அறிக்கைகள்

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இயக்குநராக திகழ்ந்த வி.சேகர் (73) நேற்று (14.11.2025) மாலையில் போரூர் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெய்வாநத்தம் என்ற கிராமத்தில் பிறந்த வி.சேகர், திருவண்ணாமலையில் தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

மலேரியா ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த வி.சேகர், புகழ் பெற்ற எடிட்டிங் கலைஞர் பி.லெனின் மூலம் திரைத் துறையில் நுழைந்தார். இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக வளர்ந்து வந்தார்.

இடதுசாரி இயக்கங்களின் மீது ஈர்ப்பு கொண்ட வி.சேகர், தமிழ் தேசியக் கொள்கையின் செயல்பாட்டாளராக திகழ்ந்தார். இவரது இயக்கத்தில் 1988 – 2013 கால கட்டத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சமூகத்தின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மகனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button