உள்ளூர் செய்திகள்

கல்விக் கட்டணத்திற்காக அத்துமீறும் ஈரோடு தனியார் சட்டக் கல்லூரி

ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஏஐஎஸ்எப் கோரிக்கை

கல்விக் கட்டணத்திற்காக அத்துமீறி செயல்படும் ஈரோடு தனியார் சட்டக் கல்லூரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு படிப்போரில் பெரும்பான்மையானோர் ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பின்னணி கொண்ட மாணவர்களாகும். இவ்வாறு படிக்கும் மாணவர்களின் பெரும்பான்மையானோர் தங்களுடைய கல்வி கட்டணங்களை தாங்களே பகுதி நேரமாக வேலைக்குச் சென்று கட்டி வருகின்றனர். இதனால் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி கட்டணத்தை காலதாமதமாக செலுத்துவது கடுமையான குற்றம் போன்று பாவித்து மாணவர்களிடம் எந்தவித கருத்துக்களையும் கேட்காமல் மாணவர்களை கல்லூரிக்கு வர வேண்டாம் என்றும், வருகை தரும் மாணவர்களுக்கும் வருகை பதிவு செய்யப்படாது என்றும், கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே வகுப்பறைக்குள் வர வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர் மீது அத்துமீறலான நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகும் கூட தேர்வு நேரங்களில் சரியான வருகை பதிவு இல்லை என்று கூறி கல்லூரி நிர்வாக மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்தும் மேலும் பினையத்தொகையாக ஒரு மாணவருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து கொள்கின்றனர். மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையிலும் தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் செய்து முறைகேடுகளை செய்து வருவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரியை நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்படாமல், அத்துமீறுவதும், மாணவர்களிடம் அதிக அளவிலான பொருளாதாரத்தை சுரண்டுகின்றன என்றும் தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகப் பெரும் அளவில் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தமிழ்நாடு அரசும், சட்டத்துறை அமைச்சகமும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும் தனியார் சட்டக் கல்லூரிகளை கண்காணிக்க குழு அமைத்து அதில் உள்ள குறைகளை களைந்து மாணவர்களின் கல்வியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button