அறிக்கைகள்

தமிழ்ச்சமூகத்தை பிளவுப்படுத்தும் ஆதிக்க சாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வலியுறுத்தல்

தமிழ்ச்சமூகத்தை பிளவுப்படுத்தும் ஆதிக்க சாதி அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் க.பாரதி, மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த கவின் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கவின் நெல்லை கே.டி.சி நகர் சித்த மருத்துவமனைக்கு தனது உறவினருடன் வந்துள்ளார். இதனை அறிந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித் அவரது நண்பருடன் சேர்ந்து கவின்குமாரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர்கள் உட்பட மூவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்த ஆணவப்படுகொலையை செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் சாதிய மனநிலை தொடர்ந்து அதிகரித்து அதனால் தொடர்ஆணவக்கொலைகள் நடைபெற்றுவருவது, அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் கண்ணகி – முருகேசன் தொடங்கி, கவின் வரை சாதியை மையப்படுத்தி இச்சமூகம் தருகிற அழுத்தம் காரணமாக அரங்கேறிவரும் படுகொலைகள் ஏராளம். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வந்திருந்தால் இக்கொலைகள் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்.

சமூகத்தில் ஏற்பட்டு வரும் கல்வி மற்றும் முதலாளிய பொருளாதார வளர்ச்சிகள் அறிவியல் சிந்தனைகளை வளர்ந்து வருவது இயல்புதான். முற்போக்கு மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளும், செயல்பாடுகளும் சமூகத்தை பண்படுத்தி வருவதும் மெய்யானதுதான். ஆனால், இதற்கெல்லாம் சவால் விடுத்து சாதிய வர்ணாசிரம சிந்தனைகள் தமிழ் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுவதும், அதன் விளைவாக சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

குறிப்பாக சாதிய வர்ணாசிரம நிறுவனங்களின் மீது சாதி மறுப்பு திருமணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல், தண்டம் விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொருளாதாரத் தடை விதித்தல், சொத்துக்கள் மீதான உரிமையை மறுத்தல் போன்ற கொடுங்குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன.

பெற்றோர்களும், உறவினர்களுமே இங்கே குற்றம் செய்கிற எதிரிகளாக இருக்கிறார்கள். சட்டவிரோதக் குற்றங்கள் உறவினராலும், கூட்டாகவும் நடைபெறுவதால் நீதிக்கான போராட்டம் கடுமையாகிறது.

இருபத்தியோராம்  நூற்றாண்டில், செயற்கை நுண்ணறிவு ஆளும் காலத்தில், சாதி நச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உள்ளங்களை இருண்ட காலத்திற்கு இழுத்துச் செல்கிறது? சொந்த சாதியில் திருமணம் செய்து அடி உதை வாங்கி நீதிமன்றங்களில் ஜீவனாம்சம் கேட்டு அலைந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு உதவாத ஜாதி, சிறந்த கல்வி, வேலை, வருமானம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் என அனைத்தும் கொண்ட ஒரு இளைஞனை, அவன் நன்கு அறிந்த ஒரு பெண் மீது காதல் கொண்ட காரணத்திற்காகக்  கொலை செய்வது எந்த வகையில் கொலைகாரனின் ஜாதிக்குப் பெருமை சேர்க்கும்?

மருத்துவம் படித்து சொந்த வருமானத்துடன் பணியாற்றும் ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைத் தேர்ந்தெடுக்க உரிமையில்லை என்பது சாதியின் கொடூர முகம்.

மொழி, இனம், பழம்பெருமை எல்லாம் பேசுபவர்கள், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்பதே நம் பழமை என்பதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இளைஞர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.நமது தமிழ்ச்சமூகம் சாதிப்பெருமை பேசும் அமைப்புகளால் பிளவுப்பட்டு நிற்கிறது.

சாதிப்பெருமை பேசும் அமைப்புகள் சாதிய கட்டமைப்பை தக்கவைக்க தங்கள் சாதியில் உள்ளவர்களுக்கு சாதிவெறியை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். ஆகவே, சாதி ஆணவப் படுகொலையை தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும். சாதிப்பெருமை பேசும் ஆதிக்க சாதி அமைப்புகளை தடைசெய்யவேண்டும்.

சாதியை ஒழிக்கப் போராடிய பல்வேறு சமூகங்களின் தலைவர்களின் வரலாறுகளைப் பாட நூல்களில் சேர்க்க வேண்டும்.

தூத்துக்குடி கவின் ஆணவக்கொலைக்கு பிண்ணனியாக இருந்த சுர்ஜித் பெற்றோர்கள் உள்ளிட்ட  அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button