கட்டுரைகள்

ஜனநாயக உரிமைகளை வணிகப் பொருளாக்காதீர்! 

கூட்டங்கள் நடத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகள்

பொதுக் கூட்டங்கள், சாலை வழிக் கூட்டங்கள் நடத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு :

தமிழ்நாட்டில் கடந்த 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாநகரில், ஒரு அரசியல் கட்சி நடத்திய சாலை வழிக்கூட்ட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில், 41 மனித உயிர்கள் பலியான துயர நிகழ்வு ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் இன்னும் ஓய்ந்து விடவில்லை. எளிதில் ஆற்றுப்படுத்த முடியாத அந்த நிகழ்வின் மீது, உயர் நீதிமன்றத்தின் கவனம் ஈர்க்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாகப் பொது நிகழ்வுகளை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டிருப்பதையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உணர்வு பூர்வமாக மதிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 முதல் 30 வரையிலும் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரம் சார்ந்த கடமையாகும்.

அரசியல் கட்சிகள் சமூக நலன்களையும், அதனை கால வளர்ச்சிக்குத் தக்கப்படி, சீரமைத்து, தகவமைத்துக் கொள்வதைக் கடமைப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் பொதுமக்களுடன் இணைந்தும், சட்டமுறைகளைப் பின்பற்றியும் தனது செயல்பாடுகளையும், பரப்புரை நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டுள்ளது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தச் சூழலில் ஒவ்வொரு மாநகர், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் அரசியல் கட்சிகள் நிகழ்வுகளை நடத்துவதற்கான பொது மைதானங்கள் இல்லாத சூழலில்தான், சாலை வழிக் கூட்டங்கள் மற்றும் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு வகுத்துள்ள ஒழுங்குமுறை நிபந்தனைகள், அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை முற்றிலுமாக நிராகரிக்கும் திசை வழியில் இருப்பதாலும், அது அதிகார வர்க்கத்தின் விருப்பு, வெறுப்பு சார்ந்த செயலுக்கு ஆயுதமாக அமையும் என்பதாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, அரசின் முன்மொழிவுகளை முற்றிலும் ஏற்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது.

நகரமயச் சூழலில் பொது நிகழ்வுகளுக்கான அரங்குகள் கலைவாணர் அரங்கம், சர் பிட்டி தியாகராயர் அரங்கம் அமைத்திருப்பது போல், பொது திறந்த வெளி நிகழ்வுகளுக்கான மைதானங்களை உருவாக்கித் தர வேண்டும்.

இந்த அரங்குகளுக்கும், மைதானங்களுக்கும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் ஒரு அடையாள பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, அதனை வருவாய் ஈட்டும் ஆதாரமாகக் கருதி உயர்ந்தபட்சத்தொகை நிர்ணயிக்கக் கூடாது. குறைந்தபட்சக் கட்டணத்தின் மூலம்தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் உறுதியாகும்.

பல கட்சிகள் செயல்படும், பன்முகக் கருத்தோட்டங்கள் கொண்ட ஜனநாயக அமைப்பில், பொது நிகழ்வுகளை முறைப்படுத்தும் கடமைப் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை மேற்கொள்வதில் காவல் துறை பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அனுமதி வழங்கும் முறை வெளிப்படையாக அமைய வேண்டும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகச் செயல்பாட்டு அமைப்புகள் போன்ற அமைப்புகள் காவல் துறையின் தகவலுக்குக் கொடுக்கும் கடிதத்தின் மீது இரண்டொரு நாளில் அனுமதி ஏற்பு அல்லது மறுப்பு என்பதைத் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இதற்கான கால வரம்பும் நிர்ணயிக்க வேண்டும்.

பொதுக்கூட்ட நிகழ்வுகள், ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு இறுதித் தருவாயில் அனுமதி இரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உருவாகும் நிலையை காவல் துறை ஏற்படுத்தக் கூடாது.

அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் பொது நிகழ்வுகளுக்கான அனுமதி கோருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் ஏற்கத்தக்கதுதான். சாதாரணமாகப் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கை முழக்க இயக்கங்கள் போன்றவைகளை தாராளமாக அனுமதிக்க வேண்டும்.

சில நேரங்களில் திடீர் நிகழ்வுகள் தவிர்க்க முடியாத நிலையில் ஏற்பட்டு விடும். அதுபோன்ற நேர்வுகளில் சுமூக தீர்வு காணும் அணுகுமுறை கட்டாயமாக்க வேண்டும்.

அரசின் செயல்பாடுகள், அதன் கொள்கைகள் குறித்த விமர்சனங்களை மாற்றுக் கருத்துகளை அரசுத் தரப்பிலும், ஆளும் தரப்பிலும் ஜனநாயகப் பூர்வமாக உள்வாங்கி, அதன் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அமைதி நிலை நீடிக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நிகழ்வுக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமாகும். அதனை நெளிவு சுளிவாகவே அணுக வேண்டும். கூட்ட நேர மேலாண்மை அவசியமானது. அதனை கூடுமான வரை அரசியல் கட்சிகள் சுயமாகப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும்.

கூட்ட எண்ணிக்கைக்கு, தக்கபடி வைப்பு நிதி வசூலிக்கும் முன்மொழிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதனை கடுமையாக எதிர்க்கிறது. இந்த யோசனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நிராகரித்து, பெரும் பணம் செலுத்தும் கட்சிகளை மட்டுமே களத்துக்கு அனுமதிக்கும் சர்வாதிகார திசை வழி கொண்டது. இதனை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அண்மையில் நீதியரசர் ஒருவர், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் கட்டப்படும் கொடிக்கு தலா ரூ.1000 வீதம் வசூலிக்கலாம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார். இந்தக் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது.

நிதி மூலதன சக்திகளும், பன்னாட்டுக் குழும நிறுவனங்களும் அதிகார மையத்தில் அழுத்தம் செலுத்தி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய சேவை என மாற்றி வருவது ஜனநாயக உரிமைகளை “வணிகப் பொருளாக்கும்” பேராபத்தானது. இந்த அபாயகரமான ஜனநாயக விரோதக் கருத்தை அரசு ஏற்கக்கூடாது. முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்படக்கூடாது என்பதில் அரசியல் கட்சிகளுக்கு வேறு கருத்துகள் ஏதும் இல்லை. அரசியல் கட்சிகளை மக்கள் விரோதிகளாக சித்தரிக்கும் அதிகார வர்க்கத்தின் தவறான எண்ணங்கள் கைவிடப்பட வேண்டும்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வழியாக, பல்வேறு வடிவங்களில் தொடர் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தெருவில் நின்றுதான் மக்கள் மன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்ற நிலையில் உள்ள அரசியல் கட்சிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் உள்ள பொது இடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. இதனை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏற்று அமலாக்கி வருகின்றன. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்வது கூட அனுமதி பெற்று நடைபெறுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் சட்டங்களைப் பின்பற்றியே நடைபெறுகின்றன என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதாரம் ஏற்படும் போது, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. தேவை எனில் அதனை பரிசீலித்துத் திருத்தி வலிமைப்படுத்தலாம். அதனை பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை இயக்கங்களுக்கு நிபந்தனைகள் ஆக்குவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கடுமையாக எதிர்க்கிறது.

பொதுக்கூட்ட நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது மிகப் பெரிய வேலையாக வளர்ந்துள்ளது. இதனை தற்போதுள்ள காவல் துறை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது கடுமையான பணிச் சுமையாகும். நகரமயமாகும் நிலை வளர, வளர போக்குவரத்து அடர்த்தி அதிகரிக்கிறது. அதை ஒழுங்குபடுத்த போக்குவரத்துக் காவல்துறை எனத் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல், பொது நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு வழங்க, பொது நிகழ்வு பாதுகாப்பு காவல்துறை என்ற ஒரு தனிப் பிரிவை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்தத் தேவையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button