
போர்க்குணமிக்க தோழர்களே!
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது.
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் எனப் பலரும் சுற்றுலா தளங்களுக்குச் சென்று சில நாட்கள் ஓய்வெடுப்பதும், சுற்றிப் பார்ப்பதும், அதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதுதான்.
மிக அழகான மாநிலம் காஷ்மீர். அம்மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதி சிறந்ததொரு சுற்றுலா தலமாகும்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு செல்வது, சுற்றிப் பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான்.
அவ்வாறே சென்ற பொதுமக்கள் மீது, வன்முறைக் கூட்டம் ஒன்று மிருகத்தனமான தாக்குதலை, கோழைத்தனமான முறையில் அரங்கேற்றி உள்ளனர்.
மனித குலம் நாகரிகத்தின் உச்சத்திற்குச் சென்று கொண்டுள்ள நிலையில், மிக அநாகரிகமான நிலையில், கீழ்த்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர்.
அவர்கள் நடத்திய தாக்குதல் அப்பாவி மக்கள் மீது, யார் மீதும் பழி சுமத்தாத மக்கள், தங்களின் ஓய்வுக்காக, தங்களின் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக, தங்களின் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக சுற்றுலா வந்தார்கள்.
இவர்களின் சுற்றுப் பயணம் யாருக்கும் எதிரானது அல்ல, எவர் மீதும் பழி போட அல்ல, யாரையும் துன்புறுத்த அல்ல, அப்பாவிகள், எதுவும் அறியாப் பச்சிளம் குழந்தைகளோடு சுற்றுலா வந்தவர்கள்.
இவர்களின் மீது நடந்திட்ட வெறித்தனமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலர் படுகாயமுற்றுள்ளனர். இவர்களின் மீது ஏன் தாக்குதல் நடத்திட வேண்டும்? அப்பாவி மக்களைக் கொல்வதால், அவர்களின் ரத்தத்தைக் குடிப்பதால் தீவிரவாதிகளுக்கு என்ன பயன்?
கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள் எனத் துயரம் நாட்டையே அதிரச் செய்துள்ளது.
நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் மதம், சாதி, அரசியல், கடவுள் என அனைத்தையும் மறந்து, ஒட்டுமொத்த மக்கள் அனைவரும் பலியான சகோதர, சகோதரிகளுக்கு நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அனைத்து மக்களும் ஒன்றுபட்டு வன்முறைக்கு எதிராக, தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் மிக, மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
நாட்டின் எல்லைப் பகுதியில், குறிப்பாக காஷ்மீர் பகுதியில், எந்த நேரத்திலும் தீவிரவாதக் குழுக்களால் தாக்குதல் நடைபெறக் கூடும் என்கிற ஐயப்பாடு தொடர்ந்து உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது.
இப்படிப்பட்ட சூழலில் ஒன்றிய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் கவனமுடன் இருக்க வேண்டாமா? என்கிற நியாயமான கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது என்பதனை புறந்தள்ளிவிட முடியாது.
கவனக்குறைவும், அலட்சியப் போக்கும் அல்லது தன்னை மிஞ்சுபவர் எவரும் இல்லை என்கின்ற தலைச்செறுக்கும் நிலவிய நிலையில், இன்று நம் நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது என்பதைப் புறந்தள்ளிவிடலாகாது.
லஸ்கர்- இ -தொய்பா ஆதரவு அமைப்பான டி.ஆர்.எப் என்கிற தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்குக் காரணமான நபர்கள், அவர்களின் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் கண்டறியப்பட வேண்டும். கைது செய்யப்பட வேண்டும். மிகக் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முனைப்போடு மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும்.
தாக்குதலை நடத்தியவர்கள் கண்டறியப்படுவதும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குறிக்கோளுடன் செயல்படுவதைக் கைவிட்டுவிட்டு, இதனை தங்களுக்குரிய அரசியல் ஆதாயம் தேடும் அற்பத்தனமான செயலில் பாஜகவினர் ஈடுபட்டு வருவது மிகுந்த கவலைக்குரியது.
நாட்டு மக்களின் அப்பழுக்கற்ற தேசபக்தியை, தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவது, நாட்டு மக்களின் தேசபக்தியை அவமதிக்கும் செயலாகும் என்பதனை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் என்ன மதம் எனக் கேட்டு, இந்துக்களைப் பார்த்து குறி வைத்துச் சுட்டனர் என்று பரப்புரையை மேற்கொள்வது அநாகரிகமானது.
சுற்றுலாப் பயணிகளைக் குதிரையில் ஏற்றிச் சவாரி செய்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்பத் தொகையைக் கொண்டு குடும்பம் நடத்தும் ஒரு இஸ்லாமியர், தீவிரவாதி துப்பாக்கியால் சுடுவதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், அவனோடு சண்டையிட்டு, துப்பாக்கியைப் பறிக்க முயன்ற போது, அந்த இஸ்லாமியத் தொழிலாளி, தீவிரவாதியால் சுடப்பட்டு இறந்து போனார் என்கிற செய்தியும் பார்க்கத் தவறக் கூடாது.
ஒன்றிய அரசு சில அவசரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக,
- சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
- பாகிஸ்தான் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
- இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானிர்களும் 48 மணி நேரத்தில், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
- எல்லையில் இந்திய ராணுவத்தைக் குவித்தது.
இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசு, இந்தியா- பாகிஸ்தான் ஒப்பந்தமான (1971) சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும், 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்தினரும் துப்பாக்கித் தோட்டாக்களை வெடிக்கும் சப்தம் கேட்பது கவலைக்குரியது.
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் வருமோ! என்கிற அச்சம் எழுந்துள்ளது.
போரைத் துவங்குவது மிக எளிது. நொடிப் பொழுதில் போரைத் தொடங்கி விடலாம். தொடங்குவது பாகிஸ்தானா? அல்லது இந்தியாவா? எந்த நாடு வேண்டுமானாலும் தொடங்கலாம்.
அவ்வாறு போர் தொடங்கப்பட்டால், அது எப்போது நிற்கும். அதனை எவராலும் தீர்மானிக்க முடியாது!
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டைக் கடந்து விட்டது. இன்னும் முடியவில்லை.
இஸ்ரேல், பாலஸ்தீனம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் முடியவில்லை.
போர்களை முடிவிற்குக் கொண்டு வருவதில், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஒருபோதும் விரும்புவதில்லை. இரு பக்கமும் கூர் தீட்டி, போரை மேலும் மேலும் தீவிரப்படுத்தவே விரும்புகின்றன.
உலகின் எங்கேனும் ஒரு பக்கத்தில் போர் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் ஆயுதத் தளவாடங்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்துத் தங்கள் செல்வத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதில் ஏகாதிபத்திய நாடுகள் உறுதியாக உள்ளன.
இந்தியா ராணுவ பலத்திலும், ஆயுத பலத்திலும் மிக பலமாக உள்ளது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்.
அதே போன்றுதான் பாகிஸ்தானும் வலிமையாக உள்ளது என்பதை நாம் குறைத்து மதிப்பிடலாகாது.
இரு நாடுகளுமே அணு ஆயுத வலிமை பெற்ற நாடுகளாகும் என்பதனை உலகறியும்!
போரற்ற உலகம் வேண்டும். அதுவே உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் விருப்பமாகும்!
தீவிரவாதம் எத்திசையில் இருந்து, யாரால் வந்தாலும், அதனை ஒருபோதும் அனுமதியோம்!
தீவிரவாதத்தைக் காரணம் காட்டி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துவதையும் அனுமதியோம்.
மீண்டும் சந்திப்போம்,
வணக்கம்,