ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலக்கியப் படைப்புலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92), இன்று (22.11.2025) சென்னையில், வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றோம்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை பூர்வீகமாகக் கொண்டவர். செ.இரா.நடராசன் – வள்ளியம்மாள் தம்பதியரின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த ந. ஜெகதீசன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் புகழ் பெற்றார்.
சென்னிமலையில் பள்ளிக் கல்வியை முடித்து, கரந்தை தமிழ் கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் உயர் கல்வி பெற்றவர்.
மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் உதித்தெழுந்த பாரதிதாசன் பரம்பரையாக வளர்ந்து மரபுக் கவிதைகள் படைத்து வழங்கியவர். பின்னர், வானம்பாடி இயக்கத்தில் இணைந்து புதுக்கவிதைகள் புனைந்து வழங்கியவர்.
ஈரோடு மதரசா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தொடர்ந்து தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றிய தமிழன்பன், கவிதை, புதினம், நாடகம், பாடல்கள், திறானாய்வு மற்றும் வாழ்க்கை வரலாறு என ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். இவரது வணக்கம் வள்ளுவர் படைப்பு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறப்புக்குறியது.
இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளிலும், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பன்னாட்டு மொழிகளிலும் பரந்துபட்ட வாசகர் தளத்தை பெற்றுள்ளது.
கலைமாமணி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன், இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு, அறிவியல் தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் நெருங்கிய தோழமை உறவு கொண்டிருந்தார்.
இவர், ஷெல்லி, பாப்லோ நெரூதா ஆகியோரின் கவிதைகளை மேடைகளில் பொழியும் போது, உணர்ச்சி கொந்தளிக்க காட்சியளிப்பார். இவரது இரண்டு மகன்களில் ஒருவருக்கு பாப்லோ நெரூதா, மற்றவருக்கு பாரதிதாசன் என்று பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு தமிழன்பனின் மறைவு, படைப்பு இலக்கிய உலகில் எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், படைப்புலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
