பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய பொதுக்கருத்து
ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு வலியுறுத்தல்

பயங்கர வாதத்திற்கு எதிராக, வலுவான உலகளாவிய பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2025 ஏப்ரல் 24-, 25 அன்று நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பாதுகாத்திடு!
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் மறுபரிசீலனை செய்!
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (டிபிடிபி) விதிகள் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
டிபிடிபி சட்டத்தின் பிரிவு 44(3) அனைத்துத் தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தைத் திருத்துகிறது. தகவல் உரிமைச் சட்டப்படி, எந்தவொரு பொது நடவடிக்கை அல்லது பொது நலனுடனும் தொடர்பில்லாமல் இருந்தால் மட்டுமே தனிநபர் குறித்த விவரங்களைத் தர மறுக்கலாம்.
இப்போது அந்தச் சட்டத்தின் பிரிவு 8(1)(j) திருத்தப்படுகிறது. தனிநபர் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு அது தடை விதிக்கிறது. ஊழலை வெளிப்படுத்துவதற்காக, பொறுப்பு தவறுகிற அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் குறித்த தகவல்களைக் கேட்டால், தனிநபர் எனும் பெயரில் தவறு செய்பவர்களின் பெயர்கள், ஒப்பந்ததாரர்களின் பெயர்கள், பொதுத் திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளைக் கண்காணிப்பதற்கான நபர்களின் பட்டியல்களைத் தர முடியாது என்று இந்தத் திருத்தம் கூறுகிறது.
நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநிலச் சட்டமன்றத்திற்கோ மறுக்க முடியாத தகவல்களை எந்தவொரு நபருக்கும் மறுக்கக் கூடாது என்று கூறும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)-ன் விதிமுறை கூட டிபிடிபி சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தை இந்த வகையில் பலவீனப்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கண்டிக்கிறது. தரவுப் பாதுகாப்பு என்ற போர்வையில், பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. ஜனநாயக வழிமுறையில், பொருள் பொதிந்த, தகவல்களை அறிந்து கொண்டு கடமையாற்றுவதற்குத் தகவல் உரிமைச் சட்டம், மக்களுக்குத் தந்துள்ள அதிகாரத்தை, இந்தத் திருத்தம் பறிக்கிறது.
முக்கியமான தகவல்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பரப்பும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் மீது டிபிடிபி சட்டம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் தவறு இழைப்பவர்கள், இச்சட்டத்தின் கீழ் சந்தேகிக்கப்பட முடியாத ‘நம்பிக்கையானவர்களாக’ மாறுவார்கள்.
ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை மையப்படுத்தி உருவாக்குகிற தரவு பாதுகாப்பு வாரியம், தகவல் கோருபவர்களைத் தவறு இழைத்தவர்களாகக் கருதினால், அவர்களுக்கு ரூபாய் 250 கோடி வரை அபராதம் விதிக்கும் அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. எனவே, பொறுப்பு கூறல் பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கு எதிரான ஆயுதமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் எனும் ஐயம் எழுந்துள்ளது. இது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
தகவல் உரிமைச் சட்டத்தைத் திருத்தி அழிக்கும் டிபிடிபி சட்டத்தின் பிரிவு 44(3) ஐ ரத்து செய்யுமாறும், டிபிடிபி சட்டத்தின் பிற சிக்கலான விதிகளை முறையாக மறுஆய்வு செய்யுமாறும் பிரதமரையும் சம்பந்தப்பட்ட அமைச்சரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கேட்டுக்கொள்கிறது.
வியட்நாம் மக்களின் புரட்சிகர உணர்வு நீடூழி வாழ்க.
சைகோன் விடுதலை மற்றும் வியட்நாம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வியட்நாம் மக்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.
சைகோன் விடுதலையின் 50வது ஆண்டு நிறைவையும், உங்கள் மகத்தான தேசத்தின் மறு இணைப்பையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வியட்நாம் வீரதீர மக்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அன்பான புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு நினைவுச்சின்ன நாளாக ஏப்ரல் 30, 1975 கருதப்படுகிறது, இது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் தெற்கில் உள்ள பொம்மை ஆட்சியின் மீது வியட்நாம் மக்கள் பெற்ற மகத்தான வெற்றியைக் குறிக்கிறது. இது வியட்நாம் மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தேசிய விடுதலை, இறையாண்மை மற்றும் சோசலிசத்திற்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ், வியட்நாமிய மக்கள் மகத்தான துயரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு இணையற்ற துணிச்சல், ஒற்றுமை மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தினர். 1975 ஆம் ஆண்டு வெற்றி ஒரு தேசத்தின் உடைக்க முடியாத முயற்சி வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு ஒரு சான்றாகும்.
இவ்வாறு தோழர் ஹோ சி மின்னின் நீண்டகால கனவு நனவாகியது, நாட்டின் சுதந்திரத்திற்கான தளராத போராட்டம் வெற்றியில் உச்சத்தை அடைந்தது, ஒன்றுபட்ட மற்றும் இறையாண்மை கொண்ட வியட்நாம் என்ற அவரது தொலைநோக்கை நிறைவேற்றியது.
மீண்டும் ஒன்றிணைந்ததிலிருந்து ஐம்பது ஆண்டுகளில், வியட்நாம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், சோசலிசத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் புரட்சிகர மரபை நிலைநிறுத்துவதில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்தச் சாதனைகளை நாங்கள் வணங்குகிறோம், மேலும் நீதியான, வளமான மற்றும் அமைதியான சோசலிச வியட்நாமைக் கட்டியெழுப்புவதற்கான உங்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
இந்தியாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் வியட்நாமை தங்கள் சொந்தப் போராட்டமாகக் கருதின. என் பெயரும் உன் பெயரும் வியட்நாம், வியட்நாம்! ஹோ ஹோ ஹோ சி மின்ஹ் நாங்கள் போராடுவோம், வெற்றி பெறுவோம்! போன்ற முழக்கங்களோடு போராட்டக் களத்தில் நின்றன. இந்த ஒற்றுமை காலனி அடிமைத்தனத்தை எதிர்த்த நமது பொதுவான பாரம்பரியத்தில் இருந்து வந்தது.
கடந்த காலத்தைப் போலவே, மார்க்சியம்-லெனினிசம், ஹோ சி மின் சிந்தனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகியவற்றின் பகிரப்பட்ட கொள்கைகளில் வேரூன்றிய நமது கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை ஆழப்படுத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீடித்த நட்பு நீடூழி வாழ்க.
வியட்நாம் மக்களின் புரட்சிகர உணர்வு நீடூழி வாழ்க.
சோசலிசம் மற்றும் அமைதி நீடூழி வாழ்க.
மணிப்பூர் அட்டூழியங்கள்
மணிப்பூரில், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுதந்திரமான போக்குவரத்தை அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதற்கு எதிராக, தனி நிர்வாகம் மற்றும் தனி குக்கி தாயகம் வழங்குவதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலைகளைத் திறக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை குக்கி இன ஆயுதக் குழுக்கள் எடுத்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிடுவது நாட்டின் அரசியலமைப்பு நடைமுறைக்கு எதிரானது. குடிமக்களின் சுதந்திரமான இயக்கத்தை மறுப்பது சட்டவிரோத நடைமுறையாகும்.
மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு உயிர்நாடிகளான நெடுஞ்சாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க அனைத்துச் சாத்தியமான அரசியலமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு, குறிப்பாக உள்துறை அமைச்சரையும், பொதுவாக ஒன்றிய அரசையும் கோருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை திருத்துக!
சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் நாரி சக்தி வந்தன் அதிநியச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் வலியுறுத்துகிறது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடுமையான குற்றச்சாட்டை ஒன்றிய அரசின் மீது வைத்ததைத் தொடர்ந்து மோடி அரசாங்கம் நாரி சக்தி வந்தன் அதிநியச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த மசோதாவைச் செயல்படுத்துவதற்கான இரண்டு அளவுகோல்களை அது நிர்ணயித்தது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகளாகும்.
இந்த நிபந்தனைகள், மத்தியிலுள்ள ஆர்எஸ்எஸ்- பிஜேபி அரசாங்கத்தின் பெண்களுக்கு எதிரான பாசிச மனநிலையைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது மாநிலச் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் போன்ற உயர் முடிவெடுக்கும் அமைப்புகளில் இருந்து இந்தியப் பெண்களை விலக்கி வைப்பதற்கான ஒரு பாசிச நிகழ்ச்சி நிரலாகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறு சீரமைப்பு ஆகிய நிபந்தனைகளிலிருந்து விலக்கி, சட்டத்தில் அவசரத் திருத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத்தை ஒழிக்க உலகம் தழுவிய அரசியல் உத்தி அவசியம்!
பஹல்காமில் நடந்த துயரமான தாக்குதல், வெறுப்பு, அடிப்படைவாதம் மற்றும் மறைமுகப் போர்களைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவையும் உலகையும் சீர்குலைத்து பயத்தையும் பிரிவினையையும் பரப்ப முயற்சிப்பவர்களின் தீய நோக்கங்களை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. இது ஒரு நாட்டின் ஒரு பகுதி அல்லது அங்கு வாழும் மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மக்களை ஒன்றிணைக்கும் அமைதி, சகவாழ்வு, மனிதநேயம் ஆகிய விழுமியங்களின் மீது கொடுக்கப்படும் தாக்குதலாகும்.
இந்தச் சூழலிலும், முழு தேசமும் ஒரு பெரிய இழப்பை சந்தித்த வருத்தத்தில் இருக்கும் நேரத்தில், மக்களைக் காப்பாற்றவும், பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான உலகளாவியப் பொதுக் கருத்தை உருவாக்குவதில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
இந்தியாவின் பதில் உறுதியாகவும் அளவிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகள் மற்றும் நிறுவனங்களை முற்றிலுமாக தனிமைப்படுத்த நிலைத்த உத்தியும் மனிதாபிமான உறுதிப்பாடும் இருக்க வேண்டும். அத்தகைய பயங்கரவாதிகளை ஒடுக்கித் தனிமைப்படுத்த, உலக அரங்கில் அரசியல் உத்திகளும், நிதி மேலாண்மையும் ஒருங்கு திரட்டப்பட வேண்டும்.
இந்த அழிவு சக்திகள் எங்கிருந்தாலும், அவற்றைத் தனிமைப்படுத்தவும், பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டு வாழ ஒவ்வொரு மனிதனின் உரிமையையும் நிலைநிறுத்தவும், ஒரு தேசம் என்ற வகையில் நாம் ஒற்றுமையாகவும், நிலைகுலையாமலும் நிற்கிறோம்.
அதே நேரத்தில், நிலைமையை மேலும் மோசமாக்குவதைத் தவிர்க்க, கிடைக்கக்கூடிய அனைத்து அரசியல் உத்திகளை, ராஜதந்திர நடவடிக்கைகளைப் பயன்படுத்துமாறு இந்திய அரசாங்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்கும் அதே வேளையில், இந்தக் கொடிய நிகழ்வு, இந்தியச் சமூகத்தை மத ரீதியாக இரு கூறுகளாகப் பிளவுபடுத்தி விடக்கூடாது என்று இந்திய மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கிறது.