
கடந்த 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் நாள் விஜயதசமி நாளில் ஐந்தாறு இளைஞர்களைக் கொண்ட கூட்டத்தில் உருவாக்கப்பட்டது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்! இப்பெயரின் சுருக்கம்தான் ஆர்எஸ்எஸ்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். பிறக்கும்போதே, இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் கிண்டல் செய்கிறார்கள், கேலி பேசுகிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்த இந்துக்களின் ஒற்றுமை தேவை என மதவெறியை இளைஞர்களிடம் தூண்டியது ஆர்எஸ்எஸ்.
அன்று தொடங்கிய இந்த மதவெறிக் கூச்சல் தொடர்கின்றது, தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மதவெறி, சாதிவெறியைக் கிளறிவிட்டு எரிய வைப்பது எளிது. இத்தகைய தீயைப் பற்றவைப்பதற்கு அறிவாளிகள் தேவையில்லை. நான்கு ஐந்து முட்டாள்கள் சேர்ந்தால் போதும். எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றினால் அது எப்படிக் கொழுந்து விட்டு எரியும் என்பதனை எழுதத் தேவையில்லை.
நம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும், நம் சாதிக்காரர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்ற பெயரில், மக்களைப் பிளவுபடுத்தல், அமைதியைச் சீர்குலைத்தல் போன்ற கலக உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் மதவெறி.
மக்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, இளைஞர்களை, மாணவர்களைப் பிளவுபடுத்தவும் பல்வேறு அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸுக்குத் தேவைப்பட்டது. உனக்கான அரசியலை முன்னெடுக்க, ஒரு அரசியல் கட்சி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சி.
பல கட்சிகளை இணைத்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஒரு புதுக் கட்சியாக ஜனதாவை உருவாக்கிய பொழுது, ஜனசங்கம் கலைக்கப்பட்டு ஜனதாவுடன் இணைந்தது.
அக்கட்சி 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியும் அமைத்தது. வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். ஜனசங்கத்தைத்தான் கலைத்தார்கள். ஜனதா கட்சியின் கொள்கைகளை மனப்பூர்வமாக ஏற்று விசுவாசமாகச் செயல்படுவோம் என உறுதியும் அளித்தார்கள்.
ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். இரட்டை உறுப்பினர் என்கிற நிலையை மேற்கொண்டனர். இது முட்டிமோதி, முரண்பாட்டோடு ஜனதா கட்சி உடைந்து, பல அரசியல் கட்சிகளாக உருவெடுத்தன.
ஜன சங்கம், தனது பெயரை மாற்றி பாரதிய ஜனதாவாக உருவெடுத்தது.
அக்கட்சிதான் இன்று ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரபீடத்தில் அமர்ந்துள்ளது. நாடு முழுவதும் 45,600 இடங்களில் 73,117 ஆர்எஸ்எஸ்ஸின் ஷாகாக்கள் (கிளைகள்) உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் அனைத்தையும் சேர்த்து ‘சங் பரிவார்’ (சங்கக் குடும்பம்) என்று அழைக்கிறார்கள்.
1. பாஜக எனும் அரசியல் கட்சி
2. விஸ்வ இந்து பரிசத்
3. பஜ்ரங்தள்
4. வனவாசி கல்யாண் ஆஸ்ரம் உள்ளிட்ட பல கிளை அமைப்புகள்
5. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்கிற மாணவர் அமைப்பு
6. பாரதிய மஸ்தூர் சங் என்கிற தொழிற்சங்க அமைப்பு.
7. பாரதிய கிஸான் எனப்படும் விவசாயிகள் பிரிவு
8. வித்யா பாரதி என்கிற ஆசிரியர் அமைப்பு
9. 32 லட்சம் மாணவர்களுடன் 14,000 பள்ளிக்கூடங்கள்
10. அகில பாரதிய அதிவக்தா பரிஷத் என்கிற வழக்குரைஞர்கள் அமைப்பு.
11. முன்னாள் ராணுவ வீரர்கள் &- அதிகாரிகள் இணைந்த அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்
ஆகிய அமைப்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்குவதும், அரசியல் வழிகாட்டுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய அமைப்புகள் வளர்வதற்கு அடிப்படையான கொள்கை மதவெறி என்னும் ஆலகால விஷம்தான்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் வளர்வதற்கான காரணமாக தினமணி தலையங்கம் (1.10.25) கூறுவது: மகாத்மா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது என்பதாகும்.
அவ்வாறு எனில் மத நல்லிணக்கம் என்பது கூடாது, மதச்சார்பின்மை என்கிற மகத்தான கொள்கை கூடாது என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.
மகாத்மா காந்தி நாடு விடுதலை பெற்ற ஐந்து மாதம் 15 நாட்களில் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இதிலிருந்து புரியவில்லையா?
அவர் மதச்சார்பின்மையை வலியுறுத்தினார், இந்து தேசம் என்பதனை நிராகரித்தார். விளைவு, படுகொலை! சிறுபான்மை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பதனை 1948 ஜனவரி 30 ஆம் நாள் ஆர்எஸ்எஸ் மீண்டும் உறுதிப்படுத்தியது.
வாஜ்பாயும், அத்வானியும், மோடியும், அமித் ஷாவும் ஆளுநர் ரவியும் உறுப்பினர்களாக இருந்து பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர்தான், காந்தியைப் படுகொலை செய்த நாது ராம் கோட்சே!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டளையை நிறைவேற்றி முடித்தான் கோட்சே! ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைக்கு முரண்பட்டவர்களைப் பழி தீர்ப்பதுதான் அதன் கொள்கையாகும்.
மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரும் ஒருவர் பின் ஒருவராக மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதை நாடு மறந்து விடுமா என்ன?
ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அதனைத் தொடர்ந்து குருஜி என்று அழைக்கப்பட்ட மாதவ சதாசிவ கோல்வால்கர், பானா சாகிப் தேவராஸ், ராஜேந்திர சிங், கே.எஸ்.சுதர்சன் என்று பலரும் தலைமை தாங்கியுள்ளனர்.
தற்போது மோகன் பகவத் என்பவர் தலைவராக உள்ளார். எல்லோரும் சித்பவன பார்ப்பனர்கள். இவரது காலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொற்காலம் என்று தினமணி தலையங்கம் (1.10.25) வர்ணிக்கிறது.
காரணம் அவரது தலைமையிலான ஆர்எஸ்எஸ்ஸின் நீண்ட நெடுநாள் கனவுகள் ஒன்றன்பின் ஒன்றாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசால் நிறைவேற்றப்படுகின்றன என்று தினமணி தலையங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கை ஆழக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. அரசியல் சாசனம் உயர்த்திப் பிடிக்கும் மதச்சார்பின்மைக் கொள்கை கொண்ட நாட்டில், பாசிச, மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டை அரசே வெட்கமின்றிக் கொண்டாடி மகிழ்கின்றது.
இந்த அவல நிலையில் இருந்து நாட்டை மீட்பதே உத்தமர் காந்தியின் பிறந்த நாளில் அனைவரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்வது நாட்டுப் பற்றுடையோரின் கடமையாகும்!
முதல் நாள் ஆர்எஸ்எஸ்ஸின் விழாவுக்கு மறுநாள் (அக் 2) காந்தி சமாதி முன் நின்று முதுகை வளைத்துக் கூனிக் குறுகி, அடக்க ஒடுக்கமாக அஞ்சலி செலுத்துகின்றார் பிரதமர் மோடி. இத்தகைய நடிப்பாற்றல் வேறு எந்த அரசியல் தலைவருக்கு வராது.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கொள்ளலாகாது என்று கூறியது எவ்வளவு சாலப் பொருத்தம்!
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டை ஒட்டி பிரதமர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் ரவி போன்றவர்களின் அறிக்கைகள், கட்டுரைகள் ஏராளம்!
ஆர்எஸ்எஸ் இயக்கம் தேச பக்தி இயக்கமாம்! மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடும் இயக்கமாம்! தனி மனித ஒழுக்கத்தைக் கற்றுத்தந்த இயக்கமாம், சேவையில் சிறந்த இயக்கமாம் என்று பொய் பரப்பி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோர முகத்தை மூடி மறைத்து புனிதமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசப்பிதா காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்து வருகிறார்கள்.
மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு பாஜகவினர் காவித் துண்டு அணிவித்து மகிழ்ந்தார்கள்!
அன்று காந்தியைப் படுகொலை செய்தார்கள். இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசுகின்றார்கள்.
செருப்பு வீசியவர் யார்? சாதாரண மனிதனல்ல, உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். 71 வயதான ராகேஷ் கிஷோர் என்பவராவார்.
செருப்பை வீசி அவர் என்ன முழக்கமிடுகிறார். சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நீதிமன்றத்திலேயே முழக்கமிடுகின்றார்.
அன்று காந்தி
இன்று தலைமை நீதிபதி கவாய்