தமிழகம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து, தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பி.எம்.ஆர்.முத்து விழா மஹால் அரங்கத்தில் 19.11.2025 அன்று நடைபெற்றது.

நிர்வாகக் குழு கூட்டத்திற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் தி.ராமசாமி எக்ஸ் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயலாளர்கள் ஆனி ராஜா, ராமகிருஷ்ண பாண்டா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநிலத் துணைச்செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, புதுச்சேரி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து, தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்

இந்தியாவிலேயே மிக வேகமாக தமிழ்நாடு நகர்மயமாகி வருகிறது. போக்குவரத்து வசதிகளின் தேவை வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சாலைகளை விரிவாக்கி நவீனமயப் படுத்தினாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இது பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் கால விரையத்தையும் கூடுதலாக்குகிறது.

குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற மாநகரங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் திணறி வருகின்றன.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி கோவை, மதுரை பெரு மாநகரங்களில் முறையே ரூ.11,340 மற்றும் 10,740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்து, சட்டப் பேரவையின் ஒப்புதல் பெற்று, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கேட்பு அறிக்கையை பரிசீலித்த ஒன்றிய அரசு, சில திருத்தங்களை கோரியது. அதன்படி திருத்தங்கள் செய்து மீண்டும் 2024 நவம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒன்றிய அரசு 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, கோவை, மதுரை மாநகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 14 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து இருப்பது மட்டுமல்ல, மாநகராட்சிக்கு அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மாநகராட்சியின் பகுதிகளாக மாறி கோவை, மதுரை மாநகரங்கள் பெரிதும் விரிவடைந்து விட்டன.

இவற்றையெல்லாம் கவனத்திலேயே கொள்ளாமல், கடந்த 14 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டங்களை நிராகரித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் துரோகமிழைப்பதாகும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிகழ்கால வளர்ச்சியை கணக்கிலெடுத்து, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பிரதமரையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர் போராட்டங்களுக்கு ஆதரவு

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 13 பிரிவு பணியாளர்களும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 8ம் நாளன்று அரசின் தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்), மதுபானங்கள் விற்பனைப் பிரிவில் 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் நிரந்தரப்படுத்தி, கால முறை ஏற்ற ஊதியமும், ஓய்வூதியமும் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் டிசம்பர் 16ம் தேதியன்று தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேற்சொன்ன தொழிலாளர் போராட்டங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

பணியாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நியாயமானதும், சட்டரீதியானதுமான கோரிக்கைகளை ஆக்கப்பூர்வமாக அணுகி சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசை மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மாநிலக் குழுக் கூட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அடுத்த இதழில் வெளிவரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button