தமிழகம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு

க.மாரிமுத்து எம்எல்ஏ வேண்டுகோள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு க.மாரிமுத்து எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16.10.2025 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் திருத்துறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆற்றிய உரை வருமாறு :

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2025- 2026 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் இந்த அவையில் முன்மொழிந்திருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேச கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டப்படியான பணப் பலன்

சுமார் 3,000 கோடி ரூபாய் அளவில் துணை மானியக் கோரிக்கை இங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிற தொழிலாளர்களுக்குச் சட்டப்படியான பணப் பலன்கள் வழங்குவதற்கும், அதேபோல் ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிற பகுதிகளுக்கு நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலப் பேரிடர் நிவாரண நிதியாக மாற்றுவதற்கும், புதிய மகத்தான பணியினை அரசுப் பணியாளர் கட்டமைப்புதான் உறுதி செய்கிறது. அரசுப் பணியாளர்களுடைய சீரிய செயல்பாடுகள்தான் அதை உறுதிப்படுத்துகிறது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் 15 இலட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுடைய கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் 5 இலட்சம் அளவில் இன்றைக்கு ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் அவுட்சோர்சிங் என்ற முறையில் தனியாரிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. அப்படி ஐந்து இலட்சம் ஊழியர்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிற போது அது அவுட்சோர்சிங் ஆக மாறுகிறபோது, அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதில் நிறைய இடங்களில் தடைகளும் இருக்கின்றன என்பதனை இந்த அவையின் நிதியமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஏனென்று சொன்னால் இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிற பகுதி நேர ஆசிரியர்கள், பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள், அரசுக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தற்காலிகப் பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் அத்தனை பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மகத்தான திட்டங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்கிற ஒரு மகத்தான பணியைச் செய்து கொண்டிருக்கிற அரசு ஊழியர்களுடைய நீண்ட கால கோரிக்கை. இந்த ஆட்சிக்காகப் பின்னால் இருந்தவர்கள், ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனை நிதியமைச்சகத்தினுடைய கனிவான கவனத்திற்குக் கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்.

பணி நிரந்தரம்

இன்றைக்குப் பொதுச் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பொதுச் சுகாதாரம் பேணுவதில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. ஆனால் அந்தச் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற தூய்மைப் பணியாளர்களாக இருந்தாலும் சரி, சுகாதாரப் பணியாளர்களாக இருந்தாலும் சரி, கிராமங்களில் இருக்கிற ஏழை, எளிய குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குபவர்களாக இருந்தாலும் சரி அவர்களெல்லாம் ஊதிய உயர்வுக்காக, ஊதியப் பணி நிரந்தரத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள்

காவிரி டெல்டா பகுதி ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்று பரபரப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் சார்ந்திருக்கிற திட்டங்கள், செயல்பாடுகள் எதுவும் வகுக்கப்படாத காரணத்தினால், ஒன்றிய அரசு அவ்வப்போது ஷெல் எரிவாயுத் திட்டம், மீத்தேன் திட்டம் என்று கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் மத்தியிலும், மண்ணை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற அந்தப் பகுதி மக்களினுடைய வாழ்வியலைப் பற்றியும் பதற்ற நிலை உருவாகிக் கொண்டேயிருக்கிறது. மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்திருக்கிற தொழில்களை உருவாக்குவதற்கு நீங்கள் நிதிகளை ஒதுக்க வேண்டுமென்று நான் பணிவோடு கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம்

இன்றைக்குக் கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்திருக்கிற தொழிலாளர்களுக்கு இயந்திரமயமாகிக் கொண்டிருப்பதால் வேலை உத்தரவாதம் இல்லை. ஆனால் கோடிக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கு எதிர்கால வாழ்வியலில் ஒரு நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்பு குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதப்படுத்துவதற்கு டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த போதுதான் விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உருவாக்கப்பட வேண்டுமென்று நல வாரியத்தை உருவாக்கித் தந்தார்கள். அதற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள் அந்த நல வாரியத்தை எடுத்து விட்டார்கள்.

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கென்று நல வாரியத்தை நீங்கள் உருவாக்கித் தரவேண்டுமென்று நான் பணிவோடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தினக்கூலி ரூ.600

100 நாள் வேலைத்திட்டம் தமிழ்நாட்டில் உறுதியாகச் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புறப் பாட்டாளிகளுனுடைய வாழ்வாதாரமும் அதுதான். அவர்களுடைய பொருளாதார வாழ்வியலும் அதுதான். எனவேதான் 100 நாள் வேலைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாகச் செயல்படுத்துவது மட்டுமல்ல, வேலை நாட்களைக் கூடுதல்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் பெறுகிற ஊதியம் இன்றைக்கு இருக்கிற விலைவாசி ஏற்றத்திற்குத் தகுந்தாற்போல கட்டுப்படியானதாக இல்லை. எனவே, விலைவாசி ஏற்றத்திற்குத் தகுந்தாற்போல அவர்களுக்கான ஊதியத்தைக் குறைந்தபட்சம் 600 ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று நான் பணிவோடு கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

திருத்துறைப்பூண்டி தொகுதி பிரச்சினைகள்

என்னுடைய தொகுதியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முத்துப்பேட்டையில் தொடர்ச்சியாக மின்தடை வந்து கொண்டிருக்கிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் நேரடியாகச் சென்று முறையிட்டிருக்கிறோம். அதற்கு உடனடியான தீர்வு என்பது 110 கே.வி துணை மின் நிலையம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் நான் அவர்கள் முன்னால் வைத்திருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, முத்துப்பேட்டையில் ஆயிரம் காலத்திற்கான மிக பிரமாண்டமான மக்களினுடைய வழிபாட்டிற்கு நம்பிக்கைக்குரிய தர்கா ஒன்று இருக்கிறது.

இன்றைக்கு அந்த ஜாம்புவானோடை தர்காவினுடைய கட்டமைப்புகள் பல இடங்களில் சிதிலமடைந்துபோய் இருக்கிறது. நம்பிக்கைக்குரியவர்கள் வந்து தங்களுடைய முகத்தை, கைகளைக் கழுவுகிற புனித குளம் இருக்கிறது. ஆனால், அது இன்றைக்குப் பாதிப்படைந்திருக்கிறது. எனவே மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களிடம் மரியாதைக்குரிய மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம். அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தருமாறு நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் ஒன்றியத்தில்தான் அதிகமான வேளாண் உற்பத்தி அதாவது நெல் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், கோட்டூர் ஒன்றியத்தில் நெல் சேமிப்புக் கிடங்கு இல்லை. ஆகையால் உடனடியாக கோட்டூர் ஒன்றியத்துக்குத் தேவையான சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் நிறைவேற்றித் தரும் தர வேண்டுமென்று பணிவோடு கேட்டு, விடைபெறுகிறேன்.”

இவ்வாறு க.மாரிமுத்து எம்எல்ஏ உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button