அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

அரூர் தோழர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் கா.சி.தமிழ்குமரன் (58) 07.05.2025 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டு திருப்பூர் நகரில் உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள கே. வேட்ரம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட, விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் சிட்டு – காந்தி தம்பதியரின் மகனாக 08.05.1967 ஆம் தேதி பிறந்தவர் கா.சி.தமிழ்குமரன்.
பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை பெற்றவர். கல்லூரியில் பயிலும் காலத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்தவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றுள்ளார். எளிய மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வந்தவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அரூர் வட்டச் செயலாளர், தருமபுரி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு, தனி முத்திரை பதித்தவர்.
07.05.2025 அன்று திருப்பூர் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மதிய உணவு இடைவேளையின் போது திடீரென சரிந்து, சாய்ந்த கா.சி.தமிழ் குமரனை அருகில் இருந்த தோழர்கள் தாங்கி பிடித்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்ட துயரச் செய்தியை தெரிவித்தனர்.
கா.சி. தமிழ்குமரனின் வாழ்விணையர் திருமதி நவநீதம், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகனும், கவிநிலவு என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஸ்டாலின் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். மகள் கவிநிலவு உஸ்பெக்கிஸ்தானில் உயர்கல்வி பெற்று வருகிறார்.
அரூர் சுற்றுவட்டார மக்களின் நன்நம்பிக்கையை பெற்றவர். இளைஞரை ஈர்த்து, அணி திரட்டுவதில் தனி சிறப்புப் பெற்றவர். அதிர்ந்து பேசாத சுபாவம் கொண்டவர். தத்துவார்த்த அரசியல் தெளிவு பெற்றவர். வகுப்புவாத, மதவெறி, சாதி வெறி சக்திகளை எதிர்த்த போராட்டம் தீவிரமாகி வரும் சூழலில் தமிழ்குமரன் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மாநிலக் குழு உறுப்பினர் கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு மாநிலக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் முறையில் மாநிலக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தோழர். கா.சி.தமிழ்குமரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் நவநீதம் மற்றும் குழந்தைகள், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.