பிரதமர் மோடி மலிவான அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பிரதமர் மோடி மலிவான அரசியலில் ஈடுபடுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பிரதமர் உண்மை பேசுவதில்லை என்று உறுதி பூண்டுள்ளார் என்பதை அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றது.
பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தை அமெரிக்க அதிபர் தலையிட்டு தடுத்ததாக கூறி வருவது குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறந்து பேசவில்லை. அங்கு எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் எப்படி நடந்தது? உள்துறை மற்றும் ராணுவத்தின் ஒற்றறிவுப் பிரிவில் என்ன நடந்தது? போன்ற விபரங்களை வெளியிடயில்லை.
நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்படுத்தும் அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு தாக்குதலுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை. வியாபார வியூகத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிரம்ப் மிரட்டுகிறார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைந்து வருகிறது. இதன் மூலம் விரைவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
நாட்டு மக்களிடம் உண்மையை நேர்மையாக கூறும் சக்தியற்ற பிரதமர் மோடி, பிகார் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் “தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் பிகார் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்” என்ற பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் மூட்டை அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.
முன்னர், நாடாளுமன்றத் தேர்தலின் போது பூரி ஜெகநாதர் ஆலயத்தில் காணாமல் போன பொருளுக்கு தமிழர்களே காரணம் என பழி சுமத்தினார் என்பதை தமிழ்நாடு எளிதில் மறக்காது.
பிகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை பிரதமர் அறியாமல் பேசுவது, அவர் வசித்து வரும் பிரதமர் பொறுப்புக்கு உகந்ததல்ல.
கொரோனா நோய்த்தொற்று அலை, அலையாக பரவிய காலத்திலும், அண்மையில் எண்ணூர் அனல் மின்நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர் விபத்துக்கு பலியான போதும் தமிழ்நாடு அரசும், இண்டியாக் கூட்டணிக் கட்சிகளும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உதவியதை பிரதமர் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நல்லிணக்க சூழல் நிலவி வருவதை கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் பிரதமர் பேசி வருவது சரியல்ல. தேர்தல் களத்தில் மிக மலிவான அரசியலில் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
