
தமிழையும் சைவத்தையும் போற்றுவதற்காகத் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், தருமபுரம் மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் காசி மடம், மயிலம் பொம்மபுர மடம், மதுரை மடம், குன்றக்குடி மடம், பேரூர் மடம், கோவை சிரவை கவுமார மடம் போன்றன செல்வாக்கிலும் உடைமையிலும் குறித்துச் சொல்லத்தக்கன. பல நூற்றாண்டுகளாக இவற்றில் சில இயங்கி வருகின்றன.
சைவப் பரப்பு, சைவக் கல்வி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் காப்பு போன்ற கடமைகளை அவை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த மடங்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இல்ல மனைகளும் உரிமைகளாக இருக்கின்றன. இதனால், பல பெரும் கோயில்களைப் போன்று, இந்த மடங்களும் நில உடைமை நிறுவனங்களாகவே மேலோங்கியுள்ளன.
சைவப் புலவர்களைப் பேணுதல், இலக்கிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாதல், தமிழ் ஓலைச் சுவடி இலக்கியங்களைக் காத்தல் போன்ற பல பணிகள் மடங்கள் வழியாகவே நடைபெற்றுவந்தன.
பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கவில்லை
கடந்த நூற்றாண்டில், புலவர் கல்லூரிகளைத் தொடங்கி ஆயிரக்கணக்கான தமிழறிஞர்களை உருவாக்கும் பணியினையும் இந்தச் சைவத் திருமடங்கள் மேற்கொண்டன. இத்தகைய பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிட்டுவிடவில்லை.
ஆயினும், பல நூற்றாண்டுகளாக சைவக் கல்வி, தமிழ்க் கல்வி போன்றன நில உடைமையாளர் சார்ந்து மட்டுமே இருந்தன என்பதும் உண்மைதான்.
வெளிநாட்டார் வரவு, அச்சு ஊடகங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறைப்பட்டபோது, புலவர் கல்லூரிகளைத் தொடங்கிய மடங்கள், தமிழ் மக்களுக்கான பொதுப் பள்ளி, கல்லூரிகளைத் தங்களது செல்வாக்குக்கேற்றவாறு தொடங்கவில்லை.
கிருத்துவ அமைப்புகள் பொது மக்களுக்கான பள்ளி, கல்லூரிகள், மருத்துவ மனைகள் என்று பேரளவில் தொடங்கி நடத்தியபோதிலும், இவற்றுக்கு மேலாக இல்லாவிட்டாலும், இணையாகக்கூடத் தங்களது பணிகளைச் சைவ மடங்கள் விரிவுபடுத்திக்கொள்ளவில்லை.
இதே காலப்பகுதியில், ஈழத்தில் கிருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றாக, ‘இந்துக் கல்லூரி’கள் பெருமளவில் தொடங்கப்பட்டதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சைவ நூல்களையும் வெளியிடவில்லை
அச்சு நுட்ப வளர்ச்சியினையடுத்து, சைவத் திருமுறைகளையும் பிற சார்பு நூல்களையும் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் ஓலைச்சுவடிகளில் காத்து வந்த மடங்கள், அவற்றை அச்சிட்டுப் பரப்பும் பணியினைத் தொடங்கவில்லை.
பெரிய புராணப் பாடல்களைத் தனி நூலாகவும் அதன் உரைநடையைத் தனியாகவும் திருப்பனந்தாள் மடம் வெளியிட்டது.
இதைப் போன்று, பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோரது உரைகள் உள்ளடங்கிய ‘திருக்குறள் உரைக்கொத்து’ மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. குறள்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அவற்றில் அடங்கியிருந்தன. திருப்பனந்தாள் மடம்தான் இந்த நூல்களையும் வெளியிட்டது.
இவையன்றி, சில மடங்கள் வேறு பல நூல்களையும் வெளியிட்டுள்ளன.
ஆயினும், சைவ நாயன்மார்களின் திருமுறைகளைக்கூடப் பாடல்களாகவும் உரிய பொருள்களுடனும் குறைந்த விலையில் வெளியிடும் முயற்சிகளைச் சைவ மடங்கள் மேற்கொள்ளவில்லை.
அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என நூற்றுக்கணக்கில் பட்டியலே தருகிறார். அவற்றையெல்லாம் போற்றிக் காத்துச் சைவ மடங்கள் பெருமை சேர்த்துக்கொள்ளவில்லை.
சைவத் தத்துவம் தொடர்பான கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடத்துவதிலும் ஆர்வம் கொள்ளவில்லை.
தமிழ் வழிபாட்டினைப் போற்றவில்லை
தருமபுரம் மடத்தின் கட்டுப்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல் பெற்ற கோவில்கள் இருந்தன. இதுபோன்று பிற சைவ மடங்களின் பொறுப்பிலும் பல்வேறு கோயில்கள் இருந்துள்ளன. இந்து அறநிலையத் துறையின் கீழ் இந்தக் கோயில்கள் முழுமையாக வருவதற்கு முன்னர் மடங்களின் பங்களிப்புப் பல நூற்றாண்டுகளாகப் பெரிதும் இருந்துவந்துள்ளது.
ஆயினும், உடைமையாளரான ஒரு சில இனத்தவரே இந்தக் கோயில்களுக்குள் நுழைய முடியும் என்பதை மாற்றச் சைவ மடங்கள் முயற்சிகளை எடுக்கவில்லை.
வரலாற்றின் ஒரு கட்டத்தில், பாடல் பெற்ற கோயில்களில் தமிழ் வழிபாடு முழுமையாக மறைந்து, சமக்கிருதம் பாடும் ஆரிய வழிபாட்டு முறைகள் புகுத்தப்பட்டபோது, அதைச் சைவ மடங்கள் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.
கோயில்கள் அல்லது மடங்களுக்கு உரிமையாக இருந்த நிலங்களில் உற்பத்தியினைச் செய்யும் உழைக்கும் மக்களையும் குடியிருப்போரையும் துன்புறுத்துவதில் சைவ மடங்கள் நில உடைமையாளர் போலவே நடந்துகொள்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி, அண்மைக் காலங்களில் பெரும் செல்வம் கொண்டிருக்கும் இந்த மடங்கள், தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்யவில்லையோ என்ற அய்யம் தோன்றியிருக்கிறது.
சனாதனச் சரிவில் சைவ மடங்கள்
அத்துடன், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ச் சைவ மடங்கள் சனாதனச் சரிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனவா என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
2023இல் புது நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டபோது, அந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து 20 சைவ மடத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து தோல்விகளையே கண்டுவரும் பா.ச.க., இந்த நிகழ்வினையடுத்து, தமிழ்நாட்டுச் சைவ மடங்களைத் தம்பால் இழுக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது. தமிழ்ச் சைவ மடங்கள் தற்போது, ராட்ரிய சேவா சங்கம், பா.ச.க. ஆகியவற்றின் வலையில் விழுந்துவிட்டதாகவே தெரிகிறது.
கொங்கு மாவட்டங்களில் நடைபெறும் மண விழாக்கள் பெரிதும் பார்ப்பனர் பங்களிப்பின்றியே நெடுங்காலமாக நடந்துவருகின்றன. செல்வம் படைத்த ஓரிருவர் தங்களது மண விழாவிற்குப் பார்ப்பனரை அழைக்கும் நடைமுறை தொடங்கியபோது, பார்ப்பனர் பங்கேற்பினைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கில், தமிழ் வழி மணம் என்ற இயக்கத்தைத் தொடங்கியவர் பேரூர் மடத்தின் தலைவராக இருந்த தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள்.
அனைத்துக்கும் மேலாக, கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளைத் தமிழில் நடத்தவேண்டும் என்ற போராட்டத்துக்கு முன்னின்று தலைமையேற்றவர் அடிகளார். தானே பல கோயில்களுக்குத் தமிழில் குடமுழுக்கினை நடத்தித்தந்தவரும் அவர்தான்.
அவருடைய நூற்றாண்டு விழா கடந்த சூன் 23இல் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக ஆர்.எசு.எசு. தலைவர் மோகன் பகத்தை அழைக்கும் முரண் அரங்கேறியது. மேலும், அந்த நிகழ்வோடு ஆர்.எசு.எசு. இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும் இணைந்துகொண்டது.
அதற்கு முன்னர் 2025 மே 3, 4, 5 ஆகிய நாள்களில் நடைபெற்ற சைவத் தத்துவ மாநாட்டில் பா.ச.க.வின் தேசியத் தலைவர் நட்டா, தமிழக ஆளுநர் ரவி ஆகியோருடன் பல்வேறு சைவ மடத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் மதுரை மடத் தலைவர் இரு பிரிவினருக்குமிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய வெறுப்புக் கருத்துக்கள் பேசுபொருளாக மாறின. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது பா.ச.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பச்சமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தருமபுரம் மடத்தின் 27ஆவது தலைவர் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் மணிவிழா நிகழ்வுகள் ஒன்பது நாட்களுக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.
இதில் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி, “சநாதன தர்மம் என்பது பாரதத்தின் ஆன்மா. அது முழு பாரதத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது……….’மக்கள் சேவையே மகேசன் சேவை.’ இதுவே நம் சநாதன தர்மம் சொல்லும் மையக் கருத்து…….சநாதன தர்மம் எல்லோரையும் இணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது” (தினமணி 03-11-2025) என்று பேசியிருப்பது அனைவரையும் வியப்பில் மட்டுமல்ல, அதிர்விலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தமிழ்ச் சைவத்தை ஆரிய சனாதனம் முழுமையாக உள்வாங்கிக் கொண்டுவருகிறது என்பதை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழர் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மடங்கள்
தமிழர்களின் எதிர்பார்ப்புகளான தமிழில் மணம், தமிழில் வழிபாடு, தமிழில் குடமுழுக்கு, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு ஆகிய அனைத்துக்கும் பகையாக இருக்கும் சனாதனத்தோடு சைவ மடங்கள் காணும் இணக்கம் என்ன என்பது புரியவில்லை.
தமிழ்ப் பண்பாட்டையும் பழமையையும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றிய அமைச்சர்கள், பா.ச.க. மற்றும் ஆர்.எசு.எசு. தலைவர்கள், ஆளுநர் ரவி ஆகியோரை அழைப்பதில் கிடைக்கும் பயன் என்ன என்பதும் தெரியவில்லை.
இந்த சைவ மடங்களின் இருப்பையே ஒப்பாமல் இருக்கும் ஆரியச் சனாதனத்தோடு கைகோர்ப்பதன் நோக்கத்தையும் அறியமுடியவில்லை.
தமிழ்நாட்டின் சைவ, வைணவ மடங்களுக்கு அவர்கள் சார்ந்த உடைமைப் பிரிவினரிடம் மதிப்பு இருக்கலாம். ஆனால், மக்களிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற ஆளுமை இருக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது.
மனிதர் தூக்கும் பல்லக்கில் ஊர்வலம் செல்லும் தருமபுரம், மதுரை போன்ற மடத் தலைவர்களுக்கு எதிர்ப்புத்தான் தொடர்கிறது.
சைவ மடங்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவந்தாலும், சமூக நீதி வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் வாக்கு அரசியலுக்கு அது உதவப்போவதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் யாவும் நில உடைமைச் சாதியினரால் மட்டுமே நிறுவப்பட்டு, நடத்தப்படுகின்றன.
தருமபுரம் போன்ற மடங்களுக்குக் கார்காத்த வேளாளர் இனத்தவர் மட்டுமே தலைவர் பொறுப்பேற்க முடியும்.
பேரூர், சிரவை கவுமார மடங்கள் கொங்கு வேளாளர் இனத்துக்கு மட்டும் என்ற ‘இட ஒதுக்கீடு’ உள்ளது.
அந்தந்த இனங்களிலுள்ள உடைமைப் பிரிவினரின் நலன்களைக் காக்கும் நோக்கங்கள் மடத் தலைவர்களின் செயல்களில் வெளிப்படுகின்றனவா என்பது வினாவாக எழுகிறது.
இந்த உடைமைக் காப்பிலும், தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக இதுவரை மடங்கள் செயல்பட்டதில்லை.
இப்போது என்ன வந்தது?
தமிழ், தமிழர் பண்பாடு ஆகியவற்றை மறுத்து, சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பதால் ஏதாவது கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.