கட்டுரைகள்

தொடரும் துரோகம்

கிராமத்தான்

ஆர்.எஸ்.எஸ் அங்கமாகத் திகழ்கின்ற பா.ஜ.கவின் ஆட்சி தொடர்வது மட்டுமல்ல, துரோகங்களும் தொடரவே செய்கின்றன.

ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயமில்லை.

ஜனநாயக நாட்டில் எக்கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிப்பது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்பதும் மதிப்பதும் ஜனநாயகப் பண்பாகும். ஆர்.எஸ்.எஸ் அகராதியில் இத்தகைய ஜனநாயகப் பண்புக்கு இடமில்லை.

ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கொடி, ஒரே கட்சி, ஒரே தலைவன்.

ஹிட்லர் பின்பற்றிய பாசிசக் கொள்கையை தங்களது கொள்கையாக ஏற்றுச் செயல்பட்டு வருபவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் தாங்களே ஆள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

உலகம் என் கைக்குள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெறி பிடித்தவனாய், 6 கோடிப் போ¤ன் உயிரைப் பறித்த போருக்குக் காரணமானவனாய் இருந்தான் ஹிட்லர். அத்தகைய கெடு மதிகொண்ட ஹிட்லரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செயல்பட்டு வருபவர்தான் சாட்சாத் நரேந்திர மோடி.

ஒன்றியத்தில் ஆட்சி புரிவது கூட்டணி ஆட்சிதான் (என்.டி.ஏ) பா.ஜ.க தனித்து ஆட்சி நடத்த முடியாது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் தயவில் மோடியின் ஆட்சி நடைபெறுகின்றது.

கூட்டணி ஆட்சி என்றுதான் பெயர். ஆனால் முழு அதிகாரத்தையும் பா.ஜ.கவின் தலைவர்களான மோடி அமித்ஷா கூட்டணிதான் மேற்கொள்கிறது.

இவர்களின் இசைவுக்கு உட்பட்டவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது இவ்விருவர் மேற்கொள்ளும் ஜனநாயகம். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை உண்டு. அதனால்தான் இங்கே பல கட்சிகள். பொதுவான கொள்கை அடிப்படையில் கூட்டணி (தொகுதிப் பங்கீடு) அமைப்பது என்பது வேறு.

எக்கட்சி ஆனாலும் தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று ஒரு கட்சி மற்றொரு கட்சிக்குக் கட்டளை இட முடியாது. ஆனால் எனது கட்டளையை ஏற்க வேண்டும் என்று பா.ஜ.க ஆணையிடுகின்றது.

ஆணையை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றார்கள். கொள்கை ரீதியாக ஏற்க முடியாது என்றால் பழி வாங்குவேன், துரோகத்தைத் தொடர்வேன் என்று பிரகடனப்படுத்துகின்றது பா.ஜ.கவின் ஒன்றிய ஆட்சி.

தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானித்து தி.மு.க ஆளும் கட்சியாக உள்ளது. திமுகவின் கொள்கையும் பா.ஜ.கவின் கொள்கையும் எதிரெதிரானது.

பாஜக தனது கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் இன் நான்கு வர்ணக் கொள்கைகளை தி.மு.க ஏற்று தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த வேண்டும் என்று கட்டளை இடுகின்றது.

ஏற்க மறுத்தால் பழிவாங்குவேன், துரோகம் இழைப்பேன் என்று கூறுவது மட்டுமல்ல; தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தி வருகின்றது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எனக் கூறிக் கொள்வோர் இவைகள் பற்றி வாய் திறப்பது இல்லை. மௌனம் சாதிப்பது மட்டுமல்ல அவர்களின் துரோகத்தை நியாயப்படுத்தவும் செய்கின்றார்கள்.

பருவமழை, தென்மேற்குப் பருவமழையால் நமக்குப் பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது.

வடகிழக்குப் பருவமழைதான் தமிழ்நாட்டின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து நமக்கு நல்ல பலனளிக்கும். அதே நேரத்தில் சில நேரங்களில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தும். குறிப்பாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாத காலம் வடகிழக்குப் பருவமழை காலம்.

இக்காலத்தில் அதிக மழை பொழிவு ஏற்படுவது இதன் காரணமாகப் பல நேரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது போன்றவை நடப்பதுண்டு. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளும் செயற்கை இடர்பாடுகளும் உண்டு. இவ்விரு இடர்பாடுகளையும் எதிர்கொண்டுதான் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியை உழவர் பெருமக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வடகிழக்குப் பருவ மழையை நம்பித்தான் தமிழ்நாட்டின் வேளாண்மைத் தொழில் உள்ளது. குறிப்பாக மானாவாரி நிலங்களில் சாகுபடி என்பது இம்மழை பொழிவைக் கொண்டுதான்.

அதே நேரத்தில் காவிரிப் பாசன மாவட்டங்கள் (டெல்டா), வடகிழக்குப் பருவமழையால் நன்மை இடையூறு இரண்டையும் சந்திக்கின்றன. மழைப் பொழிவு சம்பா சாகுபடிக்கு மிகத் தேவை. குறுவை அறுவடைக்கு இடையூறு.

ஒரே நேரத்தில் நீண்டகால பயிரான சம்பா நெல் சாகுபடியும் குறுகிய கால குறுவை நெல் அறுவடையும் ஒருசேர வருகின்றது. இரண்டுக்கும் தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வழங்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமைப் பொறுப்பாகும்.

மாநில அரசு தனது கடமைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

விவசாயிகளுக்கு சாகுபடி காலத்திற்குத் தேவையான கடன் மற்றும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இவை அனைத்தும் ஒன்றிய அரசின் தயவு இல்லாமல் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு. கொள்முதல் செய்வது, எத்தனை டன் கொள்முதல் செய்வது, எவ்வளவு ஈரப்பதம் வரை கொள்முதல் செய்வது என அனைத்தையும் தீர்மானிக்கின்ற சர்வ வல்லமையும் அதிகாரமும் ஒன்றிய அரசிடம் பெரும் குவியலாய்க் குவிந்து கிடக்கின்றது.

இது ஏதோ மோடியின் ஆட்சியில் என்றல்ல; நாடு விடுதலை பெற்ற காலம் என்பதல்ல; விடுதலைக்கு முன்னர் அந்நியர் ஆட்சிக் காலம் தொட்டு தொடர்கதையாய்த் தொடர்கின்றது.

எப்போது விடியல்?

தொடர்ந்தாலும் அவ்வப்போது ஒன்றியத்தில் உள்ள ஆட்சியாளர்கள் விவசாயிகளின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப முடிவு எடுப்பார்கள்.

குறிப்பாக நெல் கொள்முதல் பிரச்சினை இவ்வாண்டு கடுமையான பிரச்சினையாக உருவானது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று லட்சம் ஹெக்டேர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

இவ்வாண்டு இரட்டிப்பாகி 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை காலத்தில் திறக்கப்பட்ட காரணத்தாலும், இயற்கை ஒத்துழைப்பாலும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆர்வத்தாலும், கடும் உழைப்பாலும் சாகுபடி பரப்பளவு அதிகரித்ததுடன், கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு நெல் விளைச்சலும் அதிகம்.

குறுவை அறுவடை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தனது தீவிரத்தைக் காட்டியது.

வயல்வெளிகளில் நெற்கதிர்களும் மற்றும் கொள்முதல் நிலையங்களிலும் நெல்மணிகள் குவிந்து கிடக்கின்றன. மழையில் நெல்மணிகள் நனைகின்றன. ஈரம் அதிகரிக்கின்றது.

டெல்லி எஜமான் 17 சதத்திற்கும் கீழ் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டும்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மீற முடியாது.

தொடர் மற்றும் கடும் மழையின் காரணமாக ஈரம் அதிகரித்த நிலையில் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

பல மாதங்கள் உழைத்து பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்மணிகளை விற்க முடியவில்லையே என்று விவசாயிகள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றார்கள்.

வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள். மாநில முதலமைச்சருக்கும், ஒன்றிய எஜமானர்களுக்கும் கடிதம் எழுதுகின்றார்.

குறுவை நெல் மழையின் காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது. 22 சதம் வரை அனுமதிக்க வேண்டும். ஆகவே உயர்மட்டக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று.

உயர்மட்டக் குழு அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பறந்து வந்தார்கள். அங்கே இங்கே எனச் சென்றார்கள். அவர்கள் செல்லும் இடம் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள் எல்லோரும் சென்றார்கள்.

நெல்லை அள்ளிப் பார்த்தார்கள். நெல்மணிகள் குவியல், குவியலாக உள்ளதையும் பார்த்தார்கள் அதிக ஈரமாக உள்ளதையும் பார்த்தார்கள் மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைப்பதையும் பார்த்தார்கள்.

வயல்களில் இறங்கிப் பார்த்தார்கள், நெல் கதிர்கள் வயல்வெளியில் தண்ணீரில் மிதப்பது மட்டுமல்ல, அவைகள் முளைத்துப் போய் இருப்பதையும் பார்த்தார்கள். எல்லாவற்றையும் பார்த்தார்கள் ஒன்று விடாமல் பார்த்தார்கள்.

டெல்லிக்குச் சென்றார்கள் எஜமானிடத்தில் அனுமதி பெற்று 22சதம் வரை ஈரப்பதம் இருக்கலாம் ஒன்று அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று அறிவிப்பு வரும் வரும் என விவசாயிகள் காத்திருந்தார்கள்.

காலமெல்லாம் காத்திருந்தும் கண்ட பலன் ஏதுமில்லை என்ற நிலை ஆகிவிட்டது.

டெல்லி எஜமானர் குழு வந்து சென்ற பல வாரங்களுக்குப் பின்னர் 17சதத்திலிருந்து மேலும் உயர்த்த முடியாது என்று கைவிரித்து விட்டனர்.

தி.மு.க என்ற அரசியல் கட்சியை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கின்றது, துரோகம் இழைக்கின்றது. தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு வழிகளிலும் துரோகம் இழைத்து வருகின்றது.

அத்துரோகத்தின் தொடர்ச்சிதான் தற்போது விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள துரோகச் செயலாகும். துரோகத்திற்குச் சிலர் துணை போகின்றார்கள்.

துரோகிகளுக்கும் துணை போகின்றவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் உரிய தண்டனையை உரிய நேரத்தில் வழங்குவார்கள்! அதற்குரிய காலம் தொலைவில் இல்லை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button