எடுத்திருக்கிறார்.

ஆளுநருடைய இந்தப் பேச்சைக் கேட்டவுடன் முதன்முறையாக வரலாற்றுப் பாடத்தைப் படிக்கும் உணர்வு நமக்கு ஏற்படும். ஆனால், அவருடைய இந்தப் பேச்சுக்கு ஆதாரங்கள் என்ன? உண்மையில் காரல் மார்க்ஸ் இப்படி எழுதி இருக்கிறாரா?

காரல் மார்க்சின் நூல் தொகுதிகள் முழுவதும் தேடினாலும் இப்படி எங்கும் எழுதி இருக்க மாட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்திருக்கும் இந்த வரலாற்றுப் பாடம்(?) கடைந்தெடுத்த பொய். மனித குலத்தின் விடுதலையைப் பேசிய காரல் மார்க்ஸ், இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தேவை என்று எங்கு சொல்லி இருக்கிறார்? மார்க்ஸ் மீது இப்படியொரு பொய்யை இதுவரை யாரும் சொல்லியதில்லை.

காரல் மார்க்ஸ் 1853 முதல் 1861 வரை நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிகையில் இந்தியா குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மூலதனம் நூலிலும் இந்தியா குறித்துப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் எந்த இடத்திலும் “இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி தேவை” என்று குறிப்பிடவில்லை.

மார்க்சினுடைய கட்டுரைகள், இந்தியாவை எப்படியெல்லாம் பிரிட்டன் சூறையாடியது? இந்தியாவின் செல்வ வளங்களை எப்படியெல்லாம் கொள்ளையடித்தது? இந்திய சமூகம் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டது? என்பதை விரிவாக எடுத்துரைத்துக்கின்றன. இவற்றில் ஒரு சில கட்டுரைகளை படித்திருந்தால்கூட இப்படிப்பட்ட பொய்யையும் அவதூறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்க மாட்டார். காரல் மார்க்ஸ் பற்றி, சங் பரிவாரின் வாட்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து கருத்துகளை உருவாக்கிக்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியால் இப்படித்தானே பேச முடியும்!

காரல் மார்க்ஸ் பற்றி இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து பொய்யையும் அவதூறுகளையும் அவர் பரப்பி வருகிறார்.

“கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது” – இது 21.02.2023ல் ஆர்.என்.ரவி பேசியது.

“கார்ல் மார்க்ஸ் என்ற அறிஞர் 1852ல் இந்தியாவை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் சமூக கட்டமைப்பு இருக்க கூடாது; அதை குலைத்து விட வேண்டும். இந்தியர்களுக்கு ஆற்றல், அறிவு கிடையாது. அவர்கள் நாகரிகமற்றவர்கள். கீழான இந்திய நாகரிகத்தை அழிக்க வேண்டும் என்று காரல் மார்க்ஸ் எழுதியுள்ளார்” – இது 21.06.2023 அன்று பேசியது.

“காரல் மார்க்சின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்களைக் கொண்டது. இந்தக் கோட்பாட்டின்படி, ‘இல்லாதவர்கள்’ மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. மார்க்சின் இந்த மாதிரி வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது” – இதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவாய் மலர்ந்தருளியதுதான்.

அவர் பேசியிருப்பவை அனைத்தும் வாட்சாப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டவை. இந்த வாட்சாப் பல்கலைக்கழகத்தின் வழியாக ஆர்.எஸ்.எஸ், பாஜக பரப்பிக்கொண்டிருக்கும் வரலாறு, போலியானது, விஷம் போன்றது. இவற்றில் இருந்து வரலாற்று மாணவர்கள் உருவாக மாட்டார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற வரலாற்றைத் திரிப்பவர்களும் வம்பர்களும் (ட்ரோல்கள்) தான் உருவாக்கப் படுகின்றனர்.

திருவாளர் நரேந்திர மோடி 2014ல் பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்துத்துவ தேசிய பாடத்திட்டத்துடன், இந்த வாட்சாப் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டுவிட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை அடிமைப்படுத்தியதால், கொடிகட்டிப் பறந்த மாபெரும் பண்பாடு, நாகரிகம் புறக்கணிக்கப்பட்டு விட்டது. வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. அதற்குரிய அங்கீகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கற்பனைக் கருத்துக்காக அனைவரும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

இந்த இந்துத்துவ தேசியப் பாடத்திட்டத்தை சுற்றியே இன்றைய அரசியல் விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி வழிபட விடாமல் தடுத்து, இந்துக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அதை மீட்டெடுக்கப் போகிறோம் என இந்து முன்னணியும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் கிளம்பி இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் “கொடிகட்டிப் பறந்த மாபெரும் பண்பாட்டை” பாதுகாக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

இப்படி நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் விவாதங்கள் அனைத்தும் இந்துத்துவ தேசியத் திட்டத்தை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசியத் திட்டத்தின் மூலம் வரலாற்றுடன் இணைந்திருப்பதாக நாம் நம்புகிறோம். உண்மையில் வரலாற்றில் இருந்து வஞ்சகமாக துண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். கற்பிக்கப்படும் பொய்களும் அவதூறுகளுமே நம்மை இணைக்கிறது.

“கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதி இருக்கிறார்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கரித்துக்கொட்டுகிறார். இந்தியாவின் சமூகக் கோட்பாடு என்ன என்பதை அவர் விளக்கினால், காரல் மார்க்ஸ் எதைச் சிதைத்தார் என்று கூற முடியும்.

இந்துத்துவ தேசியத் திட்டத்தில் பாடம் படித்த, வாட்சாப் பல்கலைக் கழகத்தில் கற்றதை வாந்தியெடுத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியாது. காரல் மார்க்சைப் பற்றியும் தெரியாது. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகளை அவர் முழுமையாகப் படித்திருந்தால் இப்படிப் பேசி இருக்கவே மாட்டார்.

பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறி 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது பிரிட்டிஷாருடன் காற்றில் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் காரல் மார்க்ஸ், பிரிட்டிஷ் பேரரசு உச்சநிலையில் இருந்த காலத்தில், பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறையாது என பெருமை பேசிக்கொண்டிருந்த காலத்தில், அந்த பேரரசின் தலைநகரான லண்டனில் இருந்து கொண்டு, பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தைக் கண்டித்து எழுதியவர்.

“பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்கும் துன்பதுயரம், அது முன்பு அனுபவித்த வேதனையின் சாராம்சத்தில் இருந்து மாறுபட்டதாகவும், அதைவிடப் பன்மடங்கு கொடியதாகவும் இருக்கிறது” என்று கண்டித்து எழுதினார். “பிரிட்டிஷாரின் அடக்குமுறையின் காரணமாக இந்திய மக்கள் ஒற்றுமையுடன் போராடுவதற்கான பாதையையும், பிரிட்டிஷார் மறைமுகமாக ஏற்படுத்தி விட்டார்கள்” என்று அன்றே சாட்டையடி கொடுத்தவர் காரல் மார்க்ஸ்.

1857 கிளர்ச்சி என்று அழைக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போர் வெடித்த தகவல் கிடைத்தவுடன், “இது சிப்பாய்கள் கலகம் அல்ல; தேசியக் கிளர்ச்சி” என்று கூறி அதற்கு ஆதரவான நிலையை எடுத்தார் காரல் மார்க்ஸ்.

“மான்செஸ்டர் முதலாளிகளுக்கு இந்தியச் சந்தையை உறுதிப்படுத்தவே இந்திய மக்கள் மீது பிரிட்டிஷ் பேரரசு மிகக் கொடிய தாக்குதல்களை நடத்தி, ரத்த வெள்ளத்தில் முதல் விடுதலைப் போரை மூழ்கடித்தது” என்று அம்பலப்படுத்தினார்.

இந்திய மக்கள் முழுமையாக விடுதலை பெற “பிரிட்டனில் தொழிலாளி வர்க்க ஆட்சி அமைய வேண்டும் அல்லது இந்தியர்கள் தமது வலிமையைப் பெருக்கிப் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை முழுமையாகத் தூக்கி எறிய வேண்டும்” என்று கூறியவர் காரல் மார்க்ஸ். அவர் சொன்ன இரண்டாவது நிகழ்வுதான் நடந்தது.

“இந்திய கிராம சமூக அமைப்பு என்பது சாதி வேற்றுமையாலும், அடிமை முறையினாலும் கெட்டுப் போயிருந்தன. மனிதனை புறநிலைமைகளுக்கு எஜமானன் ஆக்குவதற்குப் பதிலாக அவனை சாதிக்கு அடிமை ஆக்கின” என்று காரல் மார்க்ஸ் எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?

மனித குல விடுதலைக்குப் பாடுபட்ட மார்க்ஸ் பற்றியோ இந்தியாவைப் பற்றியோ ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதுவும் தெரியாது. இந்துத்துவ தேசியத் திட்டத்தில் கற்றதையும்; வாட்சாப் பல்கலைக் கழகத்தில் படித்ததையுமே ஆர்.என்.ரவி வாந்தி எடுத்து வருகிறார். அந்த வாந்தியோடு வாந்தியாக அவரும் வெகுவிரைவில் குப்பைக் கூடையில் வீசியெறியப்படுவார்.

இந்தியாவைப் பற்றி.. கார்ல் மார்க்ஸ்

  • “அரேபியர்கள், துருக்கியர்கள், முகலாயர்கள், மங்கோலியர்கள், இந்தியா மீது படை எடுத்தனர். ஆனால், அவர்களால் இந்திய நாகரீகத்தை அழிக்க இயலவில்லை. மாறாக அவர்கள் இந்திய மயமாக்கப்பட்டனர். இந்தியாவை வென்றவர்களில் பிரிட்டிஷார் தான் இந்திய உள்ளூர் சமூகங்களை உடைத்து அழித்தனர். உள்ளூர் தொழில்களை நசுக்கினர். எதுவெல்லாம் மிக உயர்வாக இந்திய நாகரீகத்தில் கருதப்பட்டதோ அனைத்தும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. இந்த அழிவு வேலைகளைத் தவிர, வேறு எதையும் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு தரவில்லை..”
  • “… இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய துன்பம், இந்தியா இதற்கு முன் எதிர்கொண்ட எந்த துன்பத்தையும் விட ஆழமானதும் முடிவில்லாததுமாக உள்ளது…’
  • “பிரிட்டனில் ஆளும் வர்க்கங்கள் தூக்கி எறியப்பட்டு தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தாலோ அல்லது இந்திய மக்களே போதுமான வலுப் பெற்று ஆங்கிலேய அடிமைத்தளைகளை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிகின்ற வரையோ, இந்திய மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் முதலாளிகளின் ஆட்சியால் ஆங்காங்கு உருவாக்கப்படும் ஒரு புதிய சமூகத்திற்கான அம்சங்களின் கனிகளை (இந்திய மக்கள்) அனுபவிப்பது சாத்தியம் இல்லை.”

-கார்ல் மார்க்ஸ் எழுதிய “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” என்ற கட்டுரையிலிருந்து. (நியூயார்க் டெய்லி டிரிப்யூன், 09.08.1853 இதழ்)

  • “ஆங்கிலேய முதலாளிகள் நிர்பந்தத்தால் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு விடுதலையைக் கொடுக்காது, அல்லது இந்திய மக்களின் சமூக நிலையில் குறிப்பிடத்தக்க மாறுதலையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்திய மக்களின் விடுதலையும், முன்னேற்றமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும், அவற்றைப் பொதுமக்கள் தங்கள் உடைமையாகப் பெறுவதையும் பொறுத்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் தேவையான பௌதிக அஸ்திவாரத்தைப் போட ஆங்கிலேய முதலாளிகள் தவற மாட்டார்கள். அதற்கு மேல் முதலாளித்துவ வர்க்கம் ஏதாவது , எங்கேயாவது செய்திருக்கிறதா? அது தனி நபர்களையும், சமுதாயம் முழுவதையும் ரத்தத்திலும், சகதியிலும், துன்ப துயரங்களிலும் இழிவிலும் ஆழ்த்தாமல் எங்கேயாவது முன்னேற்றத்தை சாதித்து இருக்கிறதா?”
  • “பிரிட்டிஷாரால் இந்தியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமை என்பது இதுவரை இந்தியா சந்தித்த துன்ப துயரங்களை எல்லாம் விட அடிப்படையில் வேறுபட்டதும் மிகக் கூடுதல் கடுமையானதும் ஆகும்.. இந்திய சமூகத்தின் முழு கட்டமைப்பையும் இங்கிலாந்து தகர்த்து விட்டது. கட்டமைப்பின் மறு உருவாக்கத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பழைய உலகம் அழிக்கப்பட்டு, எந்த ஒரு புதிய உலகமும் கிடைக்கவில்லை என்ற நிலை இந்திய மக்களுக்கு பெரும் சோகமாய் அமைந்துள்ளது. பிரிட்டனால் ஆளப்படும் இந்தியா தனது பெரும் பழமை வாய்ந்த பாரம்பரியத்தில் இருந்தும் தனது முழு வரலாற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு நிற்கிறது.”

-கார்ல் மார்க்ஸ் எழுதிய “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” கட்டுரையிலிருந்து..
(நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன், 25.06.1853 தேதியிட்ட இதழ்)

  • “ஆங்கிலேய மில் முதலாளிகள் பருத்தியையும் உற்பத்திக்குத் தேவையான இதர மூலப்பொருட்களையும் மலிவாக எடுத்துச் செல்லுவது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அங்கு இரயில் பாதைகளை அமைக்க உள்ளனர் என்பதை நான் அறிவேன். ஆனால், நிலக்கரியும் இரும்புத்தாதுவும் உள்ள ஒரு நாட்டில் போக்குவரத்துக்கான எந்திரங்களைப் புகுத்திவிட்டால் அவற்றை வடிவமைக்கும் திறனை அந்நாடு பெறாமல் தடுக்க முடியாது. இத்தகைய விரிந்து பரந்த நாட்டிலே இரயில் போக்குவரத்தை பராமரித்திட அதற்கு உடனடித் தேவையான தொழில்சார் செயல்முறைகளை அறிமுகம் செய்யாமல் இருக்க முடியாது. காலப் போக்கில், இரயில் துறையுடன் தொடர்பில்லாத தொழில் துறைகளிலும் இந்த எந்திரங்கள் பயன்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே இந்தியாவில் இரயில்வே தொழில் நவீன தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக அமையும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் தீர்மானகரமான தடையாக உள்ள, சாதி அமைப்புக்கு அடித்தளமாக உள்ள பிறப்புசார் உழைப்பு பிரிவினையை இரயில்வேயின் தொடர்ச்சியாக உருவாகும் நவீன தொழில் வளர்ச்சி (காலப் போக்கில்) கரைத்து விடும்..”

கார்ல் மார்க்ஸ் எழுதிய “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” என்ற கட்டுரையிலிருந்து.. (நியூயார்க் டெய்லி டிரிப்யூன், 09.08.1853 இதழ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button