டிச. 21, 22 மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு, நிதி திரட்டல்
மாநிலச் செயலாளர் கடிதம்

தோழர்களே வணக்கம்!
உங்களது அனைவரின் கரங்களிலும் நமது கட்சியின் சண்டிகர் பேராயத்தின் அரசியல்தீர்மானம் அமைப்பு நிலை அறிக்கைகளின் தமிழாக்கமும் நமது சேலம் மாநில மாநாட்டுத் தீர்மானங்களும் வந்து சேர்ந்திருக்கும்.
ஏராளமான இயக்கப் பணிகள் தொடர்கின்றன. அதேபோன்று நாம் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சவால்கள் நிறைந்த காலச் சூழலில் வாழ்ந்து வருகிறோம்.
உலக ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்காவும் அதன் மேலாதிக்கமும் உலகம் முழுவதும் இன்னும் தொடர்கிறது.
அதிபர் டிரம்ப் கருப்பின மக்களைப் பார்த்து எதற்கும் தகுதியற்ற, குப்பைகள் என்று சொல்லி இருக்கிறார், அத்துடன் அவர்களை கப்பல் கொள்ளையர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
சோமாலியாவை அடக்கி, ஒடுக்கி அதன் வளங்களை சுரண்டியவர்கள் யார்? என்பது குறித்து அதிபர் டிரம்ப் எளிதில் கடந்து சென்றுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தின், தென் ஆப்பிரிக்காவின் வளங்களை சுரண்டியவர்கள்தான் ஐரோப்பியர்கள், அவர்களின் நண்பர்தான் அமெரிக்கா அதன் வளங்களை திருடிச் சென்றவர்கள் அவர்கள்தான்!
பிடல் காஸ்ட்ரோ சொன்னது போன்று அந்த வளங்கள் அனைத்தையும் அவர்களிடம் திருப்பித் தர வேண்டும். அவ்வாறு திருப்பித் தந்தாலே ஆப்பிரிக்கா தழைத்து விடும். இந்தியாவில் ஆளும் மோடியின் பாஜக ஒன்றிய அரசு முற்றிலுமாக தோற்றுவிட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ந்துவிட்டது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது விவசாயிகளின், நிலம் ஏதுமற்ற ஏழைகளின், கோரிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
வாழ்வுக்காக நாடு விட்டு நாடு மக்கள் புலம்பெயர்கிறார்கள்.
வட மாநிலங்களில் மத ரீதியான பதற்றங்கள் நிலவுகின்றன. கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டை ஜவஹர்லால் நேருதான் பிரித்தார், இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று மீண்டும் ஒரு வரலாற்றுப் பொய்யை நாட்டின் பிரதமரே சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய, பாகிஸ்தான் பிரிவினை என்பது வந்தே மாதரத்தின் இரண்டு பாடல் வரிகளால் நிகழ்ந்தது அல்ல.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினை என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் எழுந்தது, சிறுபான்மை மக்களால் இனியும் வாழ முடியாது என்கிற சமூகச் சூழலை ஏற்படுத்தினார்கள். அதை உருவாக்கியவர்கள் இந்துத்துவ மத வெறியர்கள் ஆவர். ஜின்னா போன்றவர்கள் தேசபக்தர்களாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர், போராடியவர், அப்படி போராடியவர்கள். பின்னர் அவர்களே, ஒரு தனி நாடுதான் தங்களுக்கு தீர்வு, என்ற சூழலுக்கு இந்திய சமூக அமைப்பில் அவர்களைத் தள்ளியதை நாட்டின் பிரதமர் எளிதில் கடந்து சென்று விடுகிறார்.
சிறுபான்மை மக்களை தாஜா செய்தது, காங்கிரஸ் கட்சியால்தான் நாடு பிரிந்தது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டின், சங் பரிவாரங்களால் திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பதற்றத்தை ஒட்டிய வழக்கில், நீதிஅரசர் அளித்த தீர்ப்பு, சட்டத்திற்கு புறம்பானது மட்டும் அல்ல சட்டத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல்!
சட்டப்படியான நீதியாக அது அமையவில்லை, மாநில அரசின் உரிமைகளில் அவர் கடும் தாக்குதலை தொடுத்திருக்கிறார். நல்ல வேலையாக தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் எடுத்த, ஜனநாயக பூர்வமான, சட்ட ரீதியிலான அணுகுமுறைகள் அங்கே அமைதியை உருவாக்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மதுரை மக்களின் மத நல்லிணக்க கலாச்சாரமும், பண்பும் அங்கு அமைதியை உருவாக்கியுள்ளது. இஸ்லாமியர்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறோம் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது சட்டம் மட்டுமல்ல, பெரும்பான்மை இந்துக்களிடம் இருக்கும் நல்லிணக்க சகோதரத்துவம்தான், அவர்கள் சிறுபான்மை மக்களை அணைத்துக்கொள்கிற அந்த அனுசரிப்பும் ஒரு காரணம்.
இதை கெடுப்பதற்கு, உடைப்பதற்கு, சிதைப்பதற்கு சங் பரிவார, பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது.
ஆனால் அந்த முயற்சியில் அவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள்.
திமுக தலைமையிலான நம்முடைய கூட்டணி வலுவாக இருப்பது மட்டுமல்ல, தமிழக மக்களின் ஒற்றுமையையும், அனைவரும் சேர்ந்து வாழவேண்டும் என்ற நல்லியல்பும் காரணம் ஆகும்.
இந்த உயர்ந்த கலாச்சாரம் நமக்குதான் மிக ஆதரவாக இருக்கும் தோழர்களே! நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறுவோம்!
நமது கட்சி அணிகள் முழுவதும் ஜனசக்தி ஆண்டு சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். பல்வேறு இடங்களில் இது சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஈரோடு மாவட்டக் குழுவில் கலந்து கொள்கிறபோது 500க்கும் மேற்பட்ட சந்தாக்களை வழங்கினர். கிளைகள் அனைத்தும் இந்த பணியில் ஈடுபடுகின்றன. ஆயுள் சந்தா, ஆண்டு சந்தா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று காலண்டர், கட்சியின் நூற்றாண்டு சிறப்பு மலருக்கான வேலையும் நடைபெற்று வருகிறது.
வரும் டிசம்பர் 21, 22 தேதிகளில் மாநிலம் முழுவதும் மாநிலச் செயலாளர் தொடங்கி, கிளைச் செயலாளர்கள் வரை மக்களை சந்தித்து பொதுநிதி திரட்டிட கட்சி அறைகூவல் விட்டிருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகரங்கள், கிராமங்களில் வலைப் பின்னல் போன்று, கட்சிக் கிளைகள் உண்டு. தொழிலரங்கக் கிளைகள் உண்டு. விவசாய அரங்கத்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தில், கலை இலக்கிய அரங்கங்களில் கட்சிக் கிளைகள் உண்டு. தமிழ்நாடு முழுவதும் இருக்கிற இந்தக் கிளைகள் எல்லாம் ஒன்றிணைந்து பல்லாயிரக்கணக்கான தோழர்கள், மக்களை சந்தித்து – மக்கள் சந்திப்பு இயக்கமாக நிதி திரட்டும் இயக்கம் நடைபெற உள்ளது. இதனை வெற்றிகரமாக அனைவரும் முயற்சிப்போம்!
வரும் 19ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் விழா, சமத்துவப் பொங்கல் விழாவாக நடத்த இருக்கிறோம். உழவர் திருநாளில் புதுப்பானை, புத்தரிசி, கரும்பு, மஞ்சள் வாழை, மாவிலை தோரணங்களோடு, கட்சிக் கொடிகள் அசைந்தாட வேண்டும்! அந்த வகையில் தோழர்கள் திட்டமிட்டு, செயல்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
2026 பிப்ரவரி மாதம் சென்னையில், நமது கட்சியின் நூற்றாண்டு விழா மிக சீரும், சிறப்போடும் நடைபெறும்.
பிரமாண்டமான முறையில் நாம் அதை நடத்த வேண்டும்.
எனவே, நமக்கு மத்தியில் உள்ள பாசிச ஒன்றிய அரசால் ஏற்பட்டுள்ள சமூகப் பதற்றங்களை தணிப்பதுடன், அவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்கிற பெரிய கடமை நமக்கு இருக்கிறது. இதனை முழுமையாக நிறைவேற்றிட அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கி கடமையாற்ற தயாராவோம்!
தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்
