
“இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக ஊடுருவி உள்ளே நுழைந்த முஸ்லிம்களால்தான் இந்த உயர்வு” என்று வாய்கூசாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 10ஆம் தேதியன்று பேசியிருக்கிறார்.
இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?
இந்திய மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 97 கோடி (79%) முஸ்லிம்களின் எண்ணிக்கை 17 கோடி (15%). கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் விகிதம் 0.8% கூடியிருக்கிறது. இது வேறு நாடுகளில் இருந்து வந்த ஊடுருவலாலா? நிச்சயமாக இல்லை.
தென்மாநிலங்களை விட, வட மாநிலங்களில் அனைத்து மதங்களையும் சார்ந்தவர்களின் மக்கள் தொகை அதிகரித்துச் செல்வதற்குக் காரணம் இருக்கிறது.
எங்கு கல்வியறிவும், வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் குறைவாக இருக்கிறதோ, அங்கு மக்கள் தொகை அதிகரிக்கிறது.
இந்தியாவில் உயர்சாதி இந்துக்களில் 37%ம், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் 25%ம், பட்டியலின மக்களில் 18%ம் பட்டதாரிகளாக உள்ளார்கள். ஆனால் முஸ்லீம் பட்டதாரிகளின் சதவீதம் வெறும் 14% தான்.
மாத ஊதியம் பெறுபவர்களிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் சுய வேலை செய்து குறைந்த தொகை சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் 1980ல் 49 பேர் 9% எம்பி களாக இருந்தனர். இன்று வெறும் 24 பேர் 4.4% மட்டுமே உள்ளனர். நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான பாஜகவில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்.பி ஆக இல்லை.
மதவெறி கொண்ட இந்துத்துவாவை மட்டுமே தனது ஆதாரமாகக் கொண்ட பாஜக கட்சி, இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பு அரசியலையே மையமாக வைத்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் தளங்களில் முஸ்லிம்களின் இடம் குறைக்கப்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள் அனைவரும் தேச விரோதிகள் என்ற அப்பட்டமான பொய்யை பாஜக நீண்ட காலமாகப் பரப்புரை செய்து வருகிறது.
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, குடியுரிமைக்கான தேசியப் பதிவேட்டை பாஜக அரசு கொண்டு வந்து, இந்தியக் குடியுரிமையை மதம் சார்ந்ததாக மாற்றியமைத்தது.
இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு உறுதிப்படுத்துகிற சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு நேர்எதிரான செயல் இது.
இப்போது முஸ்லிம்களை அகற்ற 3டி முறைமையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது கண்டுபிடி, நீக்கு, நாடு கடத்து (Deduct, Delete, Deport).
‘கண்டறிவது’ என்றால், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம், 1971 மார்ச் 24க்கு (அல்லது அரசு நிச்சயிக்கும் தேதிக்கு) முன்பாக தமது மூதாதையர்கள் இங்கு குடியிருந்ததைப் பழைய நிலப் பத்திரங்கள், முன்னோரின் பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளிச் சான்றிதழ்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். இல்லை எனில் அவர்கள் இந்தியக் குடிமக்களாக மாட்டார்கள்.
‘நீக்குதல்’ என்றால், கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விடுதல். அவர்களுக்கு வாக்குரிமை, அரசு வேலை வாய்ப்பு, அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் கிடையாது.
‘நாடு கடத்து’ என்றால், முதலில் அவர்கள் ‘நாடற்றவர்கள்’ என அறிவிப்பார்கள். வம்சாவளியாக இந்தியாவில் குடியிருப்பவர்களை எந்த நாடு ஏற்கும்? எனவே அவர்களுக்கு என்று தனியான தண்டனை முகாம்கள் கட்டி கடைசி மூச்சு வரை அங்கேயே வாடி சாகவிடுதல்.
இது ஏதோ வேடிக்கைக் கதை அல்ல. அசாமில் இவ்வாறு 19 லட்சம் பேர் ‘கண்டறியப்’பட்டுள்ளனர். அவர்களை அடைத்து வைக்க கோல்பாரா, சில்ச்சார் ஆகிய இடங்களில் முகாம்கள் கட்டப்பட்டுள்ளன.
தேர்தல் நடக்கவிருக்கும் பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை ‘தீவிர வாக்காளர் திருத்தம்’ என்கிறது தேர்தல் ஆணையம்.
வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை சான்றுகளாக ஏற்கவும் மறுக்கிறது.
இதையடுத்து ‘வாக்குத் திருட்டு’ எதிர்ப்பு இயக்கம் இந்தியாவில் வேகம் பெற்று இருக்கிறது.
இதனைச் சமாளிக்க, ‘ஊடுருவல் செய்த அந்நியர்கள்’ என்று சட்டபூர்வமாகவே வெளியேற்றும் ஆர்எஸ்எஸ் பிஜேபியின் சதிச்செயலையே அமித்ஷா அறிவித்திருக்கிறார்.
வாக்குத்திருட்டு இயக்கத்தை காங்கிரஸ் பெட்டிக்குள் வைத்துப் பூட்டவிடாமல், நாடு முழுவதும் தீவிரமாக நடத்துவதற்கான தருணம் இது.