வரலாறு

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஏரி விவசாயிகள் போராட்டம்

ப.பரமசிவம்

சேலம் நகரமாக இருந்த காலத்தில் தண்ணீருக்காக மக்கள் அவதிபட்டுக் கொண்டிருந்தார்கள். வெள்ளையர் ஆட்சியின் போது, மக்கள் தண்ணீருக்காகப் படும் அவதியைப் பார்த்து சேலத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை எல்லாம் தேடி எங்கும் சரியான அளவிற்கு நீர்நிலைகள் கிடைக்கவில்லை.

சருகுமலை அடிவாரத்தில் பனமரத்துப்பட்டி பக்கத்தில் பெரிய ஏரி இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். அந்தத் தண்ணீரை சேலம் நகர மக்களுக்குச் சுத்திகரிப்பு செய்து கொண்டு வந்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. எனவே, அந்த ஏரியின் 3800 ஏக்கர் நிலம் சேலம் நகரத்திற்குப் பட்டா போட்டு கொடுக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து 20 கி.மீட்டருக்குக் குழாய் பதித்து சேலம் நகரத்திற்குக் குடிதண்ணீர் கிடைக்கச் செய்தார்கள்.

சுதந்திரத்திற்குப் பிறகு சேலம் நகர மக்கள்தொகை விரிவடைந்தது. பனமரத்துப்பட்டி ஏரி தண்ணீர் போதவில்லை. முன்பிருந்த நீர்ப் பிடிப்புப் பகுதியும் குறைந்து கொண்டே சென்றது. சேலம் நகரத்திற்கு நீர்ப் பற்றாக்குறையாகத்தான் இருந்து வந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம்மவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவடைந்த பிறகு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார்கள். அவர்கள் திட்டமிட்டு மேட்டூரிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தண்ணீர் சேலம் நகரத்திற்கு வந்தது. சேலத்து மக்களின் தாகம் தீர்ந்தது.

அதன் பிறகும் சமீப ஆண்டுகளில் சேலம் மாநகரத்திற்குத் தனிக் குடிநீர்த் திட்டம் மேட்டூர் காவிரியாறிலிருந்து கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பனமரத்துப்பட்டி ஏரித் தண்ணீரை நிறுத்திவிட்டு அந்தத் தண்ணீரை ராசிபுரத்திற்குக் கொண்டு சென்றார்கள். அந்தத் தண்ணீர் ராசிபுரம் மக்களுக்கும் போதவில்லை என்று ராசிபுரத்திற்கு மேட்டூர் காவிரி ஆற்றுத் தண்ணீரைக் கொண்டு வரப்பட்டது. அவர்களும் பனமரத்துப்பட்டி தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். பனமரத்துப்பட்டி ஏரியும் தண்ணீர்ப் பிடிப்பு குறைந்து கொண்டே வந்தது. 200, 300 ஏக்கருக்குள்ளாகத்தான் நீர்ப் பிடிப்பே இருக்கிறது. 3800 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு நிலமற்ற விவசாயிகள் அந்த நிலத்தில் 2 ஏக்கர் 3 ஏக்கர் 5 ஏக்கருக்குள் நிலத்தைப் பிடித்து உழுது பயிருட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை, வாழை, மாதுளை, பலா, மா, சப்போட்டா போன்ற மரங்களை வைத்திருந்தார்கள். ரோஜா, மல்லிகை, அரளி போன்ற பூக்களையும் உற்பத்தி செய்து சேலம் மார்க்கட்டில் கொண்டு வந்து விற்றுச் செல்வார்கள். கிணறு வெட்டி ஆயில், மோட்டார் வைத்து நெல்சாகுபடியும் செய்து வந்தார்கள். வன அதிகாரிகளைப் போல் சேலம் நகராட்சி அதிகாரிகள் காலி செய்யச் சொல்லி அவ்வப்போது விவசாயிகளை மிரட்டி வந்தார்கள்.

அந்த விவசாயிகள் 1980 இ-ல் பனமரத்துப்பட்டி ஒன்றிய விவசாயச் சங்கச் செயலாளர் தோழர் கே.பி.கல்யாணசுந்தரம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் கே.பி.விஸ்வநாதனிடம் கூறி அவரோடு சேர்ந்து பொன்னுசாமியையும் அழைத்துச் சென்று அந்த விவசாயிகளையும் அவர்கள் விவசாயத்தைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார்கள். அந்தப் பகுதி முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு விவசாயிகளைக் கொண்ட கூட்டத்தைப் போடச் சொல்லிவிட்டு வந்தார்கள். அப்பொழுது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.அர்த்தனாரி வாத்தியா£¤டம், அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்கள்.

தோழர் அர்த்தனாரி வாத்தியாரும் ஏற்றுக் கொண்டு செல்கிறார். பிடாரி அம்மன் கோயில் திடலில் கூட்டம் கூட்டப்பட்டது. அர்த்தனாரி வாத்தியாரோடு இளைஞர் மன்ற தோழர்களும் சென்றார்கள். அந்த விவசாயிகள் வரவேற்று தோழரை எங்கள் விவசாயத்தை வந்து பாருங்கள் என்று அழைத்துச் சென்று காண்பித்தார்கள். தோழர் அர்த்தனாரி வாத்தியாரும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவராயிற்றே அந்த விவசாயத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். பிறகு கோயில் வளாகத்திற்கு வந்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தோழர் கே.பி.கல்யாணசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தோழர் கே.பி.விஸ்வநாதன் விளக்கிப் பேசினார். அந்தக் கூட்டத்தில் கே.ஏ.கோவிந்தசாமி, மாவட்ட விவசாயச் சங்கச் செயலாளர் பிரபு, பரமசிவம், மோகன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அந்த விவசாயிகளைக் கொண்ட பொறுப்பாளர்களைப் போட்டு தோழர் கே.பி.கல்யாணசுந்தரத்தைச் செயலாளராகப் போடப்பட்டது.

அவர் அந்த விவசாயிகளைக் காடு காடாகச் சென்று விவசாயச் சங்க உறுப்பினராக்கினார். உடன் கே.பி.விஸ்வநாதன் கெஜல்நாயக்கன்பட்டி பொன்னுசாமி ஆகியோர் உடன் சென்று உதவி செய்தார்கள். ஒவ்வொரு நாளும் என்னையும் (பரமசிவம்) கல்யாணசுந்தரம் கூட்டிச் செல்வார். சங்க உறுப்பினர்களை உருவாக்கி விட்டு அப்பொழுது மாநில விவசாயச் சங்கச் செயலாளராக இருந்த தோழர் ஆதிமூலத்தை ஒரு முறை கூட்டி வந்து அந்த விவசாய நிலங்களைப் பார்க்க வைத்து அதே பிடாரி அம்மன் கோயில் திடலில் அந்த விவசாயிகளைக் கொண்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்கள் வந்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் கேரள எம்.பி. என்.இ.பலராமன் அவர்களும் வந்திருந்தார்கள். நல்ல விளைச்சல் நிலம் நீங்களும் பத்து பதினைந்து வருடங்களாக உழுது பயிரிட்டு வந்துள்ளீர்கள். தென்னை, வாழைப் பழ மரங்கள், பூக்கள், நெல் சாகுபடியெல்லாம் செய்துள்ளீர்கள். உங்களை இனியாரும் காலிசெய்ய முடியாது, ஒற்றுமையாக இருந்து உங்களுடைய நிலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உற்பத்தி செய்யும் பொருள் நீங்கள் மட்டுமே உபயோகிக்கவில்லை, இந்தச் சமூகத்திற்கும் பயன்படுகிறது. அதனால் உங்களையாரும் காலி செய்ய முடியாதென்று ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றார்கள்.

தொடர்ந்து தோழர் கே.பி.கல்யாணசுந்தரமும், தோழர் கே.பி.விஸ்வநாதனும் இளைஞர் மன்றப் பொறுப்பாளர் என்ற முறையில் தோழர் ஏ.மோகனும் இப்போதைய கட்சியின் மாவட்டச் செயலாளர், அடிக்கடி அந்த விவசாயிகளோடு தொடர்பில் இருந்தார்கள். விவசாயிகளின் நிலப் பிரச்சனையென்றால் ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் தோழர் எம்.கல்யாணசுந்தரமும் ஒரு முறை வந்து அந்த விவசாயிகளோடு பேசிப் புரிந்து கொண்டு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்படிப் பேசிவிட்டுப் போனார். விவசாயிகள் ஒற்றுமையைப் பார்த்துப் பொறுக்க முடியாதவர்கள் அவரவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி ஒற்றுமையைக் குழைத்துக் கொண்டிருந்தார்கள்.

சங்கம் முழு பலத்தோடு இருந்த காலத்தில் 1989-ல் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி ஊழியர்களை வைத்து விவசாயத்திற்கும் வீடுகளுக்கும் தீ வைத்தார்கள். விவசாயிகள் ஒன்றுபட்டு நின்று தீயை அணைத்துவிட்டு தீ வைத்தவர்களையும் துரத்தி அடித்துவிட்டார்கள்.

அந்த சமயத்தில் தோழர் கே.பி.கல்யாணசுந்தரத்திற்குத் தகவல் கிடைக்கிறது. பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. மாநிலக் குழு கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். தோழர் கே.பி.கல்யாணசுந்தரம் தோழர் ஏ.மோகன் தற்போதைய கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.பரமசிவம், பொன்னுசாமி சென்று தீ வைத்த பகுதிகளைப் பார்த்துவிட்டு அந்த விவசாயிகள் திரளாகக் கூடியிருந்தார்கள். அவர்களிடம், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் உங்கள் நிலத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறி தைரியப்படுத்திவிட்டு வந்தோம். அதன் பிறகு பலமுறை வெளியேற்ற முற்பட்டு விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கெல்லாம் காரணம் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விவசாயச் சங்கத் தலைவர்களும் கொடுத்த ஊக்கம்தான்.

1997 -ல் ஒரு நில வெளியேற்றம் புல்டோசரை விட்டு விவசாயத்தையும் வீட்டையும் நாசப்படுத்தினார்கள். தகவல் தெரிந்து கே.பி.கல்யாணசுந்தரம், விஸ்வநாதன், ஏ.மோகன் கெஜல்நாயக்கன்பட்டி பொன்னுசாமி, அன்பு, தண்ட்ராஜ், ஏரிக்காடு ஆறுமுகம் சென்று கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து புல்டோசர்முன் படுத்துத் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்குள் பாதி விவசாயிகள் நிலத்தையும் வீட்டையும் சேதப்படுத்திவிட்டார்கள். மீண்டும் விவசாயிகள் அவரவர் இடத்தில் புனரமைப்புப் பணியைத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு 2002-ல் ஒரு முறை காலி செய்ய முற்பட்டார்கள்.

அதன் பிறகு 2003-ல் நூற்றுக்கணக்கான போலீஸ் படையை வைத்து முழு நிலத்தையும் கையகப்படுத்திக் கொண்டார்கள். அதன் பிறகும் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் பார்த்துப் பேசியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அந்தப் பனமரத்துப்பட்டி ஏரியில் மாநகராட்சி சார்பாக மாபெரும் பூங்கா வைக்கப் போகிறோம் என்று அறிக்கை மட்டும்தான் விட்டார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 3800 ஏக்கர் நிலத்தில் தற்சமயம் 100 ஏக்கர் நிலத்தில் மட்டும்தான் தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது. மீதி 3700 ஏக்கர் முள் மரங்கள் மேலோங்கி நின்றுகொண்டு நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button