Uncategorizedஅறிக்கைகள்தமிழகம்

எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

எஸ்ஐஆர் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து, நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, 18.11.2025 அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புறக்கணிப்பு இயக்கத்தில் கிராம உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர்கள் வரை பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 29.10.2025 ஆம் தேதி தலைமைத் தேர்தல் அலுவலர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையம் போதுமான கால அவகாசமும், முன் ஏற்பாடுகளும், பயிற்சியும் இல்லாமல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது; வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்த பிறகு, சிறப்புத் தீவிர திருத்த முறை நடவடிக்கையை தொடங்கலாம் என்பதை பெரும்பாலான கட்சிகள், கலந்து கொண்ட 12 கட்சிகளில் 10 அரசியல் கட்சிகள் வலியுறுத்தின என்பதை நினைவூட்டுகிறோம்.

ஆனால், தேர்தல் ஆணையம் பிடிவாதமாக தனது நடவடிக்கையை தொடங்கியது. அது நடைமுறையில் நெருக்கடிகளை அதிகரித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை போராட்டக் களத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையை கைவிட்டு, வழக்கமான சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button